You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சர்ச்சைக்குள்ளாகும் ஆன்லைன் கல்வி நிறுவன செயல்பாடுகள் - கொதிக்கும் ஆர்வலர்கள்
- எழுதியவர், ஜோ. மகேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
ஆன்லைனில் கல்வி வழங்க தனியார் நிறுவனங்கள் வரம்பின்றி வசூலிக்கும் பெரும் கட்டணம் தொடர்பான விவகாரம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் எழுப்பிய பிறகு சர்ச்சையானது.
மக்களவையில் சமீபத்தில் பேசிய கார்த்தி, "ஆன்லைன் கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டத்தின் தரம் பற்றி யாருக்கும் தெரியாது. ஆனால், ஆன்லைன் பயிற்சி வகுப்புகளில் சேர மாணவர்களை நிர்பந்திக்கிறார்கள். இந்த நிறுவனங்களுக்கு அனுமதி கொடுப்பது யார்? இவர்கள் நடத்தும் பாட திட்டத்திற்கு அனுமதி கொடுப்பது எப்படி? என்னவிதமான வரையறை உள்ளது.? இவை எதுவும் தெரியவில்லை. ஒருமுறை இப்பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து விட்டாலே, மாதந்தோறும் தானாக பணம் பிடித்தம் செய்து கொள்கிறார்கள். இதனால் பெற்றோர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆன்லைன் கல்வி நிறுவனங்களின் நிதி விவரங்கள் குறித்து கண்காணிப்பது அவசியம்." என்று வலியுறுத்தியிருந்தார். அவர் இந்த விவகாரத்தை எழுப்ப என்ன காரணம்?
கொரோனா பரவல் காலத்தில் ஆன்லைன் வழி கல்வி தவிர்க்க முடியாத ஒன்றாகியுள்ளது. வகுப்பறையில் கற்பிக்கப்படும் நேரடி கல்வி முறைக்கு இது முழு மாற்றாக இல்லை. வகுப்பறைக்கு சென்றால்தான் கல்வி முழுமை பெறும் என்று கல்வியாளர்கள் சொல்கிறார்கள். இதற்கேற்ப மெல்ல, மெல்ல நேரடி வகுப்பை நோக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் வருகின்றன. கொரோனா பரவல் தடுப்பு உள்ளிட்ட தவிர்க்க முடியாத சூழலால், அரசே ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது ஒருபுறமிருக்க, தனியார் நிறுவனங்களும் ஆன்லைன் கல்விக்கான பாட வகுப்புகளை நடத்தி வருகின்றன. இவைதான் இப்போது பேசு பொருளாகி இருக்கின்றன.
மக்களவையில் டிசம்பர் 13ஆம் தேதி சிவகங்கை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசும்போது, "ஆன்லைன் கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டத்தின் தரம் பற்றியும் யாருக்கும் தெரியாது. ஆனால், ஆன்லைன் கோச்சிங் வகுப்புகளில் சேர மாணவர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள்," என்று கூறினார்.
"இந்த நிறுவனங்களுக்கு அனுமதி கொடுப்பது யார்? இவர்கள் நடத்தும் பாட திட்டத்திற்கு அனுமதி கொடுப்பது எப்படி? என்னவிதமான வரையறை உள்ளது.? இவை எதுவும் தெரியவில்லை.ஒருமுறை இப்பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து விட்டாலே, மாதந்தோறும் தானாக பணம் பிடித்தம் செய்துகொள்கிறார்கள். இதனால் பெற்றோர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆன்லைன் கல்வி நிறுவனங்களின் நிதி விபரங்கள் குறித்து கண்காணிப்பது அவசியம்," என்று கார்த்தி பேசினார்.
இந்த காணொளி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பெற்றோர் கருத்து
இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தகவல் தொழில் நுட்ப நிறுவன ஊழியரும் பெற்றோருமான பா.சத்தியநாராயணன், போட்டி நிறைந்த கல்வியில் தங்களுடைய பிள்ளைகளை தேர்ச்சி பெற வைக்கும் நிலைக்கு பணத்தை செலவிட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
"அரசின் கல்வி இணையதளங்களில் உள்ளவற்றைத்தான் தனியார் ஆன்லைன் கல்வி நிறுவனங்களும் நடத்துகின்றன. ஆனால், அரசு கல்வி இணைய தளங்களை விட, இந்த இணைய தளங்கள் பெற்றோரை நேரடியாக அணுகுகின்றன. குறிப்பாக வசதியான பெற்றோர்களை குறி வைக்கின்றனர். நீட் போன்ற தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு கூடுதல் கல்வியை அளிக்க வேண்டிய நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்படுகின்றனர். இதை இது தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவற்றை முறைப்படுத்த வேண்டிய மிக மிக அவசியம்," என்கிறார் சத்தியநாராயணன்.
கல்வியாளர்களின் விளக்கம்
முன்னாள் துணைவேந்தரும் கல்வியாளருமான வசந்தி தேவி, `இந்திய கிராமப்புறங்களில் உள்ள 8 % குழந்தைகளுக்கு மட்டுமே ஆன் லைன் கல்வி கிடைக்கிறது. தனியார் ஆன் லைன் கல்வி நிறுவனங்களில் வசதி படைத்த, பணக்காரர்களின் குழந்தைகள் மட்டுமே சேர முடியும். இதில், படித்தால் மட்டும்தான் நீட் உள்ளிட்ட தேர்வுகளிலும் தேர்ச்சி பெற முடியும். உயர் கல்வி நிறுவனங்களில் சேர முடியும் என்கிற பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர். ஆகையால் ஒரு தரப்பினர் இவற்றில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். பெரும்பாலன குழந்தைகளை புறக்கணித்துள்ளது. எனவெ இது அரசியல் சாசன விழுமியங்களுக்கு எதிரானது. ஆன்லைன் கல்வி என்பது இந்தியாவில் நடைபெறும் மிகப் பெரிய பகல் கொள்ளை. இதை முறைப்படுத்த வேண்டும் என்பதை விட, தடை செய்ய வேண்டும்," என்றார்.
இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் வலியுறுத்திய விஷயத்தை வரவேற்பதாகக் கூறுகிறார் அரசு பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி.
"சரியான நேரத்தில் கார்த்தி சிதம்பரம் பேசியுள்ளார். இது போன்ற ஆன்லைன் கல்வி நிறுவனங்களில் வசதி உள்ள பெற்றோர்களின் குழந்தைகளால் மட்டுமே சேர முடியும். சேர்ந்த பலரும், பணம் பறிப்பதாக புலம்புகிறார்கள். முழு வணிக நோக்கத்துடன் மட்டுமே அவை செயல்படுகின்றன. குறிப்பாக கொரோனா காலத்தை இந்த நிறுவனங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளன. மறுபுறம், வசதியற்ற குழந்தைகளிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வும் ஏற்படுகிறது. தனியார் ஆன்லைன் நிறுவனங்களை அனுமதிக்க கூடாது. இதனால், எதிர்மறையான விளைவுகளே ஏற்படுகின்றன. வகுப்பறையில் கற்பிக்கப்படும் கல்வியே மாணவர்களுக்கு தேவை," என்றார்.
ஏன் பேசினேன்? - கார்த்தி சிதம்பரம்
ஆன்லைன் கல்வி விவகாரத்தை மக்களவையில் எழுப்பியது ஏன் என்று சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்திடம் பிபிசி தமிழ் கேட்டதற்கு, `` இதை அரசியல்ரீதியாக பேசவில்லை. மாணவர்கள் நலன், கல்வி குறித்த அக்கறையில் தான் பேசினேன். ஒரு ஆரம்ப பள்ளியைத் தொடங்க வேண்டும் என்றால் கூட நிறைய அனுமதி பெற வேண்டும். பாடத்திட்டம் உள்ளிட்டவை என நிறைய நடைமுறைகள் உள்ளன. ஆனால், ஆன்லைன் கல்வி நிறுவனங்களுக்கான வரையறை குறித்து எதுவும் இல்லை. அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்காது என்று விளம்பரப்படுத்தி, பெற்றோர்களிடம் பணம் பறிக்கிறார்கள். குறிப்பாக, ஏழை, எளிய பெற்றோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவின் கல்விக்கான பட்ஜெட்டை விட ஒரு தனியார் ஆன்லைன் கோச்சிங் நிறுவனத்தின் மதிப்பு அதிகமாக உள்ளது. அதாவது 21 பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக உள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்கே ஸ்பான்சர் செய்கிறார்கள். இது குறித்த மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். ஆன்லைன் கல்வி நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும். இது குறித்து உடனே கவனம் செலுத்த வேண்டும்,`` என்றார்.
காலத்திற்கு ஏற்ப ஆன் லைன் கல்வி முறை. கல்வி நிறுவனங்கள் தவிர்க்க முடியாதவை. இவற்றை முறைப்படுத்த வேண்டும் என்பது ஏற்புடையதே. ஆனால். முற்றிலும் தடை என்பது தேவையில்லை. இது குறித்து ஆய்வு செய்தே முடிவு செய்ய வேண்டும் என்றும் சில பெற்றோர்கள் கூறுகின்றனர்.ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டும் அவை சார்ந்த சர்ச்சைகளும் எழுந்துள்ள நிலையில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.
பிற செய்திகள்:
- மகாராஷ்டிர கிராமத்தில் குரங்குகள் 200 நாய்க் குட்டிகளை கொன்றனவா? - உண்மை என்ன?
- சிவிங்கிப் புலிகள்: ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியக் காடுகளுக்கு பாய்ந்து வரப்போகின்றனவா?
- ஸ்விகி அறிக்கை சுவாரசியம்: 6 கோடி பிரியாணி ஆர்டர்; அதிகபட்சம் ரூ.6 ஆயிரம் டிப்ஸ்
- ஒமிக்ரான் தொற்று: எந்தெந்த அறிகுறிகள் இருந்தால் கவனம் தேவைப்படும்?
- படுத்துக் கொண்டே விசாரணைக்கு ஆஜரான முன்னாள் காவல்துறை அதிகாரியை எச்சரித்த நீதிமன்றம்
- தியானென்மென் வெட்கக்கேடு ஸ்தூபி ஹாங்காங்கில் இரவோடு இரவாக அகற்றம்
- இளவரசி ஹயா, துபாய் ஷேக், ரூ.5,500 கோடிக்கு ஜீவனாம்சம் - மலைப்பூட்டும் விவாகரத்து வழக்கின் தீர்ப்பு
- தொல்காப்பியம்: இந்தி, கன்னடத்தில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்ட இந்திய அரசு - என்ன காரணம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்