You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியரின் ஏழை மாணவர்களுக்கு உதவும் முயற்சி - ஆன்லைன் கல்வி ரேடியோ
- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஏழை மாணவர்கள் ஆன்லைன் கல்வி கற்கும் வகையில், தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால் ஆன்லைன் கல்வி ரேடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரேடியோ மூலம் ஸ்மார்ட் போன் வசதி இல்லாத மாணவர்களும் சாதாரண 2ஜி அலைவரிசையில் இயங்கக்கூடிய அலைபேசியில் ஆன்லைன் கல்வி கற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஸ்மார்ட் போன் மூலமாக ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் போதுமான இணையம் அல்லது ஸ்மார்ட்போன் வசதி இல்லாத கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்பது மிகவும் சிரமமாக இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு ரேடியோ மூலம் ஆன்லைனில் பாடமெடுக்கும் புதிய முயற்சியை கடலூர் மாவட்டம், புவனகிரி பகுதிக்கு உட்பட்ட கத்தாழை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஆ.கார்த்திக்ராஜா மேற்கொண்டுள்ளார்.
அதாவது மிகக்குறைந்த இணை அலைவரிசையில் இயங்கக்கூடிய சாதாரண அலைபேசி மூலமாக ஆன்லைனில் வகுப்பெடுக்கும் எளிய மற்றும் புதிய கற்பிக்கும் முயற்சியை ஆசிரியர் கார்த்திக்ராஜா நிகழ்த்தியுள்ளார். இந்த ஆன்லைன் கல்வி ரேடியோ தமிழகத்தின் உள்ள பல்வேறு அரசு பள்ளி ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அனைத்து பாடங்களையும் தினந்தோறும் சுழற்சி முறையில் ஒலிபரப்பாகின்றது.
இளம் அரசு பள்ளி ஆசிரியரின் முயற்சி
ஆன்லைன் வகுப்பு எடுக்கும்போது அனைத்து மாணவர்களிடமும் ஸ்மார்ட்போன் இருப்பதில்லை, ஒருசிலர் மட்டுமே வைத்துள்ளனர். மேலும் சிலர் 2ஜி அலைபேசி மட்டுமே வைத்திருந்தனர். ஆகவேதான் 2ஜி அலைபேசி பயன்படுத்தும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த 2ஜி அலைபேசி இல்லாமல் கூட எங்கள் வகுப்பில் பல மாணவர்கள் இருந்தனர். பின்னர் அவர்களுக்கும் இதை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக 2ஜி அலைபேசியும் தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்துள்ளதாக ஆன்லைன் கல்வி ரேடியோவை உருவாக்கிய ஆ.கார்த்திக்ராஜா பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டார்.
"தமிழகத்தில் இந்த ஆன்லைன் கல்வி ரேடியோ முயற்சியை முதன்முதலில் கத்தாழை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் துவங்கினோம். முன்னதாக தமிழக அரசு கல்வி தொலைக்காட்சி தொடங்கியபோது அதைப்போன்று கல்வி வானொலி ஒன்று தொடங்க வேண்டும் என்ற உந்துதல் இருந்தது. அதற்கான அவசியம் அப்போதில்லாமல் இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு நேரத்தில் அதன் தேவை இருந்ததால், அதற்கான தேடலில் இறங்கினேன்.
வானொலி என்பது மிகப்பெரிய ஒன்று. அதை எப்படி எளிமையாக கொடுப்பது என்று யோசித்தபோது சில ஆசிரியர்கள் மூலமாகவும், வலைத்தளத்தில் தேடுதல் மூலமாகவும் இணையம் வழியாக கூட வானொலி இயக்கலாம் என்பது தெரிந்தது. இதையடுத்து ஆன்லைன் கல்வி ரேடியோவை தொடங்கினேன்," என்கிறார் கார்த்திக்ராஜா.
தமிழ்நாடு ஆசிரியர்களின் கூட்டு பங்களிப்பு
"முதலில் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு என் வகுப்பிற்காக பயன்படுத்தப்பட்டது. இந்த முயற்சியை அனைத்து ஆசிரியர்களும் வரவேற்றனர். மேலும் இதை பிற வகுப்புகளுக்கும் மேற்கொள்ளுமாறு ஊக்கப்படுத்தினர். எனக்கு இருக்கும் சூழலில் எனது வகுப்பிற்கு மட்டுமே இதை ஏற்படுத்த முடியும் என்பதால் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தால் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் உருவாக்க முடியும் என்பதை எடுத்துரைத்தேன்.
இதனை ஏற்றுக்கொண்ட தமிழகத்தின் பிற மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் அனைவரும் குழுவாக இணைந்தோம். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து பட பகுதிகளையும் இதில் ஒலிபரப்ப தொடங்கினோம்," என்றார் ஆசிரியர்.
குறிப்பாக இதனை அட்டவணையிட்டு காலை 6 மணி முதல் இரவு 9 வரை அனைத்து படங்களுக்கும் அந்தந்த வகுப்பிற்கு ஏற்ப நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த பணியை தமிழகத்திலுள்ள 20 மாவட்டங்களில் 75 ஆசிரியர்கள் ஒன்றிணைந்து செய்து வருவதாக கார்த்திக்ராஜா தெரிவித்தார்.
எளிய முறையில் கற்றல் கற்பித்தல்
"இதை அனைத்து ஆசிரியர்களும் அவரவர் வீடுகளில் இருந்துகொண்டே, அவர்களுடைய அலைபேசியில் இருக்க கூடிய வாய்ஸ் ரெக்கார்டர்(Voice Recorder) மூலமாக அவரவர் வகுப்பிற்கு ஏற்ப படங்களை எடுக்கின்றனர். இதற்கு பிரத்தியேகமாக எந்த கருவியும் வாங்க வேண்டிய அவசியமில்லை. அவர்களுடைய அலைபேசி மட்டுமே போதுமானது. மேலும் இவற்றை ஆசிரியர்கள் ஓய்வு நேரத்தில் பயன்படுத்துவதால் அவர்களுடைய கற்றல், கற்பித்தலில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
மாணவர்கள் இதனை எளிதில் பயன்படுத்த முடியும். இதை ஸ்மார்ட்போன் மட்டுமின்றி சாதாரண 2ஜி அலைவரிசையில் இருக்க கூடிய தொலைபேசி மூலமாக வகுப்பை கவனிக்கலாம். நம்முடைய நோக்கம் கிராமப்புற மாணவர்களை நோக்கி இருப்பதால், அவர்கள் அனைவருமே வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பார்கள். ஆகவே அவர்களுக்கு எந்த கஷ்டமோ, அழுத்தமோ கொடுக்காமல் மிக எளிய முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக சாதாரண பொத்தான் அலைபேசியியில் (Button Phone) இயங்கக்கூடிய நோக்கத்தில் உருவாக்கினோம். மேலும் மாணவர்களுடைய உடல்நலம், மனநலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த சேவையை தொடர்ந்து செய்து வருகிறோம்," என்றார்.
பெற்றோர் சுலபமாக கண்காணிக்கலாம்
"இது ஒரு parental control. அதாவது, மாணவன் என்ன பயன்படுத்துகிறான் என்பதை பெற்றோரால் பார்க்க முடியும், கேட்க முடியும். ஆனால் ஸ்மார்ட்போனை பயன்படுத்தும்போது கேம் விளையாடுகின்றனரா? அல்லது படம் பார்க்கிறார்களாக? என்பது தெரியாது. ஆனால் இந்த ஆன்லைன் கல்வி ரேடியோவை கற்றலுக்கு பயன்படுத்தும்போது, அலைபேசியை ஆன் செய்துவிட்டு புத்தகத்தை மட்டுமே கையில் வைத்து படிப்பார்கள். ரேடியோவில் என்ன ஒலிபரப்பாகிறது என்பதை வீட்டில் இருக்கும் அனைவராலும் கேட்க முடியும். அதனால் மாணவர்கள் உண்மையாகவே படிக்கிறார்களா என்பதை பெற்றோரால் எளிதில் கண்காணிக்க முடியும்.
செலவீனத்தை பொறுத்தவரை நாளொன்றுக்கு அதிகபட்சம் 200mb முதல் 300mb போதுமானது. மாதத்திற்கு கணக்கு செய்தால் 3ஜிபியே அதிகம், 24 மணி நேரமும் பயன்படுத்த முடியும். இதனுடைய சிறப்பம்சம் பாட புத்தகங்கள் மட்டுமின்றி, பாட புத்தகம் சார்ந்த பயிற்சிகளும், செய்யுள் பாடல், திருக்குறள், நல்லொழுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கதைகள், நன்னெறிக் கதைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் இதில் கேட்க முடிகிறது. மேலும் இதில் மாணவர்களும் விருப்பப்பட்டால் வீட்டில் இருந்தபடி அவர்களும் பேசி அனுப்பலாம். இது மாணவர்கள் மத்தியில் நாம் பேசியிருப்பது ஒலிபரப்பாகப் போகிறது என்றொரு உந்துதலை ஏற்படுத்தும்," என்று கூறுகிறார் ஆசிரியர் கார்த்திக்ராஜா.
ஆன்லைன் கல்வி ரேடியோ நிகழ்ச்சிகள்
இந்த ஆன்லைன் கல்வி ரேடியோ தினந்தோறும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நேரலையில் இயங்குகிறது. மற்ற நேரங்களில், ரெக்கார்ட் செய்யப்பட்ட பாடங்கள் அனைத்தும் பிளே லிஸ்ட் முறையில் கேட்டுக்கொள்ளலாம்.
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் புத்தகத்துக்குப் பின்னால் உள்ள கேள்வி - பதில் பயிற்சி வழங்கப்படுகிறது. காலை 10 முதல் 12.30 வரை தொடக்கப் பள்ளி வகுப்புகள். பின்னர் உணவு இடைவேளை, 1.30 மணிக்குச் சொல்வதை எழுதுதல், விடுகதை உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. 3 முதல் 6 மணி வரை நடுநிலைப்பள்ளி வகுப்புகள் என வரையறுக்கப்பட்ட நேரத்தில் இந்த ஆன்லைன் கல்வி ரேடியோ இயங்குகிறது.
மேலும் தினந்தோறும் மாலை 6 மணிக்கு ஆன்லைன் கல்வி ரேடியோவில், மின்மினிகள் மின்னும் நேரம் என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த மாணவர்கள் தன்னார்வத்துடன் அவர்களே பேசி அனுப்பும் விஷங்களை ஒலிபரப்பப்படுகிறது.
கேட்டல், எழுதுதல், வாசித்தல், பேசுதல் திறன்கள்
"இந்த கல்விமுறை கேட்டலை மையமாக கொண்டு செயல்பட்டாலும், கேட்பதில் மூலமாக அதை எழுதும்போது எழுத்து பயிற்சி வருகிறது. புத்தக வாசிப்பு பயிற்சி கொடுக்கும்போது, வாசிப்பு தினம் ஏற்படுகிறது. மேலும் அதை பேசி அனுப்பும்போதும் அவர்களுக்கு பேச்சாற்றல் மேம்படுகிறது. ஆகவே இதன் மூலமாக கேட்டல், எழுதுதல், வாசித்தல், பேசுதல் என்ற நான்கு திறனையும் வெளிக் கொண்டுவர உதவுகிறது.
குறிப்பாக இவை ஊரடங்கு நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டாலும், வருங்காலத்தில் பள்ளிகள் இயங்க தொடங்கிய பிறகு மாணவர்கள் வகுப்பறையிலும் பயன்படுத்தலாம். ஆசிரியர்கள் பயிற்சி வகுப்புகளும் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
தற்போது வரை தமிழகத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் முறைக்கு மேல் இந்த www.kalviradio.com பக்கங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் கல்வி ரேடியோவானது 14 ஆயிரத்து ஐந்நூறு மணி நேரம் இயக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் கைக்கு சென்றடையும்போது, ஒரு எளிமையான ஆன்லைன் கல்வி என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. அதன் காரணமாகவே மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது," என ஆசிரியர் ஆ.கார்த்திக்ராஜா தெரிவித்துள்ளார்.
2ஜி அலைவரிசை கொண்ட அலைபேசியில் கூட ஆன்லைன் கல்வி ரேடியோ இயங்கும் என்பதால், அந்த 2ஜி அலைபேசி வாங்க வசதி இல்லாமல் ஆசிரியர் கார்த்திக்ராஜா வகுப்பை சேர்ந்த 18 மாணவர்கள் இருந்துள்ளனர். இதையடுத்து அந்த 18 மாணவர்களுக்கும் ரூ.1700 மதிப்புள்ள 2ஜி அலைபேசியை தனது சொந்த செலவில் கார்த்திக்ராஜா வாங்கி கொடுத்துள்ளார்.
சரியான வசதி வாய்ப்பு இல்லாத சூழலில், ஆசிரியர்கள் உதவி மூலமாக ஏற்படுத்திய ஆன்லைன் கல்வி ரேடியோவானது பிள்ளைகள் படிப்பதற்கு பயனுள்ளதாகவும், எளிதாகவும் இருப்பதாக பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்