You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'சென்னை பல்கலை. மாணவியிடம் பாலியல் சீண்டல்' - பேராசிரியருக்கு எதிராக போராட்டம்
சென்னை பல்கலைகழகத்தில் பேராசிரியர் ஒருவர், அவரது மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறி அந்த பேராசிரியரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என மாணவர்கள் போராடி வருகின்றனர்.
நான்கு நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், தொல்லியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியராக உள்ள அவர் பாலியல் சீண்டலுக்கு மன்னிப்பு கோரவேண்டும் என்றும் அவரை பணியில் இருந்து நீக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் புகாரை ஏற்று விசாரணைக் குழு அமைத்துள்ளதாகவும், பேராசிரியரை உடனே பணியில் இருந்து விலக்க முடியாது என்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் கூறுகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களில் ஒருவரான சிவப்பிரகாசிடம் பேசியது பிபிசி தமிழ்.
''கொரோனா காலத்தில் விடுமுறை அளிக்கப்பட்ட 8 மாதங்களுக்கு விடுதி கட்டணம் செலுத்தவேண்டும் என பல்கலைக்கழகம் தெரிவித்தபோது, அதனை எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்தினோம். அப்போது நடைபெற்ற மூன்றாவது செமஸ்டர் தேர்வில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் மதிப்பெண்கள் குறைவாக இருப்பதாகவும், தேர்ச்சி இல்லை என்றும் தெரிவித்தார்கள். இது தொடர்பாக நாங்கள் மீண்டும் மீண்டும் கேட்டபோது, எங்கள் விடைத்தாள்களைக் காணவில்லை என்றும் மின்னஞ்சலில் உள்ள விடைத்தாள்களை இரண்டாவது முறையாக மற்றொரு பேராசிரியர் மூலமாகத் திருத்தியதாகவும் தெரிவித்தனர். ஆனால் எங்களின் மதிப்பெண் பட்டியலை வெளியிடவில்லை. அதனை கேட்டபோது மாணவியிடம் எங்கள் துறைத் தலைவர் மிகவும் மோசமாக நடந்துகொண்டார். மாணவியிடம் நெருங்கி வந்து அவரை இடித்தார். தாகாத முறையில் இரண்டு முறை நடந்துகொண்டார்,'' என மாணவர்கள் கூறுகின்றனர்.
ஊடகங்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட மாணவி, "மிகவும் ஆபாசமாக என்னை தொட்டுப் பேசி, ஆபாசமாக நடந்துகொண்டார். மதிப்பெண்ணை வெளியிடவேண்டும் என கேட்டதற்காக அவர் ஏன் எப்படி நடந்துகொண்டார் என்பதை விசாரிக்காமல், விசாரணைக் குழுவினர் என்னைக் குற்றவாளிபோல் நடத்துகின்றனர். மதிப்பெண்ணை வெளியிடவேண்டும், மோசமாக நடந்துகொண்டதற்கு பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று கண்ணீருடன் பேசினார்.
பல்கலைக்கழக உயர் அதிகாரிகளிடம் இது குறித்து பிபிசி தமிழ் பேசியபோது, மாணவியின் புகார் பெறப்பட்டு, பாலியல் வன்முறைக்கு எதிரான குழு மூலம் விசாரணை நடைபெற்றுவருவதாக தெரிவித்தனர்.
''மாணவி அளித்த புகாரை விசாரணை குழுவில் கொடுத்து விசாரணை ஏற்பாடு செய்தோம். முதல்கட்ட விசாரணை தற்போதுதான் முடிந்துள்ளளது. உடனே பேராசிரியரை பணியில் இருந்து விடுவிக்கவேண்டும் என மாணவர்கள் கோருகிறார்கள்,'' எனத் தெரிவித்தனர்.
விசாரணை குழு தன்னை நடத்திய விதம் முறையானதாக இல்லை என மாணவி கூறியுள்ளது பற்றி கேட்டபோது, ''விசாரணை குழுவில் கல்லூரி சார்ந்தவர்களை விட, வெளியில் பணிபுரியும் சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் அனுபவமிக்க பெண் வழக்கறிஞர் உள்ளிட்டவர்கள் இருக்கிறார்கள். விசாரணையை அவர்கள் சரியாக கையாண்டதாகவே நாங்கள் கருதுகிறோம். புகார் கொடுத்தவுடன் பேராசிரியர் மேல் நடவடிக்கை பாயவேண்டும் என மாணவர்கள் கேட்கிறார்கள். அப்படி செய்வதற்கு வழி இல்லை. விசாரணை குழுவின் முடிவை பொறுத்துத்தான் அடுத்த நகர்வு இருக்கும்,'' என்கிறார்கள்.
பிற செய்திகள்:
- வாஷிங் மெஷினும், 1500 ரூபாயும் எடுபடுமா? அதிமுக செய்த சர்வே என்ன சொல்கிறது?
- பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்க ஒரு செயலி: ஆஸ்திரேலிய போலீஸ் யோசனைக்கு எதிர்ப்பு
- குமுறும் எரிமலை, 40 ஆயிரம் நிலநடுக்கம்: கொந்தளிக்கும் ஐஸ்லாந்து
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரலாறு: 15 சுவாரசிய தகவல்கள்
- வாட்சாப் புதிய தனியுரிமை கொள்கைக்கு தடைவிதிக்கவேண்டும்: நீதிமன்றத்தில் அரசு கோரிக்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: