You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எரிமலை வெடிப்பு: ஐஸ்லாந்து நாட்டில் பொங்கும் எரிமலைக் குழம்பு லாவா, 40 ஆயிரம் நிலநடுக்கங்கள், படங்கள்
பெயரில் ஐஸ் கொண்ட நாட்டின் தலைநகருக்கு அருகே தீப்பிழம்பு சீறிப்பாய்கிறது.
ஆம். ஐஸ்லாந்துதான் அந்த நாடு. இந்நாட்டின் தலைநகர் பெயர் ரேக்யூவீக். இந்நகரில் இருந்து தென்மேற்கே சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு எரிமலை வெடித்துள்ளது என்கிறது அந்நாட்டு வானிலை ஆய்வு அலுவலகம்.
ரேக்யூவீக் தீபகற்பத்தில் உள்ள இந்த ஃபேக்ரதால்ஸ்ஃப்யாட்ல் (Fagradalsfjall) எரிமலை வாயின் பிளவு 500 முதல் 700 மீட்டர் நீளமுள்ளது என்றும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது. 800 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இந்த எரிமலை வெடிக்கிறது.
இது தவிர, ஐஸ்லாந்தில் கடந்த மூன்று வாரங்களில் 40 ஆயிரம் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
2010-ம் ஆண்டு இந்நாட்டில் உள்ள ஏயுஃப்யாட்யோகுட் (Eyjafjallajokull) எரிமலை வெடித்தபோது, ஐரோப்பா முழுவதும் விமானப் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
ஆனால் தற்போது வெடித்துள்ள ஃபேக்ரதால்ஸ்ஃப்யாட்ல் எரிமலை சாம்பலையும், புகையையும் அவ்வளவாக உமிழாது என்றும் அதனால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்படாது என்றும் நம்பப்படுகிறது.
கிரீன்விச் சராசரி நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8.45-க்கு இந்த எரிமலை வெடித்ததாகவும், வெப்காம், செயற்கைக்கோள் படங்கள் மூலமாக பிறகு இது உறுதி செய்யப்பட்டதாகவும் வானிலை ஆய்வு அலுவலகம் தெரிவிக்கிறது.
கடலோரக் காவல் படை ஹெலிகாப்டர் ஒன்று இந்தப் பகுதியை ஆய்வு செய்து, எரிமலை வெடித்து லாவா (எரிமலைக் குழம்பு) வழியும் காட்சியைப் படம் பிடித்து அனுப்பியது.
சிவப்பு நிறத்தில் தகிக்கும் வானம்
"சிவப்பு நிறத்தில் தகித்துக்கொண்டிருக்கும் வானத்தை என் வீட்டின் சாளரத்தில் இருந்து பார்க்க முடிகிறது. இங்கிருக்கும் எல்லோரும் தங்கள் காரில் அங்கே சென்று பார்க்க போய்க்கொண்டிருக்கிறார்கள்" என்று ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார் ரான்வெய்க் குட்முண்ட்ஸ்டோடி என்பவர். இவர் எரிமலையில் இருந்து 8 கி.மீ. தொலைவில் கிரிண்டாவிக் என்ற இடத்தில் வசிக்கிறார்.
எரிமலை வெடிப்பதற்குப் பல மணி நேரம் முன்பாக அந்த எரிமலையில் இருந்து 1.2 கி.மீ. தொலைவில், 3.1 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது.
எதிரெதிர் திசையில் மோதிக் கொள்ளும் இரு புவியத் தட்டுகளுக்கு (டெக்டானிக் பிளேட்டுகள்) இடையில் சிக்கிக்கொண்டிருப்பதால் ஐஸ்லாந்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. அட்லாண்டிக் கடலிடை முகடு, கடற்பரப்புக்கு மேலே தெரிகிற நாடு உலகிலேயே ஐஸ்லாந்து மட்டுமே.
தற்போது தனிகிறது
ஐஸ்லாந்து தலைநகர் ரேக்யூவீக் அருகே வெள்ளிக்கிழமை வெடித்து, லாவா என்னும் எரிமலைக் குழம்பை உமிழத் தொடங்கிய எரிமலை ஓரிரு நாள்களிலேயே தனியத் தொடங்கிவிட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த எரிமலை வெடிக்கும் என்பது முன்கூட்டியே தெரிந்து ஐஸ்லாந்து மக்கள் அதற்காக பல வாரங்களாகத் தயாராகி வந்தனர். எரிமலை வெடித்த பிறகும் பல்லாயிரம் நிலநடுக்கங்கள் அங்கே ஏற்பட்டன.
இந்த எரிமலை வெடிப்பு மிகச் சிறியது என்றும், இதனால் யாருக்கும் ஆபத்து இல்லை என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் இந்த எரிமலை வெடிக்கும் இடத்துக்குச் செல்ல தடை ஏதும் விதிக்கப்படவில்லை. ஆனால், அங்கு செல்லவேண்டுமானால், கடினமான மலைகளை பல மணி நேரம் ஏறிக் கடந்து செல்லவேண்டும் என்று ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் பேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
- உலக அளவில் சில நிமிடங்கள் முடங்கிய வாட்ஸ்அப் - இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் வேகம் குறைந்தது
- தடுப்புக் காவலில் மியான்மர் பிபிசி செய்தியாளர்; 'தொடர்பு கொள்ள இயலவில்லை'
- தொடரும் உள்ளடி: கொந்தளித்த திருமா - என்ன நடக்கிறது வி.சி.கவில்?
- கமல்ஹாசன்: நடிகர் முதல் அரசியல்வாதி வரை ஒரு "தசாவதாரம்"
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: `எடப்பாடியை நம்பினேன், ஏமாற்றிவிட்டார்!'
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: