You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட 10 நாட்டு தூதர்களை 'வரவேற்கப்படாத நபர்களாக' அறிவிக்க துருக்கி அதிபர் எர்துவான் உத்தரவு
துருக்கிஅதிபர் ரிசெப் தாயிப் எர்துவான், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட 10 நாடுகளின் தூதர்களை வரவேற்கப்படாத நபர்களாக (Persona non grata) அறிவிக்க உத்தரவிட்டுள்ளார்.
பெர்சனா நான் கிரேட்டா என்று தூதர்களை அறிவிப்பது அவர்களின் தூதாண்மை தகுதியை நீக்குவது. அத்துடன் அவர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்படலாம் அல்லது அவர்களின் நாட்டுத் தூதர்களாக அங்கீகரிக்கப்படாமல் போகலாம்.
இந்த 10 நாட்டுத் தூதர்களும் செய்த பிழை என்ன?சிறையில் உள்ள துருக்கி மனித உரிமை செயற்பாட்டாளரான ஓஸ்மான் கவலாவை விடுதலை செய்யவேண்டும் என்று கூட்டாக அவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.
இதையடுத்து அதிபர் எர்துவான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
போராட்டங்களில் ஈடுபட்டது மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் கவலா நான்கு ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு முடியும் முன்பாகவே அவர் சிறையில் இருந்து வருகிறார்.
அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஃபின்லாந்து, டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, சுவீடன் ஆகிய நாடுகளின் தூதரகங்கள் இணைந்து செயற்பாட்டாளர் கவலாவை விடுவிக்குமாறு இந்த வாரம் அறிக்கை வெளியிட்டன. இதில் ஏழு நாடுகள் நேட்டோ அமைப்பில் துருக்கியோடு உறுப்பு நாடுகளாக இருப்பவை.
'தி கவுன்சில் ஆஃப் யூரோப்' என்கிற ஐரோப்பாவின் முக்கிய மனித உரிமை அமைப்பு, செயற்பாட்டாளர் கவலாவை விடுவிக்குமாறு ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் கூறியதை நிறைவேற்ற துருக்கியை கடைசியாக எச்சரித்துள்ளது.
எஸ்கிஷேஹிரில் சனிக்கிழமை ஒரு கூட்டத்தில் பேசிய துருக்கி அதிபர் ரிசெப் தயிப் எர்துவான் "வெளி விவகாரத் துறை அமைச்சருக்கு தேவையான உத்தரவுகளையும், என்ன செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளேன். அந்த 10 நாட்டு தூதர்களும் 'வரவேற்கப்படாத நபர்களாக' உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும்."
தூதர்கள் துருக்கியைப் புரிந்து கொள்ள வேண்டும் அல்லது வெளியெற வேண்டும் என எர்துவான் கூறியதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுவரை இது தொடர்பாக அந்நாட்டு தூதர்களிடமிருந்து பெரிய எதிர்வினைகள் எதுவும் வரவில்லை. சம்பந்தப்பட்ட நாடுகள் தீவிரமாக ஆலோசித்து வருவதாக ஜெர்மனியின் வெளிநாட்டு விவகார அமைச்சகம் கூறியுள்ளது.
இது தொடர்பாக இதுவரை எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் துருக்கி அதிகாரிகளிடமிருந்து வெளியாகவில்லை.
தங்கள் நாட்டு தூதர் வெளியேற்றப்படும் அளவுக்கு எதுவும் செய்யவில்லை என நார்வே வெளிவிவகார அமைச்சகம் ராய்டர்ஸ் முகமையிடம் கூறியுள்ளது.
துருக்கியின் வெளிவிவகாரத் துறை அமைச்சகம், 10 நாட்டு தூதர்களையும் கவலா வழக்கு குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெற கடந்த செவ்வாய்கிழமை வேண்டுகோள் விடுத்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.
அந்த 10 நாட்டு தூதரகங்களும் துருக்கி செயற்பாட்டாளர் ஓஸ்மான் கவலா வழக்கு விசாரணையில் உள்ள தொடர் தாமதத்தை குறிப்பிட்டு விமர்சித்திருந்தன. இது ஜனநாயகத்தின் மீதும், சட்டத்தின் மீதும், வெளிப்படைத் தன்மையின் மீதான மரியாதையை சீர்குலைக்கிறது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் ஓஸ்மான் கவலாவின் வழக்கில் விரைவாக ஒரு தீர்வு காணவும், அவரை உடனடியாக விடுவிக்கவும் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
2013ஆம் ஆண்டு துருக்கியில் நடந்த போராட்டங்கள் தொடர்பான வழக்கிலிருந்து கடந்த ஆண்டு கவாலா விடுவிக்கப்பட்டார். ஆனால் 2016ஆம் ஆண்டு எர்துவான் அரசை கவிழ்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது தொடர்பான வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கவலா தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். தன் மீதான விமர்சனங்களை எர்துவான் பரவலாக நசுக்குகிறார் என்று சொல்வதற்கான எடுத்துக்காட்டு இது என்கிறார்கள் எர்துவானின் விமர்சகர்கள்.
பிற செய்திகள்:
- தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு - முழு விவரம்
- ஆஸ்கார் விருதுக்கு செல்லும் 'கூழாங்கல்' சினிமா எப்போது ரிலீஸ் ஆகும்? இயக்குநர் தகவல்
- தமிழ் இளைஞர்களை பொது இடத்தில் மோசமாக தாக்கிய இலங்கை போலீஸ்காரர் கைது
- மனிதருக்கு பன்றி சிறுநீரகம்: அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள் சாதனை
- 'டெல்டா பிளஸ்' புதிய கொரோனா திரிபு அதிவேகமாக பரவக் கூடியதாக இருக்கலாம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்