You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கூழாங்கல் சினிமா ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை: எப்போது ரிலீஸ் ஆகும்? இயக்குநர் வினோத்ராஜ் தகவல்
- எழுதியவர், ச.ஆனந்தப் பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
இயக்குநர் வினோத்ராஜ் இயக்கிய 'கூழாங்கல்' திரைப்படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் பரிந்துரையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் படம் எப்போது ரசிகர்கள் பார்ப்பதற்கு ரிலீஸ் ஆகும் என்பது குறித்தும், தியேட்டரில் வெளியாகுமா அல்லது ஓடிடி-யில் வெளியாகுமா என்பது குறித்தும் படத்தின் இயக்குநர் வினோத் ராஜ் பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.
படம் ஆஸ்கர் பரிந்துரைக்குத் தேர்வு செய்யப்பட்ட செய்தியை தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் படக்குழுவுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
விருதுகளை குவித்த 'கூழாங்கல்' திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சர்வதேச அளவில் பல விருதுகளை இந்தப் படம் குவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெதர்லாந்தின், ரோட்டர்டாம் 50வது சர்வதேச திரைப்பட விருது விழாவில் பங்கேற்று, 'டைகர்' விருதையும் இது வென்றது.
'டைகர்' விருதை வென்ற முதல் தமிழ்த்திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஜூன் மாதம் உக்ரைன் தலைநரான கீவ் நகரில் நடைபெற்ற மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவிலும் ('Molodist International Film Festival') இந்த படம் திரையிட தேர்வாகி இருந்தது.
இதற்கும் தமிழில் இருந்து தேர்வான ஒரே திரைப்படம் இது.
எப்போது திரையரங்கில் வெளியாகும்?
தன் படம் ஆஸ்கர் பரிந்துரைக்கு தேர்வாகியுள்ளது குறித்து பிபிசி தமிழுக்காக பேசிய இயக்குநர் வினோத்ராஜ்,
"இந்த 'கூழாங்கல்' படத்தின் கதையே என் ஊர் மக்களையும் அவர்கள் வாழ்வியலையும் சார்ந்ததுதான். இது அவர்களுக்கான வெற்றியாக பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். மேலும்," படம் ஆஸ்கர் விருது பட்டியலில் தேர்வாகியுள்ளது என்ற செய்தி எனக்கு இன்று தான் தெரிய வந்தது. உடனே சென்னை கிளம்பி வர சொல்லியிருக்கிறார்கள். அங்குதான் வந்து கொண்டிருக்கிறேன்" என்றார்.
பல விருதுகளை படம் வாங்கி விட்டது. எப்போது திரையரங்குகளில் பார்க்கலாம் என்று கேட்டபோது, சிரித்தவர், "மிகவும் எளிமையான படம் இது. அதிக எதிர்ப்பார்ப்பு பயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மைதான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல சர்வதேச விருதுகளை படம் வென்றது. ஆனால், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக என்னால் நேரில் செல்ல இயலவில்லை. பின்பு, ரோமானியா, ரஷ்யா நாடுகளின் விருதுகளுக்கு படம் இட்டுச் சென்றது," என்றார்.
படம் வெளியாவது குறித்து மீண்டும் கேட்டபோது,
"இந்த ஆண்டு டிசம்பருக்குள் படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட நிறைய அழைப்புகள் வந்தன. ஆனால், படத்தை முதலில் தியேட்டருக்கு எடுத்துச் செல்லலாம் என தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் சொல்லியிருக்கிறார். தியேட்டரா, ஓடிடியா என்பது குறித்தும், படத்தின் வெளியீடு குறித்தும் அடுத்தடுத்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும்" என்றார் வினோத்ராஜ்.
படம் குறித்தும், விருதுகள் குறித்தும் முன்பு பிபிசி தமிழிடம் பேசிய இப்படத்தின் இயக்குநர் வினோத்ராஜ்,
, "கூழாங்கல்' படத்தின் கதை நம் வாழ்வில் அன்றாடம் நடக்கக்கூடியதுதான். மிகவும் எளிமையான கதைதான். அப்பாவுக்கும் மகனுக்குமான கதை. விருதுக்காக என நினைத்து எடுக்கவில்லை. படத்தை முடித்து மக்களிடம் எப்படியாவது கொண்டு போய் சேர்த்து விட வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது," என்றார்.
சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான பிரிவில் ஆஸ்கார் விருதுக்கு எந்தப் படத்தை பரிந்துரைப்பது என்பதை தேர்வு செய்வதற்கான பட்டியலில்
'சர்தார் உத்தாம்', 'ஷேர்னி', 'செல்லோ ஷோ', 'நயாட்டு', 'கூழாங்கல்', 'மண்டேலா' உள்ளிட்ட 14 படங்கள் இடம் பெற்றிருந்தன. இதில் தமிழ்த் திரைப்படமான 'கூழாங்கல்' அதிகாரபூர்வமாக தற்போது தேர்வாகி உள்ளது.
இதேபோல, கடந்த ஆண்டு இந்தியா சார்பில் மலையாள படமான 'ஜல்லிக்கட்டு' தேர்வானது குறிபிடத்தக்கது.
பிற செய்திகள்:
- 'டெல்டா பிளஸ்' புதிய கொரோனா திரிபு அதிவேகமாக பரவக் கூடியதாக இருக்கலாம்
- வைரமா, வனமா? ரூ.55,000 கோடி மதிப்புள்ள வைர சுரங்கம் பற்றிய ஆய்வு
- உண்ணக்கூடிய மண்ணையும் மலையையும் கொண்ட அற்புதத் தீவு - எங்குள்ளது?
- வங்கதேசத்தில் இஸ்லாம் இனி அதிகாரபூர்வ மதமாக இருக்காதா? மதச்சார்பற்ற அரசாகிறதா?
- Oh மணப்பெண்ணே: சினிமா விமர்சனம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்