Oh மணப்பெண்ணே: சினிமா விமர்சனம்

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

நடிகர்கள்: ப்ரியா பவானி சங்கர், ஹரீஷ் கல்யாண், வேணு அரவிந்த், அபிசேக் குமார், அன்புதாசன், சித்தாந்த், அஸ்வின் குமார்; இசை: விஷால் சந்திரசேகர்; இயக்கம்: கார்த்திக் சுந்தர். வெளியீடு: டிஸ்னி ஹாட்ஸ்டார்.

தெலுங்கில் தருண் பாஸ்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவும் ரீத்து வர்மாவும் நடித்து வெளியான 'பெல்லி சூப்புலு' படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்தான் இந்த "Oh மணப்பெண்ணே..".

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்த கார்த்திக்கிற்கு (ஹரீஷ் கல்யாண்) திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவெடுத்து, பெண் பார்க்கப் போகிறார்கள். ஆனால், தவறான வீட்டிற்குப் போய்விடுகிறார்கள். அங்கிருக்கும் சுருதியும் (ப்ரியா பவானிசங்கர்) கார்த்திக்கும் எதிர்பாராதவிதமாக ஒரு அறைக்குள் மாட்டிக்கொள்ள, தங்கள் எதிர்காலக் கனவுகளையும் கடந்த காலத்தையும் இருவரும் பகிர்ந்துகொள்கிறார்கள்.

கார்த்திக்கிற்கு நன்றாக சமைக்க வரும் என்பதையும் சுருதி ஒரு வாகன உணவகம் ஆரம்பிக்க நினைத்ததும் தெரிகிறது. ஆகவே இருவரும் சேர்ந்து அந்தத் தொழிலில் இறங்க முடிவுசெய்கிறார்கள். இதற்கிடையில் கார்த்திக்கை தனது மகளுக்கு திருமணம் செய்துவைத்து வீட்டோடு மாப்பிள்ளையாக்க ஒரு பெரிய தொழிலதிபர் முன்வருகிறார். வரதட்சணைக்காக அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள கார்த்திக்கும் ஒப்புக்கொள்கிறான்.

சுருதியும் கார்த்திக்கும் சேர்ந்து ஆரம்பித்த அந்த வாகன உணவகம் என்ன ஆனது, கார்த்திக் - சுருதி இடையில் இருந்த உறவு என்ன ஆகிறது என்பதெல்லாம் மீதிக் கதை.

படத்தின் துவக்கத்தில், நாயகன் - நாயகி ஆகிய இருவரும் ஒரு அறைக்குள் மாட்டிக்கொண்டதும் இருவரும் மாற்றிமாற்றி தங்கள் கதைகளைச் சொல்வது, சற்று நீளமாக இருந்தாலும் விறுவிறுப்பாகவே நகர்கிறது. அதற்குப் பிறகு, இருவரும் இணைந்து வாகன உணவகம் ஆரம்பிக்கும்வரை படத்தின் போக்கில் பெரிய ஏற்ற இறக்கமில்லை. ஆனால், படத்தின் பிற்பாதியில் சற்று சொதப்பியிருக்கிறார்கள்.

வாகன உணவகம் ஆரம்பித்து, முதல் ஆர்டர் கிடைத்தவுடன் பணத்தையெல்லாம் குடித்து செலவழித்துவிட்டு, கார்த்திக் அந்த ஆர்டரை சொதப்பிவிடுகிறான். இதனால் கோபமடையும் சுருதி அவனிடமிருந்து பிரிகிறாள். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் சுருதியின் வீட்டிற்கு வரும் கார்த்திக் பேசும் ஒரு வசனத்தில் எல்லாவற்றையும் மறந்துவிடுகிறாள் சுருதி. கார்த்திக் தவறுசெய்திருக்க, சுருதி மன்னிப்புக் கேட்கிறாள். எதற்காக இப்படி நடக்கிறதென்றே புரியவில்லை.

படத்தின் துவக்கத்தில் கார்த்திக்கிற்கு எப்படி சமைப்பதற்கு தெரியவந்தது, அதில் எப்படி நிபுணரானான் என்பதைச் சொல்லவெல்லாம் இயக்குனர் மெனக்கெடவில்லை. அதேபோல, கார்த்திக் - சுருதி உறவில் பெரிய அளவில் கெமிஸ்ட்ரியும் ஒர்க்கவுட் ஆகவில்லை.

ஆனால், படத்தின் சில காட்சிகள் ரசிக்கவைக்கின்றன. கார்த்திக்கின் அம்மாவாக வருபவர் அடிக்கடி தனது கணவரை கலாய்க்கும் காட்சிகள் நன்றாக இருக்கின்றன. அதேபோல, ஒரு யூ டியூப் ஆரம்பிப்பதாக கதாநாயகனும் அவனது நண்பர்களும் செய்யும் சேட்டைகளும் சிறப்பாகவே வந்திருக்கின்றன. கதாநாயகனின் நண்பர்களாக வருபவர்கள், நம்மைச் சிரிக்கவைக்க ரொம்பவுமே மெனக்கெடுகிறார்கள். பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. கதாநாயகனின் தந்தையாக வரும் வேணு அரவிந்த் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

படத்தில் "போதை கணமே" என்ற பாடல் நன்றாக இருக்கிறது. பின்னணி இசை எல்லா முக்கியமான தருணங்களிலும் ஒரே மாதிரி அமைந்திருக்கிறது.

'பெல்லி சூப்புலு' தெலுங்கில் அந்த ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற சூப்பர் ஹிட் திரைப்படம். தமிழில் அதை நெருங்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர். அந்த முயற்சியில் அவருக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :