You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை போலீஸ்காரர் கைது, இடைநீக்கம்: பொது இடத்தில் இரு தமிழ் இளைஞர்களை மோசமாகத் தாக்கிய வழக்கில் நடவடிக்கை
இலங்கையில் இளைஞர்கள் இருவரை மனிதாபிமானமற்ற முறையில், பொது இடத்தில் வைத்து தாக்கிய போக்குவரத்து போலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளதாக போலீஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, குறித்த போலீஸ் உத்தியோகஸ்தர் பணியிருந்து இடைநிறுத்தப்பட்டதாக அமைச்சர் சரத் வீரசேகர கூறியிருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேசத்தில் நேற்று (அக்டோபர் 22) இளைஞர்கள் இருவரை போலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தாக்கும் காட்சிகளைக் கொண்ட வீடியோ ஒன்று, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.
இந்த வீடியோவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியனும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்ததோடு, "போலீசார் அராஜகம் மட்டக்களப்பில் தொடர்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன், ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கு இது கேட்குமா என்று பொருள்படும் ஒரு குறிப்பையும் அவர் இட்டிருந்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர பதவி வகிப்பதும், அந்த அமைச்சின் கீழேயே போலீஸ் திணைக்களம் வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து மேற்படி சம்பவம் தொடர்பில் நேற்று பேசிய அமைச்சர் சரத் வீரசேகர; "பொதுமக்களைத் தாக்குவதற்கு போலீஸாருக்கு அதிகாரமில்லை" என்றும், "சட்டத்தை அமல்படுத்துவதுதான் போலீஸாரின் பணி" எனவும் தெரிவித்திருந்தார். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் மா அதிபர் மற்றும் கிழக்கு மாகாணத்துக்கான சிரேஷ்ட பிரதிப் போலீஸ் மா அதிபர் ஆகியோரை அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்த சம்பவத்தில் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் இருவரே இவ்வாறு தாக்கப்பட்டனர்.
ஏறாவூர் போலீஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றிய போலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகவே குறிப்பிட்ட காணொளியில் தெரிகிறது.
தாக்குதலுக்கான பின்னணி
குறித்த பகுதியில் விபத்தொன்று நடைபெற்றதாகவும், அந்த விபத்து நடந்த இடத்தை - அளந்து அடையாளப்படுத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மேற்படி இளைஞர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் அந்த இடத்தை மிகவும் வேகமாகக் குறுக்கறுத்து கடந்த சென்றுள்ளனர் என்றும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிக்கிறார்.
இதன்போது போலீஸாரின் அளவை நாடா - அந்த இளைஞர்களின் மோட்டார் சைக்கிளில் மாட்டி இழுபட்டுச் சென்ற போதிலும், அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றதாகவும் அமைச்சர் கூறுகிறார்.
இதனையடுத்தே, அந்த இளைஞர்களை குறித்த போலீஸ் உத்தியோகஸ்தர் விரட்டிச் சென்று - பிடித்து தாக்கியுள்ளார் எனக் குறிப்பிட்ட அமைச்சர் "அவ்வாறு தாக்குவதற்கு குறித்த போலீஸ் உத்தியோகஸ்தருக்கு உரிமை கிடையாது" எனவும் தெரிவித்தார்.
இன்று (23) கைது செய்யப்பட்ட மேற்படி போலீஸ் உத்தியோகஸ்தர், ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி நடக்கவுள்ளது.
பிற செய்திகள்:
- காரைக்கால் பாமக மாவட்டச் செயலாளர் வெட்டிக் கொலை
- டி 20 உலகக் கோப்பை: கோலி சிறப்பாக பிரியாவிடை பெற வரலாறு வழங்கும் வாய்ப்பு
- வைரமா, வனமா? ரூ.55,000 கோடி மதிப்புள்ள வைர சுரங்கம் பற்றிய ஆய்வு
- உண்ணக்கூடிய மண்ணையும் மலையையும் கொண்ட அற்புதத் தீவு - எங்குள்ளது?
- வங்கதேசத்தில் இஸ்லாம் இனி அதிகாரபூர்வ மதமாக இருக்காதா? மதச்சார்பற்ற அரசாகிறதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்