You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க வரலாறு: கொலம்பஸுக்கு முன்பே அமெரிக்காவில் கால் பதித்த வைக்கிங் இனம் - விஞ்ஞானிகள் விளக்கம்
கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அதாவது, 1,000 ஆண்டுகளுக்கு முன்பே, வட அமெரிக்காவில் வைக்கிங் குடியேற்றங்கள் இருந்ததாக ஓர் ஆய்வு கூறுகிறது.
டென்மார்க், நார்வே, ஸ்வீடன் போன்ற ஸ்கேன்டிநேவியன் நாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகளைச் சேர்ந்த கடல் பயணங்களை மேற்கொள்ளும் சமூக மக்களைத் தான் வைக்கிங் என்று அழைக்கிறார்கள். அவர்கள் 9 - 11ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் கடல் கொள்ளை, வர்த்தகம், புதிய இடங்களைக் கண்டுபிடிப்பது மற்றும் தங்களின் காலனி ஆதிக்கத்துக்குள் கொண்டு வருவது போன்ற செயல்களிலில் ஈடுபட்டு வந்தனர்.
கிறிஸ்துவுக்குப் பின் 1021ஆம் ஆண்டில், கனடாவிலுள்ள நியூஃபவுண்ட்லேண்ட் என்கிற பகுதியில் வைக்கிங் சமூகத்தினர் குடியேறியதாக, மரங்களில் உள்ள வளையங்களை வைத்து காலத்தைக் கண்டுபிடிக்கும் புதிய டேட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ரேடியோ கார்பன் டேட்டிங் என்பது ஒரு பொருளில் இருக்கும் கார்பனின் (கார்பன்-14) கதிரியக்க ஐசோடோப்களை அளவிடும் ஒரு தொழில்நுட்பமாகும். கார்பன்-14 காலப்போக்கில் சிதையும். அது எவ்வளவு மீதம் உள்ளது என்பதை அளவிடுவதன் மூலம் ஒரு பொருளின் வயதைக் கணக்கிடலாம்.
1492ஆம் ஆண்டு அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடிப்பதற்கு முன் ஐரோப்பியர்கள் அப்பகுதிக்குச் சென்றதாக அறியப்படுகிறது. ஆனால் இப்போது தான், முதல்முறையாக ஆராய்ச்சியாளர்கள் ஒரு துல்லியமான காலத்தைக் குறிப்பிடுள்ளனர்.
நார்ஸ் குடியேற்றப் பகுதியான லேன்ஸ் ஓ மெடோஸ் (L'Anse aux Meadows) பகுதியில் இருந்த மூன்று மரத் துண்டுகளின் மர வளையங்களை பகுப்பாய்வு செய்ததாக விஞ்ஞானிகள் கூறினர்.
முன்பு ஒரு காலத்தில் ஏற்பட்ட சூரிய புயலால், வளிமண்டலத்தில் ஒரு ரேடியோ கார்பன் சிக்னல் உருவானது. அதைப் பயன்படுத்தி, மரத்தை அறுத்த ஆண்டு 1021 என துல்லியமாக குறிப்பிட முடிந்தது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அப்படி ஒரு பெரிய சூரிய புயல் (சூரியனிலிருந்து மிகப் பெரிய அளவில் கதிர்வீச்சுக்கள் பூமிக்கு வருவது தான் சூரியப் புயல்) கிறிஸ்துவுக்குப் பிறகு 992ஆம் ஆண்டில் ஏற்பட்டது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது தான் விஞ்ஞானிகள் இந்த முறை துல்லியமான ஆண்டை குறிப்பிட வழி வகுத்தது.
"பார்க்ஸ் கனடா என்கிற கனடாவின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஓரு முகமை மேற்கொண்ட விரிவான முந்தைய ஆய்வுகள் அடிப்படையில் அந்த மரத் துண்டுகளுக்கும் நார்ஸ் சமூகத்தினருக்குமான தொடர்புகள் நிறுவப்பட்டுள்ளன" என அந்த ஆய்வு கூறுகிறது.
மேலும் அந்த மரத் துண்டுகளில் இரும்பு சாதனங்களைக் கொண்டு வேலை செய்யப்பட்டுள்ளதற்கு ஆதாரங்கள் இருப்பதாகக் கூறுகிறது அந்த ஆய்வு.
லேன்ஸ் ஓ மெடோஸ் (L'Anse aux Meadows) என்ற புல்வெளியை தளமாகக் கொண்டு, தெற்கு பகுதிகள் உட்பட பல பகுதிகளில் தேடுதல் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
ஸ்காட்லாந்தில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஃபார் நார்தர்ன் ஸ்டடீஸ் அமைப்புடன் தொடர்புடைய வைக்கிங் விவகாரங்கள் நிபுணரான முனைவர் கலின் பாடெ, வைக்கிங் சமூகத்தினர் அப்பகுதியில் கி.பி. 1000 ஆண்டில் இல்லை என கூறவில்லை என்கிறார்.
"இந்த ஆய்வு குறுகிய காலத்துக்கு மட்டுமே வாழ்ந்த வைக்கிங் சமூகம், மரத்துண்டுகள் வேலை பார்க்கப்பட்ட 1021ஆம் ஆண்டில் அங்கு வாழ்ந்ததாகக் கூறுகிறது. அம்மரத்துண்டு கட்டங்களைக் கட்டுவது அல்லது கப்பல்களை பழுதுபார்ப்பது தொடர்புடையதாக இருந்ததிருக்கலாம்" என்கிறார் அவர்.
"ஓர் அகழ்வாராய்ச்சியாளராக இதை, ஒரு தொழில் ரீதியிலான நடவடிக்கையாகப் பார்க்கிறேன். இது ஒரு முதல் நடவடிக்கையாகவோ, கடைசி நடவடிக்கையாகவோ இருக்க வேண்டும் என அவசியமில்லை" என்கிறார்.
நியூஃபவுண்ட்லேண்ட் தீவின் வடமுனையில் உள்ள லேன்ஸ் ஓ மெடோஸ் (L'Anse aux Meadows), யுனெஸ்கோ அமைப்பின் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த இடம் மட்டுமே வைக்கிங் சமூகத்தினர் வட அமெரிக்காவில் நிறுவிய ஒரே தளம் மற்றும் ஐரோப்பியர்கள் புதிய உலகத்தில் குடியேறியதற்கான மிகப் பழமையான ஆதாரம்.
பிற செய்திகள்:
- டி 20 உலகக் கோப்பை: கோலி சிறப்பாக பிரியாவிடை பெற வரலாறு வழங்கும் வாய்ப்பு
- வைரமா, வனமா? ரூ.55,000 கோடி மதிப்புள்ள வைர சுரங்கம் பற்றிய ஆய்வு
- உண்ணக்கூடிய மண்ணையும் மலையையும் கொண்ட அற்புதத் தீவு - எங்குள்ளது?
- வங்கதேசத்தில் இஸ்லாம் இனி அதிகாரபூர்வ மதமாக இருக்காதா? மதச்சார்பற்ற அரசாகிறதா?
- Oh மணப்பெண்ணே: சினிமா விமர்சனம்
- மற்றுமோர் அமைச்சர் மீது அண்ணாமலை குற்றச்சாட்டு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்