ஆப்கன் தாலிபன்களை 'தீவிரவாதிகள்' ஆக பார்ப்பதை நிறுத்துகிறதா இந்தியா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
- பதவி, பிபிசி ஹிந்தி
தாலிபன்கள் மீதான இந்தியாவின் அணுகுமுறை மாறி வருவதாக தெரிகிறது. கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மித்தல், தாலிபன்களின் அரசியல் அலுவலகத்தின் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானெக்ஸாயைச் சந்தித்ததாக இந்திய வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை மாலையில் தெரிவித்தது.
இருப்பினும், இதுபோன்ற தொடர்புகள் இந்தியாவிற்கும் தாலிபன்களுக்கும் இடையே கடந்த பல மாதங்களாக இருந்து வருவதாக பலர் நம்புகின்றனர். தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை இந்திய அரசு அதிகாரபூர்வமாக ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறை. தாலிபன்களின் வேண்டுகோளின் பேரில் இந்த சந்திப்பு நடந்ததாக இந்தியா கூறியுள்ளது.
தாலிபன்களிடமிருந்து கோரிக்கைகளைப் பெறுவதும், இந்தியா அதை ஏற்றுக்கொள்வதும், நிலைப்பாடு மாறுவதற்கான அறிகுறி என்று பல நிபுணர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், தாலிபன்கள் குறித்து இந்தியா எச்சரிக்கையாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
பாதுகாப்பு மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்புவது குறித்து தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடந்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் நிலம் இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவில்லை, என்பது உறுதிசெய்யப்பட வேண்டும் என்று தீபக் மித்தல் தாலிபனின் பிரதிநிதியிடம் கூறியிருக்கிறார்.
சீக்கிய சமூகத்தினர் உட்பட 140 இந்தியர்கள் இன்னும் காபூலில் சிக்கியுள்ளனர். அவர்களை டெல்லிக்கு அழைத்து வர வேண்டும். இதுநாள்வரை 112 ஆப்கானியர்கள் உட்பட 565 பேரை இந்தியா டெல்லிக்கு அழைத்து வந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
தாலிபன் அளித்த உறுதிமொழி
எல்லா விவகாரங்களும் நேர்மறையான கண்ணோட்டத்தில் பார்க்கப்படும் என்று தாலிபன் பிரதிநிதி இந்தியாவுக்கு உறுதியளித்ததாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்திய தூதர் சந்தித்த தாலிபனின் பிரதிநிதி (ஷேர் முகமது அப்பாஸ்), டேராடூனில் உள்ள இந்திய இராணுவ அகாதமியில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா ஆப்கானிஸ்தானுடன் அரசியல் மற்றும் வணிக உறவுகளைப் பேண வேண்டும் என்று ஷேர் முகமது அப்பாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக, இந்தியா தாலிபன்களை ஒரு பயங்கரவாதக் குழுவாகக் கருதியது. தாலிபனின் ஒரு பகுதியான ஹக்கானி குழு குறித்தும் இந்தியா கவலை கொண்டுள்ளது. 2008-09 ஆண்டில் காபூலில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தாலிபனின் துணைத் தலைவர் சிராஜுதீன் ஹக்கானிதான் பொறுப்பு என்று நம்பப்படுகிறது.
கடந்த சில மாதங்களில், ஆப்கானிஸ்தானில் உள்ள பல குழுக்களுடன் தொடர்பில் இருப்பதாக இந்தியா கூறியுள்ளது.
ஆனால், ஆப்கானிஸ்தானில் வலுகட்டாயமாக கைப்பற்றப்பட்ட ஆட்சி அதிகாரத்தை இந்தியா ஏற்காது என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் முன்னதாக கூறியிருந்தார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சியில் அமர்ந்ததும் இந்தியா தனது தூதரகத்தை காலி செய்ய முடிவு செய்தது. அதே சமயம், தாலிபன்கள் வந்த பிறகும் காபூலுடனான ராஜீய உறவை இந்தியா முறித்துக் கொள்ளவில்லை என்று ஹிந்து நாளேட்டின் செய்தி தெரிவிக்கிறது.
கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்தபடி, ஆப்கானிஸ்தான் விவகாரங்களை அமெரிக்கா கவனிக்கும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் செவ்வாய்க்கிழமை தெரிவித்திரு்நதார். இந்தியாவும் அவ்வாறே இனி செய்யும் என தெரிகிறது. இப்போது மோதி அரசு தாலிபன்களுடன் ராஜீய அளவிலான பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. அங்கு அரசு முறைப்படி அமைந்த பிறகு, அதை இந்தியா ஏற்கலாம் என்றும் தெரிகிறது.

பட மூலாதாரம், EPA
தாலிபன் மீது இந்தியா கடுமை காட்டவில்லை
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சுழற்சி முறையிலான தலைமைப் பொறுப்பு, ஆகஸ்ட் மாதத்தில்,இந்தியாவிடம் இருந்தது. அப்போதுதான் ஆப்கானிஸ்தானில் பரபரப்பான மாற்றங்கள் அனைத்துமே நிகழ்ந்தன. ஆனால் கவுன்சில் கூட்டத்தில் தாலிபன்கள் மீது எந்தக் கடுமையான நிலைப்பாட்டையும் இந்தியா எடுக்கவில்லை.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தரமற்ற உறுப்பினராக இருந்தாலும், எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றப்படுவதற்கு இந்தியாவின் கையொப்பம் அவசியம். இந்தியா தலைமையில் கவுன்சில் கூட்டம் நடந்த கடைசி நாளன்றும், ஆப்கானிஸ்தான் தொடர்பாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தாலிபன்களை கடுமையாக எதிர்க்கும் எதுவும் அதில் இடம்பெற்றிருக்கவில்லை.
UNSC (ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில்) தீர்மானம் தொடர்பாக, இந்தியாவின் வெளியுறவு செயலர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா திருப்தி தெரிவித்துள்ளார். ஆனால் இந்தியாவின் முக்கிய எதிர்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான பி.சிதம்பரம் மோதி அரசை சாடியுள்ளார்.
"ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ஆப்கானிஸ்தான் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அரசு, தன்னைத்தானே பாராட்டிக்கொள்கிறது. இந்த தீர்மானத்திற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. முதலாவதாக, இந்தியாவுக்கு திருப்தி அளிக்கும் வகையில் பிரச்னை தீர்க்கப்பட்டது. ஆனால் நடந்தது அது அல்ல. இரண்டாவது பொருள் என்னவென்றால், நாம் நினைத்ததை தீர்மானத்தில் எழுதி, ஒரு சிலரை அதில் கையெழுத்திட வைத்துள்ளோம். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் செவ்வாய்க்கிழமை நடந்தது இதுதான். சீனா, பாகிஸ்தான் மற்றும் தாலிபன் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான் ஆகியவை இந்தியாவிற்கு கவலை அளிக்கும் விஷயங்கள்,"என்று சிதம்பரம் புதன்கிழமை ட்வீட் செய்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்த அஷ்ரப் கனியுடன் இந்தியா நெருங்கிய உறவைக் கொண்டிருந்தது. இது குறித்து பாகிஸ்தான் எப்போதும் அதிருப்தியுடனேயே இருந்து வந்தது. தாலிபன் பாகிஸ்தானின் கைப்பாவை என்று இந்தியா கருதுகிறது. ஆனால் அதிபர் அஷ்ரப் கனி இப்போது நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். ஆப்கானிஸ்தானில் பல்வேறு திட்டங்களில் மூன்று பில்லியன் டாலர்களை இந்தியா முதலீடு செய்துள்ளது.
இவை தவிர, ஆப்கானிஸ்தானின் நாடாளுமன்ற கட்டடத்தை 9 கோடி டாலர்கள் செலவில் இந்தியா கட்டிக் கொடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இந்தியாவுக்கு என நல்ல மதிப்பு உள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றம்
ஆப்கானிஸ்தானின் அனைத்து பகுதிகளிலும் இந்தியாவின் வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தான் மாநாட்டில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியிருந்தார். ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களிலும் இந்தியா வளர்ச்சித் திட்டங்களில் செயல்பட்டு வருகிறது என்று ஜெய்சங்கர் கூறினார்.
2019-2020 இல் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 1.5 பில்லியன் டாலர்கள் ஆகும்.
ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் வருகை இந்தியாவிற்கு ஒரு செயல்தந்திர பின்னடைவு என்று கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில், ஆப்கன் மக்கள் மத்தியில் இந்தியாவுக்கு நல்ல மதிப்பு இருந்தது. ஆனால் திடீரென்று எல்லாமே சரிந்துவிட்டது.
தாலிபன்களுடன் தொடர்பு கொள்வதை இந்தியா தாமதப்படுத்திவிட்டதாகவும் பலர் கூறுகின்றனர். தாலிபன்கள் தங்கள் அரசியல் அலுவலகத்தை தோஹாவில் 2013 இல் நிறுவினர். கத்தாருடனான இந்தியாவின் உறவும் நன்றாக உள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தானில் ஆட்சிக்கு வந்தபிறகே தாலிபனுடன் இந்தியா பேச்சுவார்த்தையைத் தொடங்கியது.
இந்தியாவின் கவலை
பாகிஸ்தானிய ராணுவம் மற்றும் உளவுத்துறை நிறுவனத்துடன் தாலிபன்களின் நெருக்கம் பற்றியும் இந்தியா கவலை கொண்டுள்ளது. மறுபுறம், இந்தியா ஆப்கானிஸ்தானின் நிலத்தை தனக்கு எதிராக பயன்படுத்துவதாக பாகிஸ்தான் இந்தியா மீது குற்றம் சாட்டி வருகிறது.
பாகிஸ்தான் தனது இரண்டாவது வீடு என்று இப்போது தாலிபன் சொல்கிறது. சீனாவும் தாலிபன்களுடன் கைகோர்த்து நிற்கிறது. மறுபுறம் அமெரிக்கா அங்கிருந்து முழுமையாக வெளியேறிவிட்டது. எனவே இந்தியா இப்போது விருப்பத்தேர்வு இல்லாத நிலையில் உள்ளது. ஆப்கானிஸ்தான் இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிக்காமல் இருக்கவேண்டும் என்று இந்தியா கவலைப்படுகிறது.
1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியில் இருந்தபோது, அது சர்வதேச அளவில் தனிமைப்படுத்தலை எதிர்கொண்டது. இருப்பினும் பாகிஸ்தான், செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதை அங்கீகரித்தது. ஆனால் இந்த முறை நிலைமை முற்றிலும் மாறுபட்டது.
சீனா, ரஷ்யா மற்றும் இரான் தாலிபன்களுடன் இணைந்து செயல்படுவதை கோடிக்காட்டியுள்ளன. தாலிபன்கள் பொறுப்பான அரசாக செயல்பட்டால், இந்தியா அதை அங்கீகரிக்க வேண்டும் என்று இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங், கடந்த மாதம் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.
ஆனால், இந்தியா அவசரமாக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது, இப்போதைக்கு சூழலை கண்காணிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மொத்தத்தில் ஆப்கானிஸ்தானில் இந்தியா தனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்றால், தாலிபன்களைத் தொடர்புகொள்வதைத் தவிர இந்தியாவுக்கு வேறு வழியில்லை என்பதே அந்த நிபுணர்கள் வழங்கும் அறிவுரையாகும்.
பிற செய்திகள்:
- உயரும் இந்திய ஜிடிபி: 'ஆபத்து நீங்கவில்லை' என எச்சரிக்கும் நிபுணர்கள்
- அழிவின் விளிம்பில் 30% காட்டு மரங்கள் - உலகத்துக்கு புதிய எச்சரிக்கை
- மனநலம் தொடர்பான பிரச்னைகளால் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது?
- இந்திய அரசியலமைப்பின் முதல் திருத்தத்திற்கு வழிவகுத்த தமிழக வழக்கு தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












