அமெரிக்காவில் மலைச் சிங்கத்திடம் போராடி குழந்தையைக் காத்த கலிஃபோர்னியா தாய்

மலைச் சிங்கம். (கோப்புப்படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மலைச் சிங்கம். (கோப்புப்படம்)

தமது ஐந்து வயது மகனைத் தாக்கிய மலைச் சிங்கத்திடம் போராடி குழந்தையை மீட்டுள்ளார் அமெரிக்கத் தாய் ஒருவர், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இது நிகழ்ந்துள்ளது.

லாஸ் ஏஞ்சலஸ் நகரின் மேற்கே உள்ள சாண்டா மோனிகா மலைப் பகுதியில் உள்ள கலாபசஸ் எனுமிடத்தில் தமது வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த அந்த ஐந்து வயது சிறுவனை மலைச் சிங்கம் தாக்கியது.

பின்னர் அந்தச் சிறுவனைப் பிடித்து புல்வெளியில் தரதரவென்று இழுத்துச் சென்றது.

அந்த மலைச் சிங்கத்தை நோக்கி நோக்கி ஓடிய குழந்தையின் தாய், அந்தச் சிங்கம் குழந்தையைத் அதன் பிடியிலிருந்து விடும் வரை வெறும் கையாலேயே அதை அடித்தார்.

அதன் பின்னர் குழந்தையை விட்டுவிட்டு அந்தச் சிங்கம் ஓடிவிட்டது. பின்னர் வனவிலங்கு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட அந்த மலை சிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டது.

தலை மற்றும் உடல் பகுதிகளில் காயமடைந்த அந்தச் சிறுவனுக்கு லாஸ் ஏஞ்சலஸில் உள்ள ஒரு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. என்றும் அச்சிறுவனின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்றும் அசோசியேட்டட் பிரஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

"அந்தத் தாய்தான் குழந்தையின் உயிரைக் காப்பாற்றினார்," என்று கலிஃபோர்னியாவின் மீன்வளம் மற்றும் வனவிலங்கு துறை செய்தித்தொடர்பாளர் கேப்டன் பேட்ரிக் ஃபாய் கூறியுள்ளார் என்றும் ஏ.பி செய்தி கூறுகிறது.

கலிஃபோர்னியா 2019இல் குடியிருப்புப் பகுதியில் இருந்த மரத்தில் சிக்கிக்கொண்ட மலைச் சிங்கம் மீட்கப்பட்டது.

பட மூலாதாரம், CALIFORNIA DEPARTMENT OF FISH AND WILDLIFE

படக்குறிப்பு, கலிஃபோர்னியா 2019இல் குடியிருப்புப் பகுதியில் இருந்த மரத்தில் சிக்கிக்கொண்ட மலைச் சிங்கம் மீட்கப்பட்டது.

நிகழ்விடத்திற்கு வந்த வனவிலங்கு அலுவலர் ஒருவர் பின்னர் அந்த விலங்கைக் கண்டுபிடித்தார். அப்பகுதியில் இருந்த புதர் ஒன்றில் ஒரு மலைச் சிங்கம், மூச்சு வாங்கிக்கொண்டே தனது காதை வைத்துத் தேய்த்துக்கொண்டிருந்தபோது அவரது கண்ணில்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அது இருந்த தூரம் மற்றும் அதன் நடத்தை ஆகியவற்றின்மூலம், அந்த மலைச் சிங்கம்தான் குழந்தையைத் தாக்கி இருக்கக்கூடும் என்று சந்தேகித்த அந்த அலுவலர் அந்த இடத்திலேயே அதைக் கொன்று விட்டார்.

பின்னர் நடத்தப்பட்ட டி.என்.ஏ பரிசோதனையில் அந்த விலங்குதான் குழந்தையைத் தாக்கியது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வட அமெரிக்க கண்டத்தில் மலைச் சிங்கங்கள் மனிதர்களை தாக்குவது மிகவும் அரிதானது.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட மலைச் சிங்கம் வயதில் மிகவும் குறைந்தது என்று வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வேட்டையாடுவது மற்றும் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று இன்னும் அந்த விலங்கு முழுமையாகக் கற்றுக் கொண்டிருக்கவில்லை என்று வல்லுநர்கள் நம்புவதாக சிபிஎஸ் நியூஸ் தெரிவிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :