கியூபாவில் தனியார் நிறுவனங்களை முதல்முறையாக அனுமதிக்கும் கம்யூனிச அரசு - பொருளாதார சீர்திருத்தம்

பட மூலாதாரம், Getty Images
கியூபாவில் கடந்த ஜூலை மாதம் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் நடந்துள்ள சூழலில், சிறிய மற்றும் நடுத்தர ரக தனியார் தொழில்களை தொடங்குவதை அந்நாட்டு கம்யூனிச அரசு சட்டப்பூர்வமாக்கி உள்ளது.
பல பத்தாண்டுகளாக இயங்கும் தனியார் தொழில்களுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்க கியூப அரசு முடிவு செய்துள்ளது என்று போராட்டம் தொடங்கும் முன்பே கியூப அரசு ஊடகம் தெரிவிக்கிறது என்று ஜூன் மாதம் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய விதிகளின்படி 100 பேர் வரை பணியமர்த்தும் தனியார் நிறுவனங்கள் இனி கியூபாவில் அனுமதிக்கப்படும். இதன்மூலம் இதுவரை சட்டப்பூர்வ அனுமதி இல்லாத உணவகங்கள், சுற்றுலா சார்ந்த தொழில்கள், கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்ட பல்லாயிரம் தொழில்களுக்கு இனி சட்ட ரீதியான அனுமதி கிடைக்கும்.
தமது பொருளாதார மாதிரியை மேம்படுத்த கியூபா வலிமையான அடிகளை எடுத்து வைக்கிறது என்று அந்நாட்டு அதிபர் மிகுயேல் டையாஸ்-கேனல் தெரிவித்துள்ளார்.
கியூபாவின் பொருளாதாரம் சீரழிந்துள்ளதாகக் குற்றம் சாட்டி பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு போராட்டம் நடத்தியதால்தான் இந்தத் திட்டங்களை அரசு முன்னெடுத்துள்ளது என்று கியூப அரசின் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜூலையில் நிகழ்ந்த போராட்டங்களின்போது கொரோனா பெருந்தொற்றை கியூப அரசு கையாண்ட விதத்தை விமர்சித்த போராட்டக்காரர்கள் அந்த நாட்டில் அரசியல் மாற்றம் தேவை என்று வலியுறுத்தினர்.
கியூபா முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டங்களில் டஜன் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்; குறைந்தது ஒருவர் உயிரிழந்தார்.

பட மூலாதாரம், Getty Images
அரசுக்குச் சொந்தமான தொழில் நிறுவனங்கள் மட்டுமே இயங்குவது விதியாக உள்ள கியூபாவில் தற்போது தனியார் நிறுவனங்களும் இயங்க அனுமதிக்கப்படுவது அந்நாட்டு அரசின் கொள்கைகளில் ஒரு மிகப்பெரிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
அரசுக்கு எதிரான போராட்டங்கள் கியூபாவில் பொருளாதார நெருக்கடி நிலைக்கு நடுவே நடந்தது.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் இறக்குமதி வரி எதையும் செலுத்தாமல் உணவு மருந்து மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை கியூபாவிற்கு கொண்டு வரலாம் என்று ஜூலை மாதம் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இறக்குமதி வரியை நீக்கியது நாட்டில் நிலவும் உணவு மற்றும் மருந்து பற்றாக்குறையை போக்குவதற்கான ஒரு வழி என்று சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
கியூபாவில் சுற்றுலா மிகவும் முக்கியமான பொருளாதாரத் துறைகளில் ஒன்றாக உள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக உலகெங்கிலும் விதிக்கப்பட்டுள்ள பயணத் தடைகளால் கியூபவாவின் சுற்றுலாத்துறை மிகவும் மோசமடைந்துள்ளது.
சர்க்கரையால் உண்டான கசப்பு
சர்க்கரை ஏற்றுமதி மூலம் மிகவும் கணிசமான வருவாய் ஈட்டுகிறது கியூபா; ஆனால் இந்த ஆண்டு கரும்பு விளைச்சல் எதிர்பார்த்ததை விடவும் மிகவும் மோசமாக இருந்தது.
இதன் காரணமாக அரசின் கைவசம் இருந்த அந்நிய செலாவணி கையிருப்பு சரிந்தது. அந்நிய செலாவணி குறைந்ததன் காரணமாக கியூபாவில் தட்டுப்பாடு நிலவும் பொருட்களை அந்நாட்டு அரசால் இறக்குமதி செய்ய முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அரசு மற்றும் அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளே ஜூலை மாதத்தில் நடந்த போராட்டங்கள் மற்றும் கியூபாவின் பரவலான பிரச்னைகளுக்கு காரணம் என்று கியூபா அரசு குற்றம் சாட்டியது.
நாட்டை வீழ்த்துவதற்காக அமெரிக்கா அமர்த்திய கூலிப்படையினர்தான் இந்தப் போராட்டக்காரர்கள் என்று கூறிய அவர், தனது ஆதரவாளர்கள் வீதிக்கு வந்து கியூப புரட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அதிபர் மிகுயேல் டையாஸ்-கேனல் அப்போது கூறியிருந்தார்.
1959-ஆண்டு ஃபிடெல் காஸ்ட்ரோ தலைமையில் நடந்த கியூபாவின் எழுச்சியை அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
1959ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்த க்யூபாவின் அரசை வீழ்த்திய புரட்சிக்கு தலைமை தாங்கியவர் ஃபிடல் காஸ்ட்ரோ. அந்த புரட்சியில் ராவுல் காஸ்ட்ரோ கமாண்டராக செயல்பட்டார்.
அதன் பிறகு 2006ஆம் ஆண்டு உடல் நலம் மோசமாகும் வரை நாட்டின் அதிபர் பொறுப்பில் இருந்தார் ஃபிடல் காஸ்ட்ரோ. அதன்பின் அதிபர் பொறுப்பை 2008ஆம் ஆண்டு தனது சகோதரரிடம் வழங்கினார். ஃபிடல் காஸ்ட்ரோ 2016ஆம் ஆண்டு மரணமடைந்தார். தொடர்ந்து அதிபராக இருந்த ராவுல் காஸ்ட்ரோ 2019 ஏப்ரல் மாதம் பதவியில் இருந்து விலகினார்.
பிற செய்திகள்:
- மூலிகையே மூலதனம்: பெண்களை தொழில் முனைவோர் ஆக்கும் பார்வதியின் கதை
- 'மாயன் நாள்காட்டி': உலகம் அழியும் என்று கணித்தது உண்மையா?
- ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி: ஒரு டோஸ் போதும் - 10 முக்கிய தகவல்கள்
- சிந்து சமவெளியில் பேசப்பட்டது தொல் திராவிட மொழி: ஆய்வுக் கட்டுரை தரும் தகவல்
- மீராபாய் சானு முதல் நீரஜ் சோப்ரா வரை - டோக்யோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் எதிர்பார்ப்புகளும் எதார்த்தங்களும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












