You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: சிறுநீரகம், நுரையிரல், இதயம் பாதிக்கப்படலாம் - புதிய ஆய்வு
- எழுதியவர், ஜிம் ரீட்
- பதவி, பிபிசி செய்திகள்
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் இளம் வயதினர் கூட, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது போல் உடல் உபாதைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
19 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனாவுக்கான சிகிச்சை வழங்கப்படும் போது, 10-ல் 4 பேருக்கு சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன.
2020ஆம் ஆண்டில் கொரோனா முதல் அலையின் போது, பிரிட்டனில் இருக்கும் 302 மருத்துவமனைகளில் அனைத்து வயது வரம்பைச் சேர்ந்த 73,197 நோயாளிகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
"இது வெறுமனே வயதானவர்கள், பலவீனமானவர்களுக்கான நோய் அல்ல என்பது தான் செய்தி" என்கிறார் பேராசிரியர் கலும் செம்பில். இவர் தான் இந்த ஆய்வை தலைமை தாங்கி வழிநடத்தியவர்.
"கொரோனா வெறுமனே ஒரு ஃப்ளூ காய்ச்சல் அல்ல. பல இளம் வயதினர் கூட சிக்கலான உடல் உபாதைகளோடு மருத்துவமனைக்கு வருவதை நாங்கள் பார்க்கிறோம். அதில் சிலரை எதிர்காலத்திலும் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை வழங்க வேண்டி இருக்கிறது. இதைத் தான் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன" என்கிறார்.
இந்த ஆய்வு பிரிட்டனின் ஏழு பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்டது. கொரோனாவின் போது சிக்கலான உடல் உபாதைகளைக் கொண்டவர்களின் எண்ணிக்கையை இங்கிலாந்தின் சுகாதாரம், சமூக பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத் துறை கவனத்தில் எடுத்துக் கொண்டு அவர்களை தனியாகக் குறிப்பிட்டது.
கொரோனாவுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில், கிட்டத்தட்ட பாதி பேர், குறைந்தபட்சமாக ஒரு மருத்துவ சிக்கலையாவது எதிர்கொண்டார்கள். பொதுவாக சிறுநீரகப் பிரச்சனைகள், நுரையிரல் சார் பிரச்சனைகள் மற்றும் இருதயம் சார் பிரச்சனைகளால் அவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.
குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களில், 51 சதவீதம் பேர் ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டார்கள். இவர்களைப் போல 30 - 39 வயதினர்களில் 37 சதவீதம் பேரும், 40 - 49 வயதினர்களில் 44 சதவீதம் பேரும் ஏதாவது ஒரு சிக்கலான உடல் உபாதையால் பாதிக்கப்பட்டார்கள். அதை செவிலியர்களோ அல்லது ஆராய்ச்சியில் பங்கெடுத்த மாணவர்களோ பதிவு செய்திருக்கிறார்கள்.
நோயெதிர்ப்பு மண்டலமே பாதித்திருக்கலாம்
தீவிர கொரோனா வைரஸ் பாதிப்பால் எப்படி உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன என்பது தொடர்பாக மருத்துவர்களிடம் ஒரு தெளிவான பதில் இல்லை. மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலமே, உடலில் ஆரோக்கியமாக இருக்கும் திசுக்களை பாதித்திருக்கலாம் என கருதப்படுகிறது.
எஸ்ஸெக்ஸைச் சேர்ந்த பால் கோட்ஃப்ரேவுக்கு மார்ச் 2020-ல் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன் பிறகு நெஞ்சு வலி என கூறியவரை பரிசோதித்துப் பார்த்த போது அவர் பிராங்கியெக்டாசிஸ் (bronchiectasis) என்கிற நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். நுரையிரலில் இருக்கும் பிராங்கி என்கிற பகுதியில் ஏற்படும் தொற்று மற்றும் அழற்சியால் ஏற்படும் நோய் இது.
"தேசிய சுகாதார சேவை (பிரிட்டன் நாட்டின் பொது சுகாதார அமைப்பு) ஊழியர்கள் என்னை கவனித்துக் கொண்டார்கள். அவர்கள்தான் என்னை காப்பாற்றினார்கள். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை" என்கிறார் பால்.
இந்த ஆய்வு, மருத்துவ சஞ்சிகையான 'தி லான்செட்'டில் பிரசுரிக்கப்பட்டது. ஏற்கனவே பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு கூடுதல் சிக்கல் ஏற்படலாம் என அந்த ஆய்வில் கூறப்பட்டிருக்கிறது. அதே போல இளம் வயதினர் மற்றும் நல்ல உடல் நலத்தோடு இருப்பவர்களுக்கு கூட சிக்கலான உடல் நலக்கோளாறுகள் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
என் வாழ்வின் மோசமான அனுபவம்
கால்செஸ்டர் மருத்துவமனையில், பாலுக்கு நிமோனியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவரது இரு நுரையீரலின் அடிப்பகுதிகளும் சீர்குலைந்து இருப்பதாகவும் கூறப்பட்டது. அவர் சக்கர நாற்காலியில் வீட்டுக்கு அனுப்பப்படுவதற்கு முன், இரு வாரங்களுக்கு கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றார்.
19 - 29 வயதுக்கு உட்பட்டவர்களில் 13 சதவீதம் பேரும், 30 - 39 வயதினர்களில் 17 சதவீதம் பேரும், கொரோனா சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகும் தங்களை தாங்களே கவனித்துக் கொள்ள முடியவில்லை என கூறியுள்ளனர். குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களைச் சார்ந்தே அவர்கள் வாழவேண்டியுள்ளது.
"இது என் வாழ்நாளின் மிக மோசமான அனுபவம். 18 மாதங்களுக்குப் பிறகும், இப்போதும் நான் சிக்கலை எதிர்கொள்கிறேன்" என்கிறார் பால். இப்போதும் அவருக்கு இருக்கும் மருத்துவ சிக்கல்களால் அவருக்கு கடுமையான சோர்வு, மூச்சற்ற நிலை போன்றவை ஏற்படுகின்றன.
"என் உடலுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. நான் முன்பு எப்படி இருந்தேனோ அந்த நிலைக்கு மீண்டுவர வேண்டிக்கொள்கிறேன்" என்கிறார் பால்.
இளம் வயதினர்
கொரோனா தொற்றின் தீவிரத்தை நிர்ணயிப்பதில் வயது ஒரு மிகப் பெரிய காரணியாக இருக்கிறது.
இங்கிலாந்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 4,06,687 பேரில் 62 சதவீதத்தினர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
மீதமுள்ள 1,55,866 பேர் 65 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட பின் மருத்துவம் தேவைப்பட்டது.
கொரோனாவால் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்கள், வயதானவர்களுக்கு அதிகம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருவோரின் சராசரி வயது குறைந்து வருகிறது.
இங்கிலாந்தில் ஜூலை 4ஆம் தேதி வரையிலான வாரத்தில், 85 வயதுக்கு மேற்பட்டவர்களில் 17 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 25 - 44 வயதுக்கு உட்பட்டவர்களில் 478 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த ஆய்வு கொரோனா முதல் அலையின் போது 2020 ஜனவரி 17 முதல் 2020 ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இது கொரோன தடுப்பூசி பரவலாக கிடைக்கத் தொடங்குவதற்கும், புதிய கொரோனா திரிபுகள் கண்டுபிடிக்கப்படுவதற்கும் முந்தைய காலம் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள், அதிக சிக்கலான உடல் உபாதைகளை எதிர்கொள்கிறார்கள் என்கிறது இந்த ஆய்வின் தரவு. எனவே தற்போதைய கொரோனா அலைகளில் கொரோனாவின் தீவிரத்தைக் குறைக்க தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தை இது சுட்டிக்காட்டுகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் காலத்தில் மட்டும் ஏற்படும் நோய் சிக்கல்களை ஆராயும் விதத்தில்தான் இந்த ஆராய்ச்சி வடிவமைக்கப்பட்டது. ஆனால் கொரோனாவினால் உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படலாம் என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இது கொரோனாவின் நீண்ட கால பக்க விளைவுகளாக கூட இருக்கலாம்.
"சில தொற்று நோய்களால், நீண்ட காலத்தில் சிறுநீரகப் பிரச்சனைகள், இதயப் பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதை அறிவோம்" என்கிறார் எடின்பரோ பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் அனாமேரி டாக்ஹர்டி.
கொரோனாவும் அப்படிப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
- பழிக்குப் பழி: கணவரைக் கொன்றவரை திருமணம் செய்தபின் சுட்டுக் கொன்ற பெண்
- சீக்கியர்கள் ஏன் உலகெங்கும் அன்பைக் கொண்டாடுகிறார்கள்?
- டேனிஷ் சித்திகி: ஆஃப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட இந்திய புகைப்பட செய்தியாளர் - என்ன நடந்தது?
- ஐரோப்பாவை புரட்டிப் போட்ட பெருவெள்ளம்; முற்றிலும் அழிந்த கிராமங்கள்
- செல்போன் இல்லாமலே பிறருக்கு வாட்சாப் செய்தி அனுப்பும் வசதி பரிசோதனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்