ரஷ்ய சைபர் தாக்குதல்: பதிலடி கொடுப்போம் என்று விளாடிமிர் புதினிடம் கூறிய ஜோ பைடன்

Putin and Biden

பட மூலாதாரம், Getty Images

ரஷ்யாவிலிருந்து நடத்தப்படும் சைபர் தாக்குதல்களை தடுக்க அமெரிக்கா போதிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் தெரிவித்துள்ளார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

புதினுடன் தொலைபேசி வாயிலாக ஒரு மணி நேரம் பைடன் உரையாடிய பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் ரஷ்யா இணையவழித் தாக்குதல்களுக்கான பின்விளைவுகளைச் சந்திக்குமா என்று கேட்டபொழுது அதற்கு 'ஆம்' என்று பதிலளித்தார் பைடன்.

கடந்த மாதம் ஜெனிவாவில் விளாடிமிர் புதின் மற்றும் ஜோ பைடன் ஆகியோர் சந்தித்த பிறகு வெள்ளியன்று அவர்கள் இருவரும் தொலைபேசி வாயிலாக உரையாடினர்.

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த சைபர் தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்க தரப்பு தொடர்ந்து தங்களை தொடர்பு கொண்டதாகக் கூறப்படுவதை ரஷ்ய அரசு மறுத்துள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் தொடர்ந்து இணைய வழித் தாக்குதலுக்கு உள்ளாகும் சமயத்தில் இந்த தொலைபேசி உரையாடல் நிகழ்ந்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் நடந்த இணைய வழித் தாக்குதலில் சுமார் 1,500 அமெரிக்க நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருந்தன.

"ரஷ்ய அரசு செய்யவில்லை என்றாலும், அவர்கள் மண்ணிலிருந்து பணயத் தொகை கேட்டு மிரட்டும் ரான்சம்வேர் தாக்குதல் நடவடிக்கை நிகழ்கிறது என்பதற்கான போதுமான தகவல்களை நாங்கள் அளித்தால், அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்பதை அவரிடம் நான் தெளிவாகக் கூறி விட்டேன்," என்று புதினுடனான தொலைபேசி உரையாடலுக்கு பின்பு பைடன் தெரிவித்துள்ளார்.

ஹேக்கர்கள் பயன்படுத்தும் கணினி சர்வர்களை அமெரிக்க அரசு தாக்குமா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு, 'ஆம்' என்று ஜோ பைடன் பதிலளித்தார்.

ஆனால் வெள்ளியன்று நிகழ்ந்த தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு அமெரிக்க அரசு இந்த இணையவழித் தாக்குதல்கள் தொடர்பாக தங்களை தொடர்பு கொள்ளவில்லை என்று ரஷ்ய அரசு தெரிவிக்கிறது.

இந்தக் குற்றச் செயல்களை ஒன்றாக இணைந்து கட்டுப்படுத்துவதற்கு ரஷ்ய அரசு தயாராக இருந்த போதிலும் கடந்த மாதம் இது தொடர்பாக அமெரிக்க அரசுத்துறை எவற்றிடமிருந்தும் தங்களுக்கு எந்த கோரிக்கையும் வரவில்லை என்று புதினின் அலுவலகம் தெரிவிக்கிறது.

ரஷ்ய சைபர் தாக்குதல்: பதிலடி கொடுப்போம் என்று புதினிடம் கூறிய பைடன்

பட மூலாதாரம், MINERVA STUDIO / GETTY IMAGES

ஆனால் பெயர் வெளியிடப்படாத ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் ரஷ்யாவின் கூற்றை மறுத்துள்ளார் என்கிறது ஏஎஃப்பி செய்தி முகமை.

இணையவழி பாதுகாப்பு தொடர்பாக கூட்டுறவுடன் செயல்படுவதை இரண்டு நாடுகளும் ஆதரிக்கின்றன என்று ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

வர்த்தக நிறுவனங்களின் தகவல்களை முடக்கி வைத்துக்கொண்டு அவற்றை, மீண்டும் நிறுவனத்தின் வசம் விடுவதற்காக இணைய வழித் தாக்குதல் நடத்தியவர்கள் பணயத் தொகை கேட்கும் ரான்சம்வேர் தாக்குதல்கள் சமீப ஆண்டுகளில் அதிகரித்துள்ளன.

அமெரிக்க அரசின் தரவுகளின்படி இவற்றில் பெரும்பாலானவை ரஷ்யாவிலிருந்து நிகழ்த்தப்படுகின்றன. ரஷ்ய பாதுகாப்பு அமைப்புகளுக்கு தெரிந்தும், சில நேரங்களில் அவர்களின் ஒப்புதல் உடன் நடத்தப்படுவதாக அமெரிக்க அரசு கூறுகிறது.

இத்தகைய தாக்குதல்கள் குறித்து எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பைடன் அரசுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.

கடந்த மாதம் ஜெனிவாவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தபொழுது தாக்குதலுக்கு உள்ளாகக்கூடாத 16 துறைகளின் பட்டியலை புதின் தலைமையிலான ரஷ்ய அரசு அதிகாரிகளிடம் அளித்தார் பைடன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :