வியட்நாம் போரில் அமெரிக்கா பயன்படுத்திய ஏஜென்ட் ஆரெஞ்ச் வேதி தாக்குதல்: பிரான்ஸ் நீதிமன்றம் விசாரணை

பட மூலாதாரம், Getty Images
வியட்நாம் போரின்போது அமெரிக்கா பயன்படுத்திய 'ஏஜென்ட் ஆரஞ்ச்' என்ற மிகக் கொடிய வேதிப் பொருளை உற்பத்தி செய்த, விற்பனை செய்த 14 நிறுவனங்களின் மீது தொடரப்பட்ட வழக்கை பிரான்ஸ் நீதிமன்றம் விசாரணை செய்யவுள்ளது.
வியட்நாம் போர் முழுவதையும் ஒரு பத்திரிகையாளராகப் பார்வையிட்டு எழுதிய டிரான் டோ ங்கா என்ற 78 வயது வியட்நாமிய - பிரெஞ்சு பெண் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
ஏஜென்ட் ஆரஞ்ச் தாவரக் கொல்லியை போரில் பயன்படுத்தியது தனக்கும் தன் குழந்தைகளுக்கும் தீங்கு விளைவித்ததாக அவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஏஜென்ட் ஆரஞ்ச் பயன்படுத்தியதற்கு எதிராக பாதிக்கப்பட்ட குடிமக்களில் ஒருவரது வழக்கை நீதிமன்றம் விசாரணை செய்வது இதுவே முதல் முறை.
'ஏஜென்ட் ஆரஞ்ச்' என்றால் என்ன?
'ஏஜென்ட் ஆரஞ்ச்' என்பது மிகக் கொடிய நச்சுத்தன்மை உள்ள தாவரக் கொல்லி வேதிப் பொருள்.
வியட்நாம் மீது அமெரிக்கா படையெடுத்து ஆக்கிரமித்தபோது, அதை எதிர்த்துப் போராடிய 'வியத்காங்' என்ற உள்நாட்டுப் படையினர் கொரில்லா தாக்குதலில் ஈடுபட்டனர். வியத்காங் படையினர் காடுகளில் ஒளிந்திருந்தது அமெரிக்காவின் வலிமையான ராணுவத்துக்குப் பெரும் சவாலாக இருந்தது.
விமானத் தாக்குதல் நடத்துவதென்றால், வியத்காங்குகள் எங்கே பதுங்கியிருக்கிறார்கள் என்பது தெரியவேண்டும். ஆனால், வியட்நாமின் அடர்ந்த காடுகள் விமானத்தில் இருந்து கண்காணித்து அவர்கள் பதுங்கியிருக்கும் இடத்தைப் பார்க்கத் தடையாக இருந்தது.
அதற்காக ஏஜென்ட் ஆரஞ்ச் என்ற தாவரக் கொல்லியை அந்தக் காடுகள் மீது விமானம் மூலம் தூவியது அமெரிக்கா. இதனால், அடர்ந்து சடைத்த தாவரங்கள், மரங்கள் கருகி வியத்காங்குகள் பதுங்கியிருந்த இடங்கள் தெரியத் தொடங்கின.

பட மூலாதாரம், NurPhoto/Getty Images
1962 முதல் 1971 வரை போரில் பயன்படுத்தப்பட்ட இந்த ஏஜென்ட் ஆரஞ்ச் தாவரக் கொல்லியில், 'டயாக்சின்' என்ற கொடிய நச்சுப் பொருள் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் மிக அதிகமாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த ஏஜெண்ட் ஆரஞ்ச் பயன்படுத்தப்பட்ட பகுதிகளில் புற்றுநோயும், குழந்தைகள் பிறவிக் குறைபாடுகளுடன் பிறப்பதும் அதிகரித்ததற்கு இந்த டயாக்சின்தான் காரணம் என்று கூறப்பட்டது.
பத்து லட்சக் கணக்கான மக்கள் இந்த ஏஜென்ட் ஆரஞ்ச் தாக்குதலில் பாதிக்கப்பட்டதாகவும், 1. 5 லட்சம் குழந்தைகள் மோசமான பிறவிக் குறைபாடுகளோடு பிறந்ததாகவும் வியட்நாம் கூறுகிறது.
இது வியட்நாமியர்களை மட்டுமல்ல அங்கிருந்த அமெரிக்க ராணுவத்தினரையும், அவர்களது சந்ததிகளையும்கூட கடுமையாகப் பாதித்தது.
வழக்கில் சொல்லப்படுவது என்ன?
ஏஜென்ட் ஆரஞ்ச் தாவரக் கொல்லியை உற்பத்தி செய்த, விற்பனை செய்த 14 நிறுவனங்கள் மீது 2014ம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்தார் ட்ரான் டோ ங்கா. திங்கள்கிழமை (2021 ஜனவரி 25) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

பட மூலாதாரம், HOANG DINH NAM/AFP/Getty Images
குற்றம்சாட்டப்பட்ட 14 நிறுவனங்களில் பிரபல பன்னாட்டு நிறுவனமான மான் சான்டோ, டௌ கெமிகல் ஆகிய நிறுவனங்களும் உள்ளன.
இந்த வேதிப் பொருளின் பயன்பாட்டால் தமது உடல் நலம் பாதிக்கப்பட்டதற்காகவும், தனது குழந்தைகள் உள்ளிட்ட மற்றவர்களின் உடல் நலப் பாதிப்புகளுக்காகவும் இழப்பீடு கேட்டுள்ளார் ட்ரான் டோ ங்கா.
இந்த ஏஜென்ட் ஆரஞ்ச் தாக்குதலால் தாவரங்கள் அழிந்தன, விலங்குகள் உடலில் நஞ்சு ஏறியது, வியட்நாமின் மண்ணும், ஆறுகளும் மாசுபட்டன. எனவே, இந்த தாவரக் கொல்லியால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பை அங்கீகரிக்கவேண்டும் என்றும் தனது வழக்கில் கோரியுள்ளார் அவர்.
"நான் எனக்காக மட்டும் போராடவில்லை. என் குழந்தைகளுக்காகவும், பாதிக்கப்பட்ட பல பத்துலட்சம் பேருக்காகவும் நான் போராடுகிறேன்" என்று வழக்கு விசாரணைக்கு முன்பாக கூறினார் ட்ரான் டோ ங்கா. புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல உடல் நலப் பிரச்சனைகளால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதயம் கோளாறான முறையில் அமைந்திருந்த காரணத்தால் இவரது சகோதரி ஒருவர் இறந்துவிட்டார்.
"பாதிக்கப்பட்ட வியட்நாமிய குடிமக்களின் பிரச்சனையை அங்கீகரிப்பது ஒரு சட்ட முன்மாதிரியை ஏற்படுத்தும்" என்று ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் தெரிவித்தார் வேலரி கேபன்ஸ் என்ற பன்னாட்டு சட்ட வல்லுநர்.
அமெரிக்க முன்னாள் படையினருக்கு மட்டும் இழப்பீடு
ஏஜென்ட் ஆரஞ்ச் தாக்குதல் மூலம் பாதிப்புக்குள்ளான அந்நாள் அமெரிக்கப்படையினருக்கு மட்டும் அமெரிக்கா இழப்பீடு வழங்கியுள்ளது. ஆனால், வியட்நாமியக் குடிமக்களுக்கு இழப்பீடு ஏதும் வழங்கவில்லை.
ஆனால், அமெரிக்க ராணுவமே அந்த ஏஜென்ட் ஆரஞ்சை வடிவமைத்து உருவாக்கியதாகவும், அது எப்படி போரில் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றும் குற்றம்சாட்டப்பட்ட கம்பெனிகள் கூறுகின்றன.
ஆனால், இந்த ஏஜென்ட் ஆரஞ்ச் எந்த அளவுக்கு நச்சுத்தன்மை உள்ளது என்ற விஷயத்தில் அமெரிக்க அரசாங்கத்தை இந்த நிறுவனங்களே தவறான தகவல்களைத் தந்து வழிநடத்தின என்று ட்ரான் டோ ங்காவின் வழக்குரைஞர்கள் வாதிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏஜென்ட் ஆரஞ்சின் நச்சுத்தன்மை மிகவும் அபாயகரமானது என்று சட்ட வல்லுநர் கேபன்ஸ் தெரிவித்தார்.
8 கோடி லிட்டர் வேதிப் பொருள்
வியட்நாம் போரில் அமெரிக்கப் படையினர் மொத்தம் 8 கோடி லிட்டர் ஏஜென்ட் ஆரஞ்ச் வேதிப் பொருளை தூவியிருப்பார்கள் என்று மதிப்பிடப்படுகிறது.
இந்த வேதிப் பொருளை நுகர நேர்ந்ததால் 1960களில் இருந்து வியட்நாமில் பிறவிக் குறைபாடு, புற்றுநோய் போன்றவை பெரிய அளவில் அதிகரித்ததை அந்நாட்டு மருத்துவர்கள் கவனித்தநர்.
இந்த ஏஜென்ட் ஆரஞ்ச் பயன்பாட்டை அமெரிக்கா 1971ம் ஆண்டு நிறுத்தியது. 1975ம் ஆண்டு வியட்நாமில் இருந்தே பின்வாங்கியது.
இது முடிந்து கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்குப் பிறகும் பல்லாயிரம் குழந்தைகள் ஒவ்வோர் ஆண்டும் பிறவிக் குறைபாடுகளோடு பிறப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












