You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க கேப்பிட்டல் வன்முறை: 207 வருட பழைய வரலாறு தெரியுமா?
அமெரிக்க கேப்பிட்டல் கட்டடத்தில் புதன்கிழமை நடந்த வன்முறை போல 207 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அங்கு ஆளும் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்களால் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் நிகழ்ந்த வன்முறைதான் உலகம் முழுக்க வியாழக்கிழமை தலைப்புச் செய்திகளாகின.
இந்த சம்பவத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் மருத்துவ அவசரநிலை காரணமாக உயிரிழந்திருக்கலாம் என செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவில் ஆட்சியை விட்டுக் கொடுக்க மனமில்லாத அதிபரின் ஆதரவாளர்கள தீவிர வன்முறையில் இறங்கிய சம்பவம், நூறாண்டுக்கு முன்பும் நடந்திருக்கிறது.
1812ஆம் ஆண்டில் நடந்த அச்சம்பவத்துக்குப் பிறகு, இப்போது தான் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தின் பாதுகாப்பை மீறி அதிபரின் ஆதரவாளர்கள் அதனுள்ளே நுழைந்திருக்கிறார்கள் என அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தின் வரலாற்று நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.
முதலாவதாக 1812ஆம் ஆண்டில் நடந்த போரின்போது பிரிட்டிஷ் படைகள் மோதலுக்கு தயாராகின. அதன் தொடர்ச்சியாக, துணை அட்மிரல் அலெக்சாண்டர் காக்பர்ன் மற்றும் மேஜர் ஜெனரல் ராபர்ட் ராஸ் தலைமையிலான பிரிட்டிஷ் படை, 1814ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்,
அப்போது கட்டப்பட்டுக் கொண்டிருந்த நாடாளுமன்ற கட்டடத்தை தீயிட்டுக் கொளுத்தினார்கள். அப்போது பெய்த பெருமழையால் கேப்பிடல் என்றழைக்கப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டடம் தப்பித்தது. இந்த தாக்குதல் காரணமாக அமெரிக்க கேப்பிடல் கட்டடத்தை ஃபிலடெல்ஃபியாவுக்கு மாற்றுமாறு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரினார்கள். ஆனால், ஃபிடெல்ஃபியா பேரவை கட்டுமானத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு சரியான ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து அந்த பேரவையை 1783ஆம் ஆண்டில் முற்றுகையிட்ட சம்பவத்தாலேயே அங்கு நாடாளுமன்ற கட்டடம் நிறுவப்படாமல் வாஷிங்டன் டிசியில் அமைக்கப்பட்டது.
1814ஆம் ஆண்டு சம்பவத்துக்கு ஓராண்டுக்கு முன்பு, மேலை கனடாவின் தலைநகராக இருந்த யார்க் நகரை அமெரிக்கா தீக்கிரையாக்கியது. அதற்கு பதில் நடவடிக்கையாகவே பிரிட்டிஷ் படையினர், வெள்ளை மாளிகை உட்பட வாஷிங்டன் டி சி நகரின் பல பகுதிகளை எரித்தனர்.
அந்த காலகட்டத்தில் கனடா என ஒரு தனி நாடாக உருவாகவில்லை. அப்போது கனடா ஒரு பிரிட்டிஷ் காலனியாக இருந்தது.
"அமெரிக்காவின் நாடாளுமன்ற கட்டடம் வெறுமனே ஒரு கட்டடம் அல்ல. அது அமெரிக்க ஜனநாயகத்தின் சின்னம். அது வாழும் வாழ்க்கை முறையின் அடையாளம். நாம் சட்டத்தினால் உருவான தேசம். அமைதியாக அதிகாரம் கைமாறுவது நம் குடியரசின் அரசியலமைப்பின் அடிப்படைச் சிறப்புகளில் ஒன்று" என இந்த வன்முறை சம்பவத்துக்குப் பிறகு வரலாற்றுச் சமூகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
நாடாளுமன்ற கட்டடத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி இதுவரை 52 பேரைக் கைது செய்திருக்கிறது அமெரிக்க காவல் துறை.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ப் டபிள்யூ புஷ், மிட்ச் மெக்கொனெல், மைக் பென்ஸ் உட்பட குடியரசு கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் புதன்கிழமை தாக்குதலுக்கு தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
டிரம்பின் அரசில் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் மேட் பாட்டிங்கர், துணை ஊடக செயலர் சாரா மேத்யூஸ், மெலானியா டிரம்பின் முதன்மை அதிகாரி ஸ்டெஃபன் க்ரிசம், வெள்ளை மாளிகையின் சமூக செயலர் ரிக்கி நிசெடா என பல அதிகாரிகள் இந்த வன்முறை சம்பவத்துக்குப் பிறகு தங்களின் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள்.
இத்தகைய சூழலில்தான் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் இணையை, அடுத்த அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபராக அங்கீகரித்து அமெரிக்க காங்கிரஸ் சான்றளித்திருக்கிறது.
அதிபர் டொனால்ட் டிரம்ப் வாக்கு எண்ணிக்கை குறித்து மீண்டும் ஆதாரமில்லாமல் பேசியது மற்றும் பொதுமக்கள் ஒருமைப்பாட்டுக் கொள்கைகளை கடுமையாக மீறும் விதத்தில் இருக்கும் டிரம்பின் மூன்று ட்விட்டுகள் நீக்கப்படும் வரை, அவரின் கணக்கு முடக்கி வைக்கப்படும் என ட்விட்டர் தரப்பில் கூறியிருக்கிறார்கள். மேலும் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட விதி மீறல்கள் நடந்தால், அவரது கணக்கு நிரந்தரமாக ரத்து செய்யப்படலாம் எனவும் ட்விட்டர் எச்சரித்திருக்கிறது.
ஃபேஸ்புக் & இன்ஸ்டாகிராம் பக்கங்கள் அடுத்த 24 மணி நேரத்துக்கு டிரம்பின் கணக்குகளை முடக்கப்பட்டிருக்கின்றன. யூட்யூப் சமூக ஊடக பக்கமும் டிரம்பின் வாக்கு மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான காணொளியை விதிமீறல் எனக்கூறி அதை நீக்கியிருக்கிறது.
பிற செய்திகள்:
- ஜனவரி 20இல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு
- அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவு கும்பல் கலவரம், 4 பேர் பலி: வரலாறு காணாத காட்சிகள்
- "திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி; 100% தேவையற்ற ஒன்று" - சுயநலத்துக்காக அரசியல் செய்கிறதா திரைத்துறை?
- தலை முடி உதிர்வுக்கு தீர்வு என்ன?
- "திரையரங்கில் 100% பார்வையாளர்கள் தற்கொலைக்கு சமம்" - மருத்துவரின் ஆதங்க பதிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்