You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க அதிபர்: அரசியல் பிரளயத்துடன் முடிவுக்கு வரும் டிரம்பின் பதவிக்காலம்
- எழுதியவர், ஆண்டனி ஜர்ச்சர்
- பதவி, வட அமெரிக்கா செய்தியாளர், பிபிசி
கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை, ஜனவரி 6ஆம் தேதியை, திருப்பத்தை தரும் நாளாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வந்தார். தனது ஆதரவாளர்களை வாஷிங்டன் டி.சிக்கு வரும்படி கூறிய அவர், அதிபர் தேர்தல் முடிவுகளை நிராகரிக்குமாறு துணை அதிபர் மைக் பென்ஸையும் நாடாளுமன்றத்தையும் வலியுறுத்துங்கள் என்று கேட்டுக்காண்டிருந்தார்.
இந்த நிலையில், புதன்கிழமை காலையில் தமது ஆதரவாளர்களை உற்சாகமூட்ட அதிபர் டொனால்ட் டிரம்ப் தயாரானார்.
அதிபரின் தனி வழக்கறிஞர் ரூடி கியுலியானி, தேர்தல் மோதல்களை "யுத்த விசாரணை" மூலம் தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதிபரின் மகனான ஜூனியர் டிரம்ப், தங்களுடைய அதிபருக்காக அவரது கட்சியினர் போராடவில்லை என்ற செய்தியை டிரம்பின் ஆதரவாளர்களுக்கு அளித்தார்.
"இது இனி குடியரசு கட்சி அல்ல," என்று குறிப்பிட்ட அவர், "இது டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி," என்று தெரிவித்தார்.
இதேவேளை அதிபர் டிரம்ப் தானே தோன்றி திரளாகக் கூடியிருந்த தமது ஆதரவாளர்களை ஊக்கப்படுத்தினார். அவர்கள், "தேர்தல் முடிவு திருட்டை நிறுத்துங்கள்" என்று கோஷமிட்டனர். வெள்ளை மாளிகையில் இருந்து நாடாளுமன்றம் உள்ள கேப்பிடல் கட்டடம் வரை அவர்கள் நடந்து சென்று குரல் கொடுக்க டிரம்பின் வார்த்தைகள் உற்சாகம் கொடுத்தன.
"நாங்கள் ஒருபோதும் கைவிட மாட்டோம், ஒருபோதும் முடிவை ஒப்புக் கொள்ள மாட்டோம்" என்று அதிபர் கூட்டத்தினரிடையே பேசினார்.
"நமது நாடு போதுமான அளவுக்கு அனுபவித்து விட்டது. மேலும் அது அனுபவிக்க விடமாட்டோம்," என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
அவர் வெள்ளை மாளிகையில் உரையாற்றிக் கொண்டிருந்த அதே சமயம், கேப்பிட்டல் கட்டடத்துக்கு வெளியே வேறு விதமான நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. அமெரிக்க காங்கிரஸ் எனப்படும் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் தேர்தலில் பதிவான மாகாண வாரியான முடிவுகளை அட்டவணைப்படுத்தும் அலுவல் தொடங்கியது.
முதலாவதாக, தேர்தல் முடிவுகளை நிராகரிக்குமாறு அதிபர் டிரம்ப் துணை அதிபருக்கு விடுத்த கோரிக்கையையும் மீறி, நாடாளுமன்ற அலுவலை தொடங்கிய அவர், தனக்கு அத்தகைய அதிகாரங்கள் இல்லை என்றும் தனது பங்களிப்பு "பெரும்பாலும் சடங்கு மட்டுமே" என்றும் குறிப்பிடும் அறிக்கையை வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து அரிஸோனாவில் பதிவான வாக்குகளுக்கு எதிராக தங்களின் குரலை குடியரசு கட்சி உறுப்பினர்கள் பதிவு செய்தனர். அங்கு ஜோ பைடனின் வெற்றியை தீர்மானிப்பது பற்றி விவாதங்கள் நடந்தன. இரு தரப்பிலும் உறுப்பினர்கள் பேசும்போது இரு அவை உறுப்பினர்களும் உற்சாகமாகவே காணப்பட்டனர்.
செனட் சபையில் விவாதம் வேறு தொனியில் இருந்தது. அங்கு பெரும்பான்மைத் தலைவர் மிட்ச் மெக்கொனெல், இறுதி சடங்கில் பங்கேற்கும்போது அணிந்து கொள்ளும் கறுப்பு உடை மற்றும் டை அணிந்து காணப்பட்டார். ஆனால், டிரம்புக்கு புகழாரம் சூட்டுவதற்கு பதிலாக அவரது ஆளுகையை புதைக்க வந்தவராக அவர் காணப்பட்டார்.
"தோல்வியுற்ற தரப்பிலிருந்து வெறும் குற்றச்சாட்டுகளால் மட்டுமே இந்தத் தேர்தல் முறியடிக்கப்படுமானால், நமது ஜனநாயகம் ஒரு மரண சுழற்சியில் நுழையும்" என்று மெக்கொனெல் கூறினார்.
"முழு தேசமும் மீண்டும் ஒரு தேர்தலை ஏற்றுக்கொள்வதை நாங்கள் ஒருபோதும் பார்க்க விரும்பவில்லை. அப்படி நடந்தால் ஒவ்வொரு நான்கு வருட முடிவிலும் எந்த விலையை கொடுத்தாவது அதிகாரத்தில் தொடரும் போக்கு நிலவும்" என்று அவர் குறிப்பிட்டார்.
ஜோர்ஜாவில் தனது கட்சியின் சமீபத்திய இரண்டு தோல்விகளின் விளைவாக செனட் சிறுபான்மைத் தலைவராக மாறும் செனட்டர் கென்டக்கி, "கோபத்தின் விளைவாக குடியரசின் அடிப்படைகள், நீர்த்துப்போகாமல் தடுக்கும் வடிவமாகவே இந்த செனட் சபை உள்ளது," என்று கூறினார்.
அவர் பேசிக்கொண்டிருந்த அதே நேரம், கேப்பிட்டல் கட்டடத்துக்கு வெளியே கோபாவேசத்துடன் டிரம்பின் ஆதரவாளர்கள் தீவிர வன்முறையில் இறங்கினார்கள். போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணத்தால், டிரம்பின் ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்தபோது வேறு வழியின்றி அதிபர் தேர்வு நடைமுறைகளை நிறுத்தும் அளவுக்கு பிரச்னை தீவிரமாகியது.
கலவரக்காரர்களிடம் இருந்து தப்பித்தால் போதும் என்ற எண்ணத்துடன் அவைக்குள் இருந்த செனட்டர்கள், ஊடகத்தினர் கிடைக்கும் இடத்தில் எல்லாம் ஒளிந்து கொள்ள முற்பட்டனர்.
ஆனால், டிரம்பின் ஆதரவாளர்கள் பெருமளவில் அவைக்குள் குவியத் தொடங்கினர். கடைசியில் அவைக்குள்ளேயே அவர்கள் அமெரிக்க கொடிகளுடன் நடமாடத் தொடங்கிய காட்சிகளை ஊடகங்கள் நேரலையாக ஒளிபரப்பின. சமூக ஊடகங்களில் இந்த காட்சிகள் வைரலாகின. இரு அவை தலைவர்களின் அறைகள், எம்.பிக்களின் அறைகள் என எங்கும் அவர்கள் நுழைந்தனர்.
இதே சமயம், வில்மிங்டன், டெலாவேரில் நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக உத்தேசித்திருந்த தனது உரையாற்றும் திட்டத்தை ரத்து செய்து விட்டு, வாஷிங்டனில் நடக்கும் நிகழ்வுகளால் அதிர்ச்சி அடைந்த ஜோ பைடன், கலவர காட்சிகளை கடுமையாக கண்டித்தார்.
"இந்த நேரத்தில் நமது ஜனநாயகம் முன்னேப்போதும் இல்லாத வகையில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது, நவீன காலங்களில் நாம் கண்ட எதையும் போல இல்லாமல் இது நடந்திருக்கிறது," என்று அவர் குறிப்பிட்டார். "சுதந்திர கோட்டை மீதே தாக்குதல் நடந்து விட்டது," என்று அவர் தெரிவித்தார்.
அடுத்த சில நிமிடங்களில், டிரம்ப் நாட்டு மக்களுக்கு உரையாற்றத் தொடங்கினார். ஆனால், பைடன் யோசனை கூறியதை போல டிரம்பின் உரை அமையவில்லை.
அதற்கு பதிலாக, தேர்தல் முடிவுகளை திருடி விட்டதாக தனக்கு உரிய வகையில் தொடர்ந்து தனது குற்றச்சாட்டுகளை பதிவு செய்த டிரம்ப், தனது ஆதரவாளர்களிடம் எல்லோரும் வீட்டுக்குசெல்லுங்கள், உங்களை நேசிக்கிறோம், நீங்கள் மிகவும் சிறப்பானவர்கள் என்று தெரிவித்தார்.
இன்றைய நாளில் டிரம்பின் அடுத்தடுத்த ட்வீட்டுகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது.
அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதல் ட்விட்டர் பக்கம் மூலம் உரையாற்றுவதை வாடிக்கையாகக் கொண்ட டிரம்ப், அந்த பழக்கத்துக்கு ஐக்கியமானவராகவே அறியப்பட்டார். ஆனால், இதுவரை இல்லாத வகையில் அதிபரின் ட்விட்டர் பதிவுகளை தொடர்ச்சியாக ட்விட்டர் நிறுவனம் முடக்கியது.
புதன்கிழமை காலை முதல் மாலை வரை வன்முறை நீடித்த வேளையில், சுமார் 6 மணி நேர கடுமையான போராட்டத்துக்குப் பிறகு கேப்பிட்டல் கட்டடத்தை அமெரிக்க காவல்துறையினர், கலவரக்காரர்கள் பிடியில் இருந்து மீட்டனர்.
நடந்த வன்முறையை செனட் பெரும்பான்மை குழு தலைவரான சக் ஷூமர் கடுமையாக கண்டித்தார். அதிபரின் காலடிக்கு உகந்தவை இந்த கலவரம் என்று அவர் கடுமையாக சாடினார்.
"ஜனவரி 6ஆம் தேதி, அமெரிக்க வரலாற்றின் இருண்ட நாட்களில் ஒன்றாகக் கருதப்படும்" என்று அவர் கூறினார்.
நடந்த வனமுறை காரணமாக, அமெரிக்க அதிபரின் மனைவி மெலானியா டிரம்பின் தலைமை பணியாளர் ஸ்டெஃபானி கிரிஷாம், வெள்ளை மாளிகை துணை ஊடக செயலாளர் சாரா மேத்யூஸ் ஆகியோர் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இவர்களின் வரிசையில் அமெரிக்க அதிபர் மாளிகையில் டிரம்பின் பதவிக்காலத்தில் அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட மேலும் சிலர் அடுத்த சில மணி நேரத்தில் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து என்ன நடக்கும்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அமைச்சரவை பதவி விலகினாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி டிரம்பின் பதவிக்காலம் அடுத்த இரண்டு வாரங்களில் நிறைவு பெறவிருக்கிறது.
அந்த நேரத்தில் குடியரசு கட்சித் தலைவர்கள், வெள்ளை மாளிகை மீது கொண்டிருந்த கட்டுப்பாட்டை இழப்பார்கள். வரலாற்றில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்திய ஒருவரை முன்னாள் அதிபராக அவர்கள் கொண்டிருப்பார்கள்.
இதற்கிடையில் டிரம்ப், இப்போதைக்கு - இன்னும் ஆட்சியில் தொடர்கிறார். வெள்ளை மாளிகையில் தனது அறையில் தற்காலிகமாக தனது சமூக ஊடகங்களின்றி அவர் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால், அதிக நேரம் அவர் அமைதியாக இருக்க மாட்டார்.
வாஷிங்டன் டிசியில் இருந்து புறப்பட்டு புதிய ஃபுளோரிடா வீட்டிற்குச் சென்றவுடன், அவர் அரசியல் காய்களை நகர்த்தும் திட்டங்களை தொடங்கலாம். அந்த திட்டத்தின்படி மீண்டும் அதிகாரத்தை பிடிக்க தனக்கான ஒரு மரபை மீள் கட்டியெழுப்ப அப்போது அவர் முயலலாம்.
பிற செய்திகள்:
- ஜனவரி 20இல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு
- அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவு கும்பல் கலவரம், 4 பேர் பலி: வரலாறு காணாத காட்சிகள்
- "திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி; 100% தேவையற்ற ஒன்று" - சுயநலத்துக்காக அரசியல் செய்கிறதா திரைத்துறை?
- தலை முடி உதிர்வுக்கு தீர்வு என்ன?
- "திரையரங்கில் 100% பார்வையாளர்கள் தற்கொலைக்கு சமம்" - மருத்துவரின் ஆதங்க பதிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்