You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவு கும்பல் வன்முறை, 4 பேர் பலி: வரலாறு காணாத காட்சிகள்
அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கேப்பிடல் கட்டடத்துக்கு வெளியேயும், உள்ளேயும் குவிந்த டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடந்துகொண்டிருந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் இதுவரை நான்கு பேர் இறந்துள்ளனர்.
நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தாம் தோல்வி அடைந்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதை ஏற்றுக்கொள்ள மறுத்துவரும் அதிபர் டொனால்டு டிரம்ப், இந்த வெற்றியை ஏற்று சான்றிதழ் தராமல் தேர்தல் முடிவுகளை நிராகரிக்கும்படி துணை அதிபர் மைக் பென்சை வலியுறுத்தி வருகிறார்.
இந் நிலையில், அதிபர் தேர்தல் முடிவுகளை உறுதி செய்வதற்காக நாடாளுமன்றக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அப்போது டிரம்ப் ஆதரவு கலவரக் கும்பல் நாடாளுமன்றத்தில் புகுந்தது.
கேப்பிடல் கட்டடம் மீண்டும் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்து, நிறுத்தப்பட்ட நாடாளுமன்றக் கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது.
கேப்பிட்டல் கட்டடத்தில் என்ன நடந்தது?
சில கலவரக் காரரர்கள் பக்கச் சுவற்றைப் பிடித்து ஏறிச் சென்று நாடாளுமன்ற செனட் அவைக்குள் நுழைந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கல் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.
அவைத் தலைவர் நான்சி பெலோசி அலுவலகத்திலும் கலவரக்காரர் ஒருவர் புகுந்ததைக் காட்டும் படம் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் முதலில் தேர்தல் சபை உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பிறகு அவர்கள் அதிபரை தேர்வு செய்ய வாக்களிப்பார்கள்.
நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் இப்படி தேர்தல் சபை உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை டிசம்பர் 14ம் தேதி செலுத்தி அவற்றை சீலிட்ட கவர்களில் அனுப்பிவைத்தனர். அந்த வாக்குகள் புராதன மகாகனி மரப்பெட்டிகளில் வைத்து கேப்பிட்டல் கட்டடத்துக்கு புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டன.
அந்த வாக்குகளை அமெரிக்க நாடாளுமன்றத்தில் எண்ணும் பணி நடந்து கொண்டிருந்த நிலையில் இந்தக் கலவரம் நடந்துள்ளது. வாக்குகளை எண்ணி முடித்து பைடனின் வெற்றியை அங்கீகரித்து நாடாளுமன்றம் சான்றிதழ் அளிக்கவேண்டும்.
இதையடுத்து வாக்குகளை எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் போலீசாரால் வெளியேற்றப்பட்டனர்.
எனினும் இந்த வாக்குச் சீட்டுகள் காப்பாற்றப்பட்டதாக ஒரு செனட் உறுப்பினர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக இந்த வாக்குச் சீட்டுகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு ஓராண்டு காலத்துக்கு பொதுமக்கள் விரும்பினால் சரிபார்ப்பதற்காக ஃபெடரல் ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும்.
இந்தக் கலவரத்தில் ஊடகங்கள் தாக்கப்பட்டன.
இதையடுத்து வாஷிங்டன் டிசி-யில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கலவரத்தை தொடர்ந்து தனது ஆதரவாளர்களைத் திரும்பிப் போகும்படி டிரம்ப் வேண்டுகோள் விடுக்கும் வீடியோவை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அகற்றியுள்ளன. அந்த வீடியோவில் ஆதரவாளர்களை திரும்பிப் போகச் சொல்லும் அதே நேரம், அவர் தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டதாக ஆதாரமில்லாமல் மீண்டும் குற்றம்சாட்டினார்.
டிவிட்டர் டிரம்பின் கணக்கை 12 மணி நேரத்துக்கு முடக்கி வைத்துள்ளது.
முன்னாள் அதிபரும் டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்தவருமான ஜார்ஜ் புஷ் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார்.
4 பேர் மரணம்,52 பேர் கைது, 5 ஆயுதங்கள் சிக்கின
கலவரத்தில் போலீசார் சுட்டதில் ஒரு பெண் இறந்தார். இது தவிர, மருத்துவ அவசர நிலை காரணமாக மூன்று பேர் இறந்துள்ளனர் என்கிறது வாஷிங்டன் டிசி போலீஸ்.
இதுவரை 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 47 பேர் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கலவரம் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வாக்குகளை எண்ணும் பணி இரவு மீண்டும் தொடரும்
புதன்கிழமை இரவே மீண்டும் தேர்தல் சபை வாக்குகளை எண்ணும் பணி நாடாளுமன்றத்தில் தொடரும் என்று நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவைத் தலைவர் நான்சி பெலோசி தெரிவித்தார்.
தலைநகரில் 2,700 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். இதையடுத்து கலவரக் காரர்கள் கலைந்து சென்றனர்.
டிரம்பின் சொந்தக் கட்சியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள் இந்த கலவரத்தை எதிர்த்தும், பைடனின் வெற்றியை ஆதரித்தும் பேசத் தொடங்கியுள்ளனர்.
டிரம்ப் பதவியை பறிக்க வாய்ப்பு? துணை அதிபருக்கு கோரிக்கை
தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையில் டிரம்ப் பேசி வந்ததால்தான் கலவரம் வெடித்ததாக பலரும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் அவரை பதவியில் இருந்து நீக்க அரசமைப்புச் சட்டத்தில் வழி இருப்பதாகவும், அதை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழத் தொடங்கிவிட்டன.
அந்த சட்டப் பிரிவுக்கு 25வது திருத்தம் என்று பெயர்.
டிரம்பின் அமைச்சரவைக்குள்ளேயே இந்த சட்டத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு குறித்து முனுமுனுப்புகள் தொடங்கியுள்ளன என்று பிபிசியின் கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட அந்த 25-வது திருத்தத்தின் படி, அதிபருக்கு அவரது கடமையை ஆற்ற முடியாத நிலை ஏற்பட்டால் அவரது பொறுப்புகள் வேறொருவருக்கு மாற்றப்படலாம்.
தற்போதைய நிலையில், முக்கிய அமைச்சரவை உறுப்பினர்கள், துணை அதிபர் மைக் பென்ஸ், ஆகியோர், 'டிரம்ப் தகுதியோடு இல்லை என்பதால் மைக் பென்ஸ் செயல் தலைவர் ஆகிறார் என்று நாடாளுமன்றத் தலைவர்களுக்கு கடிதம் எழுதிதான் இதைச் செய்ய வேண்டும்.
1967ம் ஆண்டு கொண்டுவரப்பட்டதில் இருந்து இந்த சட்டத் திருத்தம் ஒரு முறைகூட பயன்படுத்தப்பட்டதில்லை.
ஆனால், இதுவரை இதற்கான கோரிக்கை துணை அதிபர் மைக் பென்சிடம் முறைப்படியாக சமர்ப்பிக்கப்படவில்லை.
வெர்மான்ட் மாகான குடியரசுக் கட்சி ஆளுநர், தேசிய உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் உள்ளிட்டோர் மைக் பென்சை சந்தித்து இந்தப் பிரிவை பயன்படுத்தும்படி கோரியுள்ளனர்.
உலகத் தலைவர்கள் கண்டனம்
அண்டை நாடான கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட பல உலக நாடுகளின் தலைவர்கள் இதனை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று கூறி கண்டித்துள்ளனர்.
வாஷிங்டன் டிசியில் நடக்கும் கலவரம், வன்முறை குறித்த செய்திகளைப் பார்ப்பது வேதனை தருகிறது என்று தெரிவித்துள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.
இது பற்றி டிவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோதி, "அமைதியாகவும், ஒழுங்கான முறையிலும் ஆட்சி மாற்றம் நடைபெறுவது தொடரவேண்டும். சட்ட விரோதப் போராட்டங்கள் மூலமாக ஜனநாயக நடைமுறை சிதைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுக் கட்சியிலேயே பெருகும் எதிர்ப்பு
முறைப்படி நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகளை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து டிரம்ப் விமர்சனம் செய்து வருவதற்கும், அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தில் செய்துள்ள கலவரத்துக்கும் டிரம்பின் சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியிலேயே எதிர்ப்பு பெருகி வருகிறது.
குறிப்பாக குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்த சம்பவத்துக்கு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
'இன்று நடந்தது அருவருப்பானது' என்று நெப்ராஸ்கா மாநிலத்தை சேர்ந்த பென் சஸ்ஸே என்ற செனட் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
ஜோர்ஜா மாநிலத்தில் செனட் சபைக்கு நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் நேற்று தோல்வியடைந்த செனட்டர் கெல்லி லெஃப்லர்கூட இதனைக் கண்டித்துள்ளார்.
பைடன் வெற்றிக்கு சான்றிதழ் அளிப்பதற்கான தமது ஆட்சேபனையையும் அவர் மாற்றிக் கொண்டுள்ளார்.
நல்ல மனசாட்சியோடு இந்த தேர்வர்களுக்கு சான்றிதழ் அளிப்பதற்கு இப்போது என்னால் ஆட்சேபனை செய்ய முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய துணை அதிபர் மைக் பென்ஸ், "அமெரிக்க கேபிடல் வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள்" என்று தெரிவித்துள்ளார்
பிற செய்திகள்:
- "திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி; 100% தேவையற்ற ஒன்று" - சுயநலத்துக்காக அரசியல் செய்கிறதா திரைத்துறை?
- பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகை திடீர் ரத்து - தலைமை விருந்தினரின்றி குடியரசு தின விழா
- தலை முடி உதிர்வுக்கு தீர்வு என்ன?
- "திரையரங்கில் 100% பார்வையாளர்கள் தற்கொலைக்கு சமம்" - மருத்துவரின் ஆதங்க பதிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்