அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடையில்லை – டிரம்பின் `ஆசிகளை` பெற்ற புதிய ஒப்பந்தம்

டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

சீனாவின் `பைட் டான்ஸ்` நிறுவனத்துக்கு சொந்தமான டிக் டாக் செயலி அமெரிக்காவில் தொடர்ந்து செயல்படும் விதமாக ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க நிறுவனங்களான ஓரக்கல் மற்றும் வால்மார்ட் நிறுவனங்களுடன் டிக் டாக் நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு தனது "ஆசிர்வாதம்" இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்காவின் டிக் டாக் மற்றும் வி-சார்ட் செயலிகளுக்கு தடை ஏற்படுவதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.

டிக் டாக்கால் சேகரிக்கப்படும் பயனர்களின் தகவல்கள் சீனாவிடம் வழங்கப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் அச்சம் தெரிவித்திருந்தனர்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை `பைட் டான்ஸ்` நிறுவனம் மறுத்தது.

"எனது ஆசிகளை இந்த ஒப்பந்தத்திற்கு வழங்கியுள்ளேன்" என டிரம்ப் தெரிவித்தார்.

இந்த புதிய ஒப்பந்ததம் குறித்து `பைட் டான்ஸ்` நிறுவனம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த ஒப்பந்தத்திற்குச் சீனாவின் ஒப்புதல் தேவை.

இந்த ஒப்பந்தம் ஏற்படுவதால், `டிக் டாக் க்ளோபல்` என்ற புதிய நிறுவனம் உருவாக்கப்படும் என ராயர்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது. அந்த நிறுவனத்தில் பெரும்பாலும் அமெரிக்கர்கள் இயக்குநர்களாக இருப்பார்கள். ஒரு அமெரிக்க நிர்வாக இயக்குநர் மற்றும் பாதுகாப்பு நிபுணரும் அந்த குழுவில் இருப்பர்.

மேலும் டிக் டாக்கின் தகவல்கள் ஓரக்கல் நிறுவனத்தால் சேகரித்து வைக்கப்படும்.

விவசாய மசோதாக்களை அதிமுக ஆதரித்தது ஏன்?

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், CMO TAMILNADU FACEBOOK PAGE

இந்திய அரசு கொண்டுவந்திருக்கும் மூன்று விவசாயச் சட்டங்களும் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் சட்டங்கள் என்பதால்தான் அவற்றை எதிர்க்கவில்லையென தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த சில நாட்களில் விவசாயம் தொடர்பாக மூன்று சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை 1. விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாராம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2. விவசாயிகள் விளைபொருட்கள் வாணிபம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம் 3. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்.

இந்தச் சட்டங்கள் மக்களவையில் விவாதத்திற்கு வந்தபோது அ.தி.மு.க. அதனை ஆதரித்தது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்றும் வேளாண் விற்பனைக்கூடங்களுக்கும் உழவர் சந்தைக்கும் எதிரானது என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

ஐபிஎல் 2020-இன் முதல் போட்டி - சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

சென்னை அணியின் பேட்டிங்

பட மூலாதாரம், ROBERT CIANFLONE VIA GETTY IMAGES

நேற்று தொடங்கிய 2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதலில் பௌலிங் செய்தது.

மளமளவென விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் இறுதியில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சௌரப் திவாரி 42 ரன்கள் எடுத்தார்.

163 என்ற இலக்கை நோக்கி ஆட்டத்தைத் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்கம் ஒன்றும் அவ்வளவு சிறப்பாக இல்லை.

முதல் இரண்டு ஓவர்களிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து ஆறு ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது சி.எஸ்.கே.

இலங்கை அமைச்சர்

இலங்கையில் வழமையாக நடத்தப்படும் ஊடகவியலாளர்கள் சந்திப்புக்களை தாண்டி வித்தியாசமான ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இலங்கை ராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ நடத்தியிருந்தார்.

புத்தளம் - தங்கொட்டுவை பகுதியில் தென்னை மரமொன்றின் மீதேறி இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.

தென்னை, பனை, கித்துல் ராஜாங்க அமைச்சர் என்ற விதத்திலேயே, அருந்திக்க பெர்ணான்டோ இந்த ஊடக சந்திப்பை நடத்தியிருந்தார்.

உலக சந்தையில் தென்னை மற்றும் அதன் சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், இந்த ஊடக சந்திப்பு நடத்தப்பட்டிருந்தது.

சானிடைசர் தரமானதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

சானிடைசர்

பட மூலாதாரம், Getty Images

மும்பை நகரிலும், மகாராஷ்டிரா முழுவதிலும் பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள் தரம் குறைந்தவை என்று இந்திய நுகர்வோர் வழிகாட்டுதல் சங்கம் அறிவித்துள்ளது. லாபம் சம்பாதிக்கும் நோக்கில் மட்டுமே சில நிறுவனங்கள் இந்தச் சந்தையில் வியாபாரத்தைத் தொடங்கியுள்ளன என்றும், அவர்களுடைய பொருள்கள் உரிய தரத்தில் இல்லை என்றும் அந்தச் சங்கம் கண்டறிந்துள்ளது.

கிருமிநாசினி பயன்படுத்துவது என்பது நம் வாழ்வில் ஓர் அங்கமாக மாறிவிட்டது. கொரோனாவுக்கு எதிரான போரில் நமக்கு பாதுகாப்புக் கேடயம் போல கிருமிகளை நீக்கும் இந்தக் கிருமிநாசினிகளைப் பயன்படுத்துகிறோம். நம் பணியிடத்திலோ அல்லது பயணத்திலோ இதைப் பயன்படுத்துகிறோம். கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கிருமிநாசினிகளுக்கான தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு சில நிறுவனங்கள் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளன. எனவே, கிருமிநாசினி என்ற பெயரில் சில போலி பொருட்களும் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: