இஸ்ரேலுடன் நெருங்கும் அரபு நாடுகள் - அடுத்த நாடு ஓமனா?

இஸ்ரேலுடன் அடுத்ததாக கைகோர்க்கப்போவது ஓமானா?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், தாரேந்திர கிஷோர்
    • பதவி, பிபிசி இந்தி சேவைக்காக

எகிப்து, ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்குப் பிறகு, மத்திய கிழக்கில் இஸ்ரேலுடன் நல்லுறவுகளை ஏற்படுத்திய நான்காவது நாடாக பஹ்ரைன் திகழ்கிறது.

சமீபத்தில், இஸ்ரேலும் பஹ்ரைனும் தங்கள் உறவுகளை முழுமையாக இயல்பாக்குவதற்கான வரலாற்று உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ளன.

முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான சமாதான ஒப்பந்தம், முதல் அதிகாரப்பூர்வ விமான சேவையுடன் முறையாக தொடங்கப்பட்டது. இந்த விமானம் இஸ்ரேலில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்றது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைனுடனான இந்த சமாதான உடன்படிக்கை, அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தை குறிக்கிறது.

பாலத்தீன விவகாரம் மற்றும் முஸ்லிம் உலகின் மூன்றாவது புனித நகரமான கிழக்கு ஜெருசலேம் (இது சுதந்திர பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக உள்ளது) ஆகியன தொடர்பாக பல தசாப்தங்களாக பெரும்பாலான அரபு நாடுகள், இஸ்ரேலை புறக்கணித்து வந்துள்ளன.

இஸ்ரேலிடம் அரபு நாடுகள் விடுக்கும் நிபந்தனை என்னவென்றால், பாலத்தீனத்திற்கு ஒரு தனி நாடு என்ற அந்தஸ்தை இஸ்ரேல் வழங்காவிட்டால், அதனுடன் அமைதி உடன்படிக்கை செய்துகொள்ள முடியாது என்பதுதான்.

ஒரு தனி பாலத்தீனம் உருவாகாமலேயே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இஸ்ரேலை அங்கீகரித்திருப்பது ஒரு ஏமாற்று வேலை என்று பாலத்தீன தலைவர்கள் கூறியுள்ளனர்.

அரபு நாடுகளுடன் இஸ்ரேலின் உறவுகள்

1948 இல் இஸ்ரேல் ஒரு சுதந்திர நாடாக உருவானது முதல், அரபு நாடுகளுடனான உறவுகள், பகைமைபோக்குடனேயே இருந்தன. புதிதாக நிறுவப்பட்ட இந்த நாட்டின் இருப்பை ஒழிக்க அதே ஆண்டில் சில அரபு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில், எகிப்திய ராணுவம் பின்வாங்க வேண்டியிருந்தது. 1979 இல், எகிப்து முதல் முறையாக இஸ்ரேலுடன் ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

அரபு நாடுகளுடன் இஸ்ரேலின் உறவுகள்

பட மூலாதாரம், ANADOLU AGENCY

இந்த ஒப்பந்தத்தின் காரணமாக அரபு லீக், எகிப்தை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது. எகிப்துக்குப் பிறகு 1994இல் இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரண்டாவது நாடாக ஜோர்டான் ஆனது.

இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸும் பஹ்ரைனும் இஸ்ரேலை அங்கீகரித்துள்ளன, இதை தொடர்ந்து மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு புதிய சாத்தியக்கூறுகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இரான், துருக்கி போன்ற நாடுகள் மத்திய கிழக்கு நாடுகளின் சார்பாக இஸ்ரேலை அங்கீகரிப்பதற்கான இந்த புதிய தொடக்கத்தை கடுமையாக கண்டித்தள்ளன.

இப்போது ஓமனின் முறையா?

ஈரானின் சக்தி அதிகரித்து வருவதும், எண்ணெய் விலைகள் குறைவதும், வளைகுடா நாடுகளில் அரசுகளுக்கு எதிரான கிளர்ச்சி அச்சுறுத்தல் மற்றும் அமெரிக்க ஆதரவின் முடிவு குறித்த அச்சம் ஆகியன, மத்திய கிழக்கு நாடுகளிடையே இஸ்ரேல் குறித்த விஷயத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் , மாற்றங்களுக்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இஸ்ரேலுடன் அடுத்ததாக கைகோர்க்கப்போவது ஓமானா?

பட மூலாதாரம், MEHR

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைனுக்குப் பிறகு, இஸ்ரேல் விரைவில் ஓமனுடன் சமாதான உடன்படிக்கை செய்துகொள்ளும் வாய்ப்பு காணப்படுகிறது. இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான முறையான தூதாண்மை உறவுகளின் தொடக்கத்திற்கும் ஒரு வலுவான வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

ஓமனுடனான இஸ்ரேலின் முறைசாரா பரிமாற்றங்கள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகின்றன. 2018 ஆம் ஆண்டில், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் ஓமானுக்கு பயணம் செய்தார். மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக அன்றைய ஓமனின் தலைவரான சுல்தான் காபூஸுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இருப்பினும், இஸ்ரேலை அங்கீகரிப்பது மற்றும் அதனுடன் எந்தவொரு உடன்படிக்கையின் சாத்தியகூறு குறித்து ஓமன் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை. இருப்பினும், பஹ்ரைனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சமாதான உடன்படிக்கையை ஓமன் வரவேற்றுள்ளதுடன், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு படி என்று வர்ணித்துள்ளது. அப்போதிருந்து, இஸ்ரேலுடனான ஓமானின் சமாதான ஒப்பந்தம் பற்றிய ஊகங்கள் தீவிரமடைந்துள்ளன.

ஓமன் இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ள நல்ல வாய்ப்பு உள்ளது என்று ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேற்கு ஆசியா மையத்தின் பேராசிரியர் அப்தாப் கமால் பாஷா, கூறுகிறார்.

"ஓமனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பழைய உறவுகள் இருந்தன. 1992 ல் மேட்ரிட் மாநாட்டிற்குப் பிறகு, நீர் ஆராய்ச்சி மையம் திறக்கப்பட்ட வளைகுடாவின் முதல் நாடு ஒமன் ஆகும். இஸ்ரேலியர்கள் தவறாமல் அங்கு வந்து செல்வது வழக்கம். அப்போதைய இஸ்ரேலின் பிரதம மந்திரி ராபினும் அங்கு சென்றார். ஷிமோன் பெரெஸும் அங்கு சென்றுள்ளார். .நெத்தன்யாகு ஏற்கனவே 2018 ல் ஓமனுக்கு சென்றிருக்கிறார். இது தவிர, பல அமைச்சர்களும் சென்றுள்ளனர். எனவே, ஓமனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகள் பழமையானவை. மறுபுறம், ஒவ்வொரு முறையும் நீங்கள் இஸ்ரேலுடன் கைகோர்க்கவேண்டும் என்று அமெரிக்கா ஓமனை ஒவ்வொரு முறையும் வலியுறுத்தி வருகிறது," என்று அவர் விளக்குகிறார்

ஓமனின் வெளியுறவுக் கொள்கை

ஆனால், ஓமனுக்கு ஒரு சிறப்பு வெளியுறவுக் கொள்கை உள்ளது. ஈரானுடனான ஓமனின் உறவுகள், சுமுகமாகவும், நட்புடனும் இருந்தன. 2018 ஆம் ஆண்டில் நெதன்யாகுவின் மஸ்கட் வருகைக்கு நான்கு நாட்களுக்கு முன்பு, ஓமானின் வெளியுறவு அமைச்சரின் அரசியல் உதவியாளர் முகமது பின் ஓஸ் அல்-ஹசன் தெஹ்ரானுக்கு சென்று ஈரானின் வெளியுறவு மந்திரி முகமது ஜவாத் ஜாஃரீப்பை சந்தித்தார்.

ஒரே நேரத்தில், இஸ்ரேலிய பிரதமரின் வரவேற்பு மற்றும் விருந்தோம்பலோடு கூடவே ஓமன், இரானுடனும் நட்புறவைப் பேணி வந்தது. இது ஓமானின் வெளியுறவுக் கொள்கையின் சிறப்பு.

70களில் இருந்து தனது நாட்டிற்காக ஒரு தனித்துவமான செயல்தந்திர திட்டத்தை ஓமன் பின்பற்றிவருகிறது. இது மத்திய கிழக்கு நாடுகளில் அரிதாகவே காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, பிராந்திய தகராறுகளில் ஓமான் பொதுவாக நடுநிலை வகிக்கிறது.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

கூடுதலாக, ஓமான் ஒரு அரபு நாடு மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு சபையின் உறுப்பு நாடாகும்.

மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் ஓமான் ஒருபோதும் தலையிட்டதில்லை. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், மத்திய கிழக்கில் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ளன. யேமன் மற்றும் சிரியா நிகழ்வுகள் இதற்கான உதாரணங்கள்.

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஓமன் எப்போதும் இரு தரப்பையும் ஆதரிக்கிறது. இதன் மூலம் மத்தியஸ்தர் என்ற கவுரவத்தை அது பெறமுடியும்.

ஓமானின் குழப்பம்

இத்தகைய இணக்கமான வெளியுறவுக் கொள்கை மற்றும் ஈரானுடனான நல்ல உறவின் பின்னணியில், ஓமான் இஸ்ரேலுடன் கைகோர்ப்பது குழப்பத்தை ஏற்படுத்தாதா?

"ஓமனுக்கு இரானுடன் நீண்டகால உறவுகள் உள்ளன. டோஃபாரில் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டபோது, இரான் தன் படைகளை அங்கு அனுப்பி அவர்களை விரட்டியது. புரட்சிக்குப் பிறகும் இரானுடன் ஓமான் நல்ல உறவை பராமரித்து வருகிறது. 1979 ல் எகிப்து முதன்முதலில் இஸ்ரேலுடன் சமாதான உடன்படிக்கை செய்தபோது அதை பகிரங்கமாக வரவேற்ற ஒரே நாடு ஓமான் மட்டுமே," என்று பேராசிரியர் பாஷா கூறுகிறார்.

"எனவே இரான், துருக்கி, இஸ்ரேல் மற்றும் ஈராக் மீது ஓரளவு சமநிலைக் கொள்கையை ஓமன் பின்பற்றியுள்ளது. சதாமுடன் வளைகுடா நாடுகள் உறவுகளைமுறிந்துக்கொண்டபோதும்,ஓமன் அந்த நேரத்தில் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டது. இது சுல்தான் காபூஸின் வெளியுறவுக் கொள்கையின் ஒரு சிறப்பம்சமாகும். ஆனால் புதிய சுல்தானின் நிலைப்பாடு, இன்னும் தெளிவாக வெளிவரவில்லை," என்று அவர் குறிப்பிட்டார்.

YouTube பதிவை கடந்து செல்ல, 2
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 2

அவர் மேலும் கூறுகையில், "ஆனால் புதிய சுல்தான் ஹெய்தாம் பின் தாரிக் அல் சயீத் வெளியுறவு அமைச்சரை நீக்கிய விதத்தை பார்க்கும்போது, அவர் இஸ்ரேல் குறித்து எந்த அவசர முடிவும் எடுக்க விரும்பவில்லை என்பது போல தெரிகிறது. இருப்பினும், செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் ஓமனுக்கு மிக நல்ல உறவுகள் இல்லை. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமனின் உள்விவகாரத்தில் தலையிட்டு, சுல்தான் கபூஸை கவிழ்க்க விரும்பியது," என்கிறார் பேராசிரியர் பாஷா.

"அதனால்தான் அவர் மிகவும் கோபமடைந்தார். யேமன் விஷயத்திலும் சுல்தான் கபூஸ், இந்த இரு நாடுகளிடமும் கோபமடைந்தார். ஏனென்றால் யேமனின் போர் காரணமாக அகதிகள் பிரச்சனையை ஓமன் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இப்போது புதிய சுல்தான் பழைய கொள்கையை பின்பற்றுவாரா அல்லது புதிய கொள்கையை வகுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும், "என்று அவர் தெரிவித்தார்.

இஸ்ரேலுடன் கைகோர்ப்பதில் ஓமனுக்கு இருக்கும் ஆபத்துகள்

ஓமனுக்கு முன்னால் இரண்டு ஆபத்துகள் உள்ளன, இது குறித்து அந்தநாடு சிந்திக்கும் என்று பேராசிரியர் பாஷா கூறுகிறார்.

"முதல் ஆபத்து என்னவென்றால், டோஃபாரில் ஒடுக்கப்பட்ட கிளர்ச்சி இன்றளவும் தீரவில்லை. டோஃபார் ,ஓமானின் மிகப்பெரிய மாகாணமாகும். இது இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அங்குள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு தங்கள் மக்களுக்கு தரப்படாமல் மற்ற மாகாண மக்களுக்கு வழங்கப்படுவதாக உள்ளூர் மக்களிடையே புகார் எழுந்துள்ளது. யேமன் , ஹுத்தி மற்றும் தெற்கு யேமனாகப் பிரிக்கப்பட்டுள்ளது. டோஃபார், தெற்கு யேமனுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளது. இந்த பகுதிகளின் மக்கள், ஒரே பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள்.

நிலைமை எந்த வகையிலும் மோசமடைந்துவிட்டால், அது ஓமான் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். மறுபுறம், கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், ஈரானை புண்படுத்த ஓமான் விரும்பாது. ஓமன் தனது பாதுகாப்பிற்காக அமெரிக்காவை நம்பியுள்ளது. ஆனால் இப்போது படிப்படியாக அமெரிக்காவும் இஸ்ரேலை முன்னிறுத்தி, இப்பகுதியில் இருந்து விலக விரும்புகிறது. இதுவும் ஓமானின் ஒரு அச்சம். அத்தகைய சூழ்நிலையில், இரானின் ஆதரவு ஓமனுக்கு தேவைப்படும், "என்று பேராசிரியர் பாஷா தெரிவிக்கிறார்.

இஸ்ரேலுடன் எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்வதற்கு முன்னால், இந்த அச்சங்கள் குறித்து சிந்திக்க ஓமன் விரும்பும். மற்ற அரபு நாடுகளுடன் ஒப்பிடும்போது இஸ்ரேலுடன் ஒரு சமச்சீரான வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடித்த போதிலும் ஒருவேளை இதன்காரணமாகவே ஒமன், இஸ்ரேலுடன் ஒப்பந்தத்தை செய்து கொள்ளும் திசையில் இன்னும் கை நீட்டவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :