அலெக்ஸே நவால்னிக்கு விஷம் தரப்பட்டது - ஆதாரம் இருப்பதாக ஜெர்மனி அரசு தகவல்

பட மூலாதாரம், Getty Images
ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதி அலெக்ஸே நவால்னிக்கு, நோவிசோக் எனப்படும் நச்சு ரசாயனம் கொடுக்கப்பட்டதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் இருந்து ஜெர்மனிக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது, நச்சுயியல் பரிசோதனை முடிவில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனி அரசு கூறியுள்ளது.
கடந்த மாதம் ரஷ்யாவின் சைபீரியா பிராந்தியத்தில் விமான பயணத்தின்போது மயங்கிய நிலைக்கு சென்ற நவால்னி, கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து, அங்கிருந்து ஜெர்மனிக்கு அவசரகால விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக ஜெர்மனி அரசு தெரிவித்திருப்பது ரஷ்ய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடைய உத்தரவின்பேரிலேயே அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என நவால்னியின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால், அந்த குற்றச்சாட்டுகளை ரஷ்ய அதிபர் மாளிகை மறுத்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது தங்களுடைய மருத்துவ ஆய்வில் நவால்னிக்கு நோவிசோக் ரக ரசாயன விஷம் கொடுக்கப்பட்டது நிரூபணமானதால், அது குறித்து ரஷ்யா விளக்க வேண்டும் என்று ஜெர்மனி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமது நாட்டின் மூத்த அமைச்சர்களுடன் ஜெர்மனி ஆட்சித்துறைத் தலைவர் ஏங்கலா மெர்க்கல் இன்று ஆலோசனை நடத்தினார். அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக அவர்களுடன் பேசி முடிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
"அலெக்லே நவால்னி, ரஷ்யாவில் ரசாயன நச்சு வேதிப்பொருள் விஷத்துக்கு ஆளாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது சங்கடமான தகவல்" என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், GETTY IMAGES/ Maja Hitij
இந்த நிலையில், ஜெர்மனி அரசின் தகவல் தொடர்பாக தங்களுக்கு எவ்வித தொடர்பும் வரவில்லை என்று ரஷ்ய அரசு கூறுவதாக அங்கிருந்து வெளிவரும் டாஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
நவால்னியின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ அமைப்பிடம் தெரிவிக்கப்படும் என்று ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.
"ரஷ்யா தெரிவிக்கும் பதில் அடிப்படையில் இந்த விவகாரத்தில் கூட்டாக எவ்வாறு எதிர்வினையாற்றுவது என ஜெர்மனி அரசு விவாதிக்கும்" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய மருத்துவ தரவுகள் தொடர்பாக நவல்னியின் மனைவி யூலியாவிடமும், ஜெர்மனியில் உள்ள ரஷ்ய தூதரிடமும் தகவல் பகிர்ந்து கொள்ளப்படும் என்று ஜெர்மனி ஆட்சித்துறை தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
நோவிசோக் என்றால் என்ன?
ரஷ்ய மொழியில் நோவிசோக் என்றால், புதுவரவு என அர்த்தம். 1970கள், 1980களில் சோவியத் யூனியனால் இந்த ரசாயனம் மேம்படுத்துத்தப்பட்டது.
இந்த நோவிசோக் ரசாயனம், பிற நரம்பு மண்டலத்தை தாக்கும் நச்சு ரசாயனத்தை போலவே செயல்படக்கூடியது. அவை நரம்புகள் முதல் தசைகள் இடையிலான தொடர்புகளை முடக்கி, பல உடல் உறுப்புகளை செயலிழக்கத்தூண்டும்.
சில வகை நோவிசோக் ரசாயன வடிவிலும், சில திட வடிவிலும் இருப்பதாக கருதப்படுகிறது. அப்படியென்றால் அந்த வகை ரசாயனம் மெல்லிய பவுடர்களாக மாற்றக்கூடியதாக இருக்கும்.
நோவிசோக் நச்சு ரசாயனம், ரசாயன ஆயுதங்களின் தாக்கத்தை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அதன் சில வகை உடலுக்குள் சென்ற 30 நொடிகளில் இருந்து இரண்டு நிமிடங்களுக்குள் ஒருவரை முழுமையாக முடக்கிப்போட்டு விடும்.
2018இல் நோவிசோக் தாக்குதல்
இதற்கு முன்பு 2018ஆம் ஆண்டில் பிரிட்டனில் உள்ள சால்புரி நகரில் ரஷ்ய முன்னாள் உளவாளி செர்கே ஸ்கிரீபால், அவரது மகள், ஒரு தம்பதி நோவிசோக் ரசாயனத்தால் தாக்கப்பட்டார்கள்.
அதில் ஸ்கிரீபாலும் அவரது மகள் யூலியாவும் மாதக்கணக்கில் சுகவீனம் அடைந்தார்கள். அதே நச்சு வேதிப்பொருள் தாக்கத்துக்கு ஆளான 44 வயது டான் ஸ்டர்கெஸ் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.
சால்ஸ்புரி சம்பவத்தில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் செர்கே ஸ்கிரீபாலின் வீட்டு கைப்பிடியில் அந்த ரசாயனத்தை தெளித்துச் சென்றதாக பிரிட்டன் அதிகாரிகள் குற்றம்சாட்டுகிறார்கள். அதை ரஷ்யா ஏற்க மறுத்தது.
பிற செய்திகள்:
- PUBG BAN: பப்ஜி உள்பட 118 செயலிகளை முடக்கியது ஏன்? இந்திய அரசு என்ன சொல்கிறது?
- மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவரா? நீங்கள் அறிய வேண்டிய 10 முக்கிய குறிப்புகள்
- 6 மாதங்களாக கொரோனாவுடன் போராடும் பெண்ணின் கோர அனுபவங்கள்
- தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்கு இடையே பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி
- இந்தியர்கள் மலேசியாவுக்குள் நுழைய செப்டெம்பர் 7 முதல் தடை
- "நரேந்திர மோதி செய்த பேரழிவுகள்" ட்விட்டரில் பட்டியலிட்ட ராகுல் காந்தி
- முகமது நபி கேலிச் சித்திரத்தை மறுபதிப்பு செய்த பிரெஞ்சு பத்திரிகை
- ஜிடிபி வீழ்ச்சி சொல்வது என்ன? ''ஏழைகள் சாப்பாட்டு செலவை குறைத்து விட்டார்கள்''
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












