ஐக்கிய அரபு அமீரக விண்கலம்: செவ்வாய் கோளை நோக்கி பயணத்தை தொடங்கியது மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
ஐக்கிய அரபு அமீரகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க செவ்வாய் கிரகம் செல்லும் விண்கலம் ஜப்பானிலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.
ஜப்பானில் உள்ள தனேகஷிமா என்னும் இடத்திலிருந்து ஏவப்பட்ட இந்த விண்கலம் H2-A ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
இது செவ்வாய் கிரகத்தின் காலநிலை மற்றும் பருவநிலைகளை ஆராயும்.
கடந்த வாரமே இந்த விண்கலம் ஏவப்பட திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் மோசமான வானிலையால் விண்ணில் செலுத்தப்படவில்லை.
ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் செல்வது ஏன்?
விண்கலம் உருவாக்கத்தில் பெரிதாக அனுபவம் இல்லாத நாடு ஐக்கிய அரபு அமீரகம். அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகியவற்றின் விண்வெளி ஆய்வு முகமைகள் மட்டுமே சாதித்த ஒரு விஷயத்தை முயன்று பார்க்கிறது அமீரகம்.
அமெரிக்க வல்லுநர்களால் பயிற்றுவிக்கப்பட்ட அமீரகத்தின் பொறியாளர்கள் இந்த விண்கலத்தை ஆறுமாதத்தில் உருவாக்கி இருக்கிறார்கள். இதன் செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தின் சூழல் குறித்து புதிய அறிவியல் தகவல்களை வழங்கும்.

பட மூலாதாரம், MBRSC
தண்ணீரை உருவாக்கத் தேவையான ஹைட்ரஜன், ஆக்சிஜன் இரண்டுமே செவ்வாயில் இருந்து வெளியேறிக்கொண்டே இருப்பது எப்படி என்பதில்தான் அமீரகத்தின் இந்த நம்பிக்கை விண்கலம் அதிக கவனம் செலுத்தப் போகிறது.
எப்படி இதனை சாத்தியமாக்கியது அமீரகம்?
அமீரக அரசு தொடக்கத்திலேயே இந்த திட்டத்தில் தொடர்புடையவர்களிடம் ஒரு விஷயத்தை கூறிவிட்டது. அதாவது, இதற்கான விண்கலத்தை வெளியில் வாங்கப் போவதில்லை. இதனை நாமே உருவாக்கப் போகிறோம், இதற்கான அனுபவம் மற்றும் கல்விக்கு மட்டுமே வெளிநாடுகளை சார்ந்து இருக்கப் போகிறோம் என்பதுதான் அது.
இதற்காக அமெரிக்க பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அமீரகம் மற்றும் அமெரிக்க அறிவியலாளர்கள் இணைந்து பணியாற்றி இந்த விண்கலத்தை உருவாக்கி உள்ளனர்.
கொலராடோபல்கலைக்கழகத்தில் உள்ள விண்வெளி இயற்பியல் மையத்திலும், துபாயில் உள்ள முகமது பின் ரஷீத் விண்வெளி மையத்திலும் இந்த செயற்கைக்கோள் உருவாக்கத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் தெரிந்துகொள்ள:அரபு தேசத்தின் முதல் விண்வெளி பயணம்: ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் செல்வது ஏன்?
கோடைக்காலங்கள் இன்னும் கடுமையானதாக மாறும்

பட மூலாதாரம், NG TENG FONG GENERAL HOSPITAL
பருவநிலை மாற்றம் காரணமாக வருங்காலத்தில் கோடைக்காலங்கள் மிகவும் கடுமையாக மாறினால் உலகம் முழுவதுமுள்ள லட்சக்கணக்கான மக்கள் வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அதனால் அவர்களது உடலுறுப்புகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வெப்ப அழுத்தத்தால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படக் காரணமாகும் வேலைகளை பெரும்பாலும் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள் மேற்கொள்கிறார்கள். அதாவது, வெட்ட வெளியில் விவசாயம் செய்வது, கட்டடப் பணிகளில் ஈடுபடுவது அல்லது தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவமனைகளில் அவர்கள் ஆபத்தான சூழ்நிலையில் பணியாற்றி வருகிறார்கள்.
இதற்கிடையில், பருவநிலை மாற்றத்தின் காரணமாக வருங்காலங்களில் கோடைக்காலங்கள் என்பது மனிதர்கள் பணியாற்றுவதற்கு ஊறுவிளைவிக்கும் அளவுக்கு அதிக வெப்பநிலை கொண்டதாக மாறக் கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
8 காண்டாமிருகம் உள்பட 100 வனவுயிர்கள் வெள்ளத்தில் பலி

பட மூலாதாரம், Getty Images
அசாமின் உலகப் புகழ் பெற்ற காசிரங்கா தேசியப் பூங்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 8 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் உள்பட 100க்கு மேற்பட்ட காட்டுயிர்கள் இறந்தன.
உலகிலேயே ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் அதிக அளவில் இருக்கும் இடம் இந்த காசிரங்கா தேசியப் பூங்காதான். இந்த நூற்றாண்டுத் தொடக்கத்தில் அழிவின் விளிம்பில் இருந்த இவை கொஞ்சம் கொஞ்சமாக மீட்கப்பட்டன.
தற்போது காசிரங்கா தேசியப் பூங்காவில் மட்டும் குறைந்தது 2,400 ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளன.
ஆனால், இந்த ஆண்டு பருவமழையில் இந்த பரந்து விரிந்த தேசியப் பூங்காவில் 85 சதவீதப் பரப்பளவு வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், காண்டாமிருகங்கள், முள்ளம்பன்றிகள், எருமைகள், மான்கள் உள்ளிட்ட விலங்குகள் வெள்ளத்தில் மூழ்கியும், வெள்ளத்தில் இருந்து தப்பி ஓடும்போது வாகனங்களில் அடிபட்டும் இறந்துள்ளன.
விரிவாக படிக்க:பிரம்மபுத்ரா வெள்ளத்தில் 8 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் பலி
சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ்: "போர்க்கால அவசரநிலை"

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தின் தலைநகரான உரும்கியில் "போர்க்கால அவசரநிலை" அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதிதாக 17 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சனிக்கிழமையன்று அந்த நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியிலிருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதாகக் கருதப்படும் நிலையில், அந்த நாட்டில் நோய்த்தொற்று பாதிப்பு பிப்ரவரி - மார்ச் மாதத்துக்குப் பிறகு பெரியளவில் அதிகரிக்கவில்லை.
இந்து கொரோனா நோயாளி உடலை அடக்கம் செய்த முஸ்லிம் அமைப்பு

பட மூலாதாரம், TMMK
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை17) இறந்த கொரோனா நோயாளி ஒருவர் உடலை முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தை சேர்ந்தவர்கள் அடக்கம் செய்தனர்.
இந்த செய்தி பரவலாக கவனம் பெற்றது. இதற்கு இறந்தவர் இந்து என்பது மட்டுமே காரணமல்ல.
தஞ்சாவூர் மாவட்டம் பண்ணவயல் பகுதியைச் சேர்ந்த கருணாநிதி(62) என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒருவார காலமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்துவந்தார். கடந்த வெள்ளியன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் (தமுமுக) இலவச அவசர ஊர்தி சேவை மூலமாக அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விரிவாக படிக்க:இந்து கொரோனா நோயாளி உடலை அடக்கம் செய்த முஸ்லிம் அமைப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












