8 காண்டாமிருகம் உள்பட 100 காட்டுயிர்கள் வெள்ளத்தில் பலி: அசாம் காசிரங்கா தேசியப் பூங்காவில் சோகம்

பட மூலாதாரம், Getty Images
அசாமின் உலகப் புகழ் பெற்ற காசிரங்கா தேசியப் பூங்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 8 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் உள்பட 100க்கு மேற்பட்ட காட்டுயிர்கள் இறந்தன.
உலகிலேயே ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் அதிக அளவில் இருக்கும் இடம் இந்த காசிரங்கா தேசியப் பூங்காதான். இந்த நூற்றாண்டுத் தொடக்கத்தில் அழிவின் விளிம்பில் இருந்த இவை கொஞ்சம் கொஞ்சமாக மீட்கப்பட்டன.
தற்போது காசிரங்கா தேசியப் பூங்காவில் மட்டும் குறைந்தது 2,400 ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளன.
ஆனால், இந்த ஆண்டு பருவமழையில் இந்த பரந்து விரிந்த தேசியப் பூங்காவில் 85 சதவீதப் பரப்பளவு வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், காண்டாமிருகங்கள், முள்ளம்பன்றிகள், எருமைகள், மான்கள் உள்ளிட்ட விலங்குகள் வெள்ளத்தில் மூழ்கியும், வெள்ளத்தில் இருந்து தப்பி ஓடும்போது வாகனங்களில் அடிபட்டும் இறந்துள்ளன.
காண்டாமிருகம் தவிர, வங்காள வெள்ளைப் புலி, யானை உள்ளிட்ட காட்டுயிர்களும், பறவைகளும் வாழும் வளமான காட்டுப் பகுதியான இந்த தேசியப் பூங்கா பிரம்மபுத்திரா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது யுனெஸ்கோ பாரம்பரியத் தலமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அசாம் உள்ளிட்ட பிரம்மபுத்திரா வடிநிலப் பகுதிகளில் ஆண்டுதோறும் பருவமழைக் காலத்தில் மோசமான வெள்ளம் ஏற்படும். இந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் வன விலங்குகள் தவிர, அசாமிலும், நேபாளத்திலும் 190 மனிதர்கள் கொல்லப்பட்டனர். பல லட்சக்கணக்கானவர்கள் இடம் பெயர வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கான கிராமங்கள் நீரில் மூழ்கின. நூற்றுக்கணக்கான மீட்புதவி மையங்கள் அமைக்கப்பட்டன.
8 ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் வெள்ளத்திலும், மேலும் ஒன்று இயற்கையான காரணத்தாலும் இறந்ததாக தேசியப் பூங்கா அதிகாரிகள் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையிடம்தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்:
- பேரண்டம் உருவானதன் ரகசியம் என்ன? புதுவகை அணுத் துகள் கண்டுபிடிப்பு விடை சொல்லுமா?
- பாடகி சுசித்ரா சாத்தான்குளம் வழக்கு தொடர்பான காணொளியை நீக்கியது ஏன்? - பிபிசிக்கு பேட்டி
- கொரோனா தடுப்பு மருந்து: இந்தியாவில் நாளை முதல் தொடங்குகிறது பரிசோதனை
- இரானில் உண்மையில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று இருந்தது? - அதிபர் வெளியிட்ட கணக்கு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












