அமெரிக்க விசா விதிகள்: ‘வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள்’

பட மூலாதாரம், Alamy
கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியால் பல்கலைக்கழக படிப்பு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டால், வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்ற முடிவை அந்நாட்டு அரசாங்கம் கைவிட்டுள்ளது.
கடந்த வாரம் இது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு தற்போது மாற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், அவர்கள் படிக்கும் பல்கலைக்கழக பாடப்பிரிவு முழுவதும் ஆன்லைன் கல்வி முறைக்கு மாறிவிட்டால், தொடர்ந்து அமெரிக்காவில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அந்நாடு சமீபத்தில் அறிவித்தது.
நேரடியாக கல்வி கற்கும்படி மாணவர்கள் தங்கள் பாடத்திட்டத்தை மாற்றி கொண்டால் மட்டுமே, அவர்கள் தொடர்ந்து அமெரிக்காவில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டது.
மேலும் இந்த விதிகளை மீறி அங்கு தொடர்ந்து தங்கி இருப்பவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவர் என்று அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க துறை (ஐசிஇ) தெரிவித்தது.
இந்த முடிவை எதிர்த்து மசெசுயடெஸ் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஹாவர்ட் பல்கலைக்கழகம் ஆகியவை வழக்கு தொடர்ந்தன.

பட மூலாதாரம், Getty Images
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மாணவர்கள் அமெரிக்காவிற்கு படிக்க செல்கிறார்கள். அந்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கும் இதனால் குறிப்பிடத்தக்க அளவிலான வருவாய் கிடைக்கிறது.
பல்கலைக்கழகங்களின் எதிர்ப்பு
எம்.ஐ.டி, ஹாவர்ட் போன்ற பல்கலைக்கழகங்கள் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அடுத்த இரண்டு நாட்களில் தொடர்ந்து பல வழக்குகள் தொடரப்பட்டன.
மாணவர்களின் வகுப்புகள் முழுவதும் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்ற முடிவு, தன்னிச்சையான தவறான நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முடிவு என்று பல்கலைக்கழகங்கள் தரப்பில் கூறப்பட்டது.

சுமார் 59 பல்கலைக்கழகங்கள் இந்த முடிவுக்கு எதிராக ஒன்று திரண்டன.
வெளிநாட்டு மாணவர்களின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்படவில்லை என்றும், மாறாக பல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இது எடுக்கப்பட்டதாகவும் அவை வாதடின.
அப்படி பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டுவிட்டால், இயல்பு நிலை திரும்பிவிட்டது போல காட்சி அளிக்கும் என்றும் அது நவம்பர் மாதம் நடைபெற உள்ள தேர்தலில் டிரம்ப்புக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
எனினும், தற்போதைய நிலையில் கல்லூரிகள் திறக்கப்படுவது மாணவர்களுக்கு ஆபத்தான சூழலை ஏற்படுத்தலாம் என்று கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மாணவர்களின் நிலை
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.
கொரோனா நெருக்கடியால் தாங்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த கல்லூரிக்கு நேரில் சென்று படிக்க முடியாததால் வருத்தத்தில் இருந்த பல மாணவர்கள், விசா முறையில் மாற்றங்கள் என்ற அறிவிப்பால் பெரும் மன அழுத்தத்தில் இருந்தனர்.
“தற்போது விசா குறித்த மாற்றங்களை கைவிட்டிருப்பது சற்று நிம்மதியாக இருந்தாலும், எப்போது என்ன நடக்குமோ என்ற பதற்றம் இருக்கிறது, நாங்கள் எதிர்ப்பார்த்தது போல எதுவும் நடக்கவில்லை. எனினும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்கிறார் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் வந்தனா.
தனது மற்ற இந்திய நண்பர்களும் விசா முறையில் மாற்றம் கொண்டு வந்ததை கைவிட்டிருப்பது குறித்து மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் கூறுகிறார்.
அமெரிக்க வணிகத்துறைப்படி, அந்நாட்டு பொருளாதாரத்தில் ,வெளிநாட்டு மாணவர்களின் பங்களிப்பு 2018ஆம் ஆண்டில் 45 பில்லியன் டாலர்கள் ஆகும்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












