சச்சின் பைலட், ஜோதிராதித்ய சிந்தியா, அசோக் தன்வார்: இளம் தளபதிகளை இழக்கும் காங்கிரஸ்

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

2004-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 'இந்தியா ஒளிர்கிறது' என்ற கோஷத்துடன் ஆட்சியில் இருந்த பாஜக தேர்தலை சந்தித்தது.

8 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் கட்சி, சோனியா காந்தியின் தலைமையில் இரண்டாவது நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டது.

ஆட்சியில் இருக்கும் பலம்பொருந்திய பாஜகவை வீழ்த்த தனது வியூகங்களை மாற்றவேண்டிய சூழல் காங்கிரஸ் கட்சிக்கு இருந்தது.

தனது தந்தை ராஜீவ் காந்தி மற்றும் தாய் சோனியா ஆகிய இருவரும் போட்டியிட்ட அமேதி தொகுதியில் ராகுல் காந்தி களமிறக்கப்பட்டார்.

ராகுல் தலைமையிலான இளம்படை

ராகுல் காந்தியை போல சச்சின் பைலட், மிலிந்த் தியோரா, ஜித்தின் பிரசாதா, நவீன் ஜிண்டல் என பல இளம் காங்கிரஸ் நிர்வாகிகள் முதல்முறையாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 2002-இல் இடைத்தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டு வென்ற ஜோதிராதித்ய சிந்தியா மீண்டும் வென்றார்.

தேர்தல் முடிந்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமைந்தவுடன், காங்கிரஸின் இளம்படை பாஜகவை வெற்றி கொண்டதாக கூறப்பட்டது.

16 ஆண்டுகள் கழித்து, தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து பல இளம் தலைவர்கள் கட்சியில் இருந்து தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

இரண்டாவது முறையாக மீண்டும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று பாஜக ஆட்சியை பிடித்தவுடன், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித்தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார்.

வேறு யாரும் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு பொறுப்பேற்காத நிலையில், மீண்டும் முன்னாள் தலைவரான சோனியா காந்தியை தற்காலிக தலைவராக காங்கிரஸ் கமிட்டி நியமித்தது.

ராகுலுக்கு நெருக்கமானவர்கள் தொடர்ந்து விலகுவது ஏன்?

காங்கிரஸ் கட்சியில் வேறு எந்த தலைவரும் தலைமை பதவிக்கு தயாராகவில்லையா என்ற ரீதியில் அப்போது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. மேலும் காங்கிரஸ் கட்சியில் இளம் தலைவர்களின் பங்கு என்ன என்பது குறித்தும் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஹரியாணா மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த அசோக் தன்வார் காங்கிரஸ் கட்சியில் இருந்து 2019 அக்டோபரில் விலகினார்.

இளைஞர் காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த அசோக் தன்வார், ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக பார்க்கப்பட்டவர்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

கடந்த மார்ச் மாதத்தில், மத்தியப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்பட்ட ஜோதிராதித்யா சிந்தியா, அம்மாநில அரசியலிலும், காங்கிரஸ் கட்சியிலும் மிகப்பெரிய அரசியல் புயலை உண்டாக்கினார்.

ஜோதிராதித்யா சிந்தியா கட்சியில் இருந்து விலகி தலைமைக்கு அதிர்ச்சி அளித்த நிலையில், அவருக்கு ஆதரவாக ஆறு அமைச்சர்கள் உள்பட 22 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தனர்.

யாரும் எதிர்பாராத வகையில் ஜோதிராதித்யா சிந்தியா பாஜகவில் இணைந்தார்.

மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜகவை சேர்ந்த சிவ்ராஜ் சிங் சவுகான் மீண்டும் மாநில முதல்வராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக ராஜஸ்தான் மாநில அரசியலில் சச்சின் பைலட்டை மையமாக கொண்டு மற்றொரு புயல் வீசியது.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

2018 டிசம்பரில் ராஜஸ்தானில் வென்று காங்கிரஸ் ஆட்சியமைத்தபோது சச்சின் பைலட் முதல்வர் ஆக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவருக்கு அப்பதவி வழங்கப்படாததால் அப்போது முதலே அவர் முதல்வர் அசோக் கெலோட் உடன் வெளிப்படையாகவே மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார்.

கடந்த 3 நாட்களாக இந்த மோதல் மிக தீவிர நிலையை எட்டியது.

அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் தரப்புகளுக்கு இடையே கடும் அறிக்கை போர் நடந்து கொண்டிருந்த நிலையில், இரண்டாவது நாளாக நடைபெற்ற ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திலும் சச்சின் பைலட் கலந்துகொள்ளவில்லை.

பின்னர் ஜுலை 14-ஆம் தேதியன்று சச்சின் பைலட் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்தும், துணை முதலமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்

பட மூலாதாரம், TWITTER @SACHINPILOT

படக்குறிப்பு, கோப்புப்படம்

இரண்டாவது முறையாக நரேந்திர மோதி பிரதமராக பொறுப்பேற்ற பின்னர், சட்டப்பிரிவு 370 நீக்கம், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிக்க நடக்கும் முயற்சி என காங்கிரஸ் கட்சி போராட பல அம்சங்கள் இருந்தன.

இத்தகைய போராட்டங்கள் அக்கட்சிக்கு புத்துணர்வு ஊட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மிக அண்மைய பிரச்சனையான கொரோனா பரவல், பொது முடக்கத்தால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேர்ந்த துயரங்கள், வீழ்ந்த பொருளாதாரம் போன்றவை அக்கட்சியை இந்தாண்டு நடக்கவுள்ள பிகார், அடுத்தாண்டு நடக்கவுள்ள தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு வலுவாக தயார் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இம்மோதல்கள் மற்றும் கட்சி விலகல்கள் காங்கிரஸ் கட்சியில் நடந்துள்ளன.

காங்கிரஸ் கட்சியில் இருந்து இளம் தலைவர்கள் விலகி செல்வது மற்றும் அதனால் எம்மாதிரியான தாக்கம் உண்டாகும் என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ராதிகா ராமசேஷன் பிபிசி தமிழிடம் பேசினார்.

''பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் மீண்டும் வென்று மத்தியில் ஆட்சிக்கு வர முடியாது என எண்ணம் இளம் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகவே இந்த நிகழ்வுகள் எண்ண வைக்கின்றன'' என்று அவர் தெரிவித்தார்.

''2004-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சியை திறன்பட வழிநடத்தி சோனியா காந்தி மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருவதை உறுதி செய்தார். அதேபோல் 2009-ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியின் வியூகங்கள் சிறப்பாக அமைந்ததால் 200க்கும் அதிகமான தொகுதிகளை கட்சியால் பெற முடிந்தது'' என்று நினைவுகூர்ந்தார்.

''அதேவேளையில் ராகுல்காந்தியின் தலைமை காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிகரமாக அமையவில்லை. அண்மையில் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிய, கலகக்குரல் எழுப்பிய யாரும் மூத்த தலைவர்கள் இல்லை.

சச்சின் பைலட், ஜோதிராதித்ய சிந்தியா, அசோக் தன்வார் ஆகிய மூவரும் ராகுல்காந்திக்கு நெருக்கமானவர்களாக பார்க்கப்பட்டவர்கள்'' என்று கூறினார்.

''ஜோதிராதித்ய சிந்தியா யாரும் எதிர்பாரா வகையில் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பாஜகவில் சேர்ந்துவிட்டார். அசோக் தன்வார் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகியபிறகு இதுவரை எக்கட்சியிலும் சேரவில்லை. சச்சின் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்று தெரியவில்லை''

''ராகுலின் டீமை சேர்ந்த இவர்கள் எடுத்த முடிவு குறித்து நிச்சயம் ராகுல் காந்தி கவலைப்படவேண்டும். அனைவரும் கட்சியை விட்டு வெளியேறி விட்டால், ராகுலை தவிர வேறு யாரும் இல்லை என்ற நிலை வரக்கூடும்'' என்று ராதிகா ராமசேஷன் மேலும் குறிப்பிட்டார்.

சச்சின் பைலட் ஒரு முக்கிய தலைவர் என்று உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மற்றொரு இளம் தலைவரான ஜித்தின் பிரசாதா ட்வீட் வெளியிட்டுள்ளார். இதேபோன்று ஜோதிராதித்ய சிந்தியா கட்சியை விட்டு விலகியபோதும் அவருக்கு காங்கிரஸ் கட்சியில் பலரும் தனிப்பட்ட ரீதியில் தங்கள் ஆதரவை தெரிவித்தனர் எனபது குறிப்பிடத்தக்கது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

''ராகுல் காந்தி தற்போது கட்சித்தலைவராக இல்லாவிட்டாலும், அவருக்கு கட்சியில் அதிகாரம் இருக்கிறது என்றும், அவர் கூறுவதே இறுதி வாக்காக அக்கட்சியில் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்றும், நான் கேள்விப்படுகிறேன்''

''இந்நிலையில் இந்த சம்பவங்கள் ராகுல் காந்தியின் தலைமை பண்பை இன்னமும் வளர்த்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சியில் இன்னமும் பல இளம் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளனர். அவர்களுக்கு கட்சித்தலைமை தான் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்''

''அதேவேளையில் சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியில் வேகமாக வளர்ந்து வந்தார். அவர் பாஜகவுக்கு சென்றாலும் காங்கிரஸ் கட்சியில் இருந்தது போல பெரிய பதவியில் அமர முடியுமா என்று தெரியவில்லை. ராஜஸ்தானில் மாநில கட்சிக்கும் பெரிய வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை'' என்று ராதிகா கூறினார்.

காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த முரண்பாடுகள் மற்றும் கட்சி விலகல்கள் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா என்று கேட்டதற்கு , ''நடப்பு நிலையை காங்கிரஸ் கட்சி நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் பாஜகவை அக்கட்சியால் எதிர்கொள்ளமுடியும்''

''2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னமும் 4 ஆண்டுகள் உள்ளன. அதற்கு முன்பாக பிகார், தமிழ்நாடு, அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடக்கவுள்ளன.

இந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிகள் தான் அக்கட்சியினருக்கு புத்துணர்வு தரும். இவை தான் 2024 தேர்தலுக்கு கட்சியை தயார் செய்யும்'' என்று அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :