கொரோனா தொற்று உலகில் 1 கோடியைத் தாண்டியது: இறந்தோர் எண்ணிக்கை 5 லட்சம்

பட மூலாதாரம், Getty Images
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது. இந்த வைரஸால் இறந்தவர்கள் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட 5 லட்சத்தை எட்டியுள்ளது.
188 நாடுகளில் பரவியுள்ள இந்த உலகத் தொற்று சீனாவில் தொடங்கியிருந்தாலும், இதனால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா. அந்நாட்டில் 25 லட்சம் பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு, 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
அடுத்தபடியாக அதிகம் பேருக்கு தொற்று ஏற்பட்டு, அதிகம் பேரை பலி கொடுத்த நாடு பிரேசில். அங்கு 13 லட்சம் பேருக்கு மேல் இந்த நோய் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 57 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவில் 6 லட்சத்து 33 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 9 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர்.தொற்று எண்ணிக்கை கண்டறியப்பட்டதன் அடிப்படையில் 4வது இடத்தில் உள்ள இந்தியாவில் 5.28 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 16 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

3.11 லட்சம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள பிரிட்டனில் 43 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வெறும் எண்ணிக்கையை வைத்து எந்த நாடு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதை சொல்வது கடினம். நாடுகளின் மக்கள் தொகை, பரிசோதனைகளின் எண்ணிக்கை, தீவிரம், பரிசோதனைகள், இறப்பு எண்ணிக்கையின் வெளிப்படைத் தன்மை ஆகியவற்றைப் பொறுத்தே ஒரு நாடு எந்த அளவுக்கு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைக் கூற இயலும் என்றாலும், பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் அடிப்படையில் முதலில் இருக்கிற ஐந்து நாடுகள் இவைதான்.
இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகளின் அடிப்படையிலானவை.
கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகில் சுமார் 120 ஆராய்ச்சித் திட்டங்கள் நடந்துவருகின்றன. பிரிட்டனில் நடக்கும் தடுப்பு மருந்து ஆராய்ச்சி, தற்போது மனிதர்களுக்கு தடுப்பு மருந்து பரிசோதனை மேற்கொள்ளும் கட்டத்துக்கு வந்துள்ளது.இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு முடக்க நிலை முக்கியமான உத்தியாக கையாளப்படுகிறது.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












