Fari and lovely பெயர் மாற்றம் - சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கீதா பாண்டே
- பதவி, பிபிசி செய்தியாளர்
யூனிலீவர் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் `முகப் பொலிவு` க்ரீமான `ஃபேர் அண்ட் லவ்லி`யில் உள்ள ஃபேர் என்ற வார்த்தை நீக்கப்படும் என அந்நிறுவனம் நேற்று தெரிவித்திருந்தது. இந்த அறிவுப்பைப் பலர் வரவேற்றாலும், ஆர்வலர்கள் இது பெரிதாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது என்கின்றனர்.
`வெள்ளையாக இருப்பதே அழகு` என்றும் இதனால் நிறம் குறைவாக இருக்கும் பெண்கள் பாதுகாப்பற்றத்தன்மையுடன் உணருவதற்கும் இந்த ஃபேர் அண்ட லவ்லி க்ரீம் துணை புரிகிறது என யூனிலீவர் மற்றும் அதன் இந்தியத் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடட் மீது ஏற்கனவே பலர் கடுமையான விமர்சனங்கள் உள்ளன.
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜியார்ஜ் ஃபிலாய்ட் மரணத்தைத் தொடர்ந்து உலகெங்கும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றன. இந்நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் பிரபலமான தங்களின் இரு க்ரீம்களை தயாரிக்கவோ அல்லது விற்கவோ போவதில்லை எனத் தெரிவித்தது.

பட மூலாதாரம், Getty Images
"எங்களின் சில விற்பனை பொருட்களின் பெயர்களும், அதுகுறித்த கூற்றுகளும் உங்களின் நிஜமான நிறத்தைக் காட்டிலும் வெள்ளை நிறமே சிறந்தது என்று கூறுவதாகப் போல உள்ளது என கடந்த சில வாரங்களாக விமர்சனங்கள் எழுகின்றன. இது எங்களின் நோக்கம் அல்ல. - ஆரோக்கியமான சருமமே அழகான சருமம்," என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்தியாவில் ஃபேர் அண்ட் லல்வி `முகத்தின் கறுமையைக் குறைக்கும்` க்ரீம்களில் அதிகம் விற்பனையாகிறது. இதன் ஆண்டு லாபம் 24பில்லியம் ரூபாய் ஆகும்.
ஃபேர் அண்ட் லல்வி நிறுவனம் முதன்முதலில் 1970ஆம் ஆண்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த காலத்திலிருந்து பதின் வயது மற்றும் இளம் பெண்கள், வெள்ளையாக இருப்பது என கருதப்படுவதால் மில்லியன் கணக்கான ட்யூப்களை வாங்கியுள்ளனர்.
வெள்ளையாக இருந்தால் உங்களுக்கு காதல்த் துணை கிடைக்கும் அல்லது ஒரு வசீகரமான ஒரு வேலை கிடைக்கும் என கூறும் ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரங்களில் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.
வியாழனன்று காலை ஃபேர் அண்ட் லவ்லி டிவிட்டரில் இந்திய அளவில் டிரண்டானது. பல ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரத்தையும் அதன் விற்பனையையும் தடை செய்ய வேண்டும் என கோரினர்.
இந்த க்ரீமை ஆசிய சந்தைகள் மற்றும் மேற்கத்திய நாடுகளில் உள்ள ஆசியக் கடைகளில் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் என கடந்த இரண்டு வாரங்களாக, சர்வதேச அளவில் குறைந்தது மூன்று change.org மனுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
வியாழனன்று, இந்த கீரிமிற்கான புதிய பெயர் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அது ஒழுங்குமுறை ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்று தெரிவித்தது.
மேலும் ''ஃபேர், ஒயிட் மற்றும் லைட் என்ற வார்த்தைகளை அழகு என்ற வார்த்தையுடன் அடையாளப்படுத்தியது தவறு என யூனிலீவர் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பட மூலாதாரம், getty images
அட்டைப்பெட்டியில் தோலின் நிறத்தின் அளவைக் குறிக்கும் அளவுகோல், மற்றும் விளம்பரங்களில் கிரீமை பயன்படுத்துவதற்கு முன்,பின் ஒப்பீடு என கடந்த சில வருடங்களில், ஏற்கனவே சில மாற்றங்களை நிகழ்த்தியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்காலங்களில், பல நிறங்களில் உள்ள பெண்கள், இந்தியா மற்றும் பல நாடுகளில் உள்ள அழகை குறிக்கும் வகையில் விளம்பரங்கள் இருக்கும் என அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.
தொடரும் விமர்சனங்கள்
பலர் இந்த அறிவிப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது என வர்ணித்தாலும், பலர் அந்த க்ரீம், அதே மூலப்பொருட்களைக் கொண்டு வேறொரு புதிய பெயரில் விற்கப்படுகிறது. இதனால் என்ன பலன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து change.orgயில் கோரிக்கை உருவாக்கிய சந்தனா ஹிரான் கூறுகையில், "இது நல்ல முடிவுதான் ஆனால் மாற்றத்திற்கான முதற்படிதான்," என்கிறார்.
"அவர்களின் விளம்பரம் செய்யும் விதத்தில் மாற்றம் ஏற்படுகிறது என்பது மகிழ்ச்சியான செய்திதான். ஆனால் அவர்கள் அந்த பொருளின் நோக்கத்தைப் பார்க்க வேண்டும். அதை என்னைப் பெயரை வைத்து அழைத்தாலும், முகப்பொலிவு க்ரீம்களில் ஒன்றுதானே," என்கிறார் சந்தனா ஹிரான்.
எனவே இங்கே முக்கிய கேள்வி என்னவென்றால்? க்ரீமின் பெயரை மாற்றினால் ஆண்டாண்டு காலமாக முகத்தின் நிறம் குறித்து இருக்கும் மனோபாவம் மாறிவிடுமா என்பதுதான்.

பட மூலாதாரம், getty images
சமீப வருடங்களில், கறுப்பு நிறமே அழகு (Dark is Beautiful) மற்றும் #unfairandlovely போன்ற பிரசாரங்களில் ஈடுபடுபவர்கள் வெள்ளை நிறம் மீது சமூகத்தில் இருக்கும் மோகம் குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.
அதிகரிக்கும் விதத்தில் பல படித்த பெண்கள், சமூக வலைத்தளங்களில், இம்மாதிரியான க்ரீம்களின் விளம்பரங்களில் நடிக்கும் பிரபல நடிகர்கள் மீது விமர்சனங்களை வைக்கின்றனர்.
ஆனால் அவர்களின் இந்த பிரசாரங்கள் இந்த க்ரீம்களின் விற்பனையையோ அல்லது புகழையையோ தடுக்கவில்லை என்பதே உண்மை. மாறாக இந்த க்ரீம்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது.
கடந்த வாரம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தங்களின் அழகுசாதன பொருட்கள் விற்பனை நிறுத்தப்படும் என அறிவித்தவுடன், ஆசியாவில் சிலர் தங்களுக்குத் தேவையெனில் இதை வாங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறியதே இதற்குச் சாட்சி.
சமூக வலைத்தளங்களில் சிலர் இது தங்களின் சமூகத்திற்கு எதிரான ஒரு பாகுபாடு என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில், ஃபேர் அண்ட் லவ்லி க்ரீம் கிடைக்காமல் போனால் பலர் வருத்தப்படவும் வாய்ப்பு உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
.












