சஃபூரா சர்கர்: டெல்லி மத வன்முறை வழக்கில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிணை

SAFOORA ZARGAR Safura Zargar gets bail from Delhi High Court

பட மூலாதாரம், SAFOORA ZARGAR FB

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண் சஃபூரா சர்கருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.

விசாரணை நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்க மறுத்திருந்த நிலையில், கடந்த வியாழன்று அவர் உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார்.

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, 27 வயதாகும் சஃபூரா உள்ளிட்ட டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

கடந்த பிப்ரவ்ரி மாதம் வடகிழக்கு டெல்லியில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், வன்முறையை தூண்டிய குற்றச்சாட்டில், ஏப்ரல் 10ஆம் தேதி சஃபூரா கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவருக்கு பிணை வழங்கப்பட்டது. எனினும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் பதியப்பட்டு மீண்டும் அவரை டெல்லி போலிஸார் கைது செய்தனர்.

இன்று நடந்த விசாரணையில் டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான இந்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, மனிதாபிமான அடிப்படையில் சஃபூராவுக்கு ஜாமின் வழங்க தாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என நீதிமன்றத்தில் கூறினார்.

Safura Zargar gets bail from Delhi High Court

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பல சமயங்களில் கலவரத்தை ஒடுக்காமல் டெல்லி காவல் துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.

இதனை தொடர்ந்து டெல்லி நீதிமன்றம் சஃபூராவுக்கு பிணை வழங்கியுள்ளது.

வழக்கு விசாரணையைத் தடுக்கும் செயல்களில் ஈடுபட கூடாது, அனுமதியின்றி டெல்லியை விட்டு செல்லக்கூடாது போன்ற நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது

ஆறு மாத கர்ப்பிணியான சஃபூரா, ஜாமியா பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பாடப்பிரிவில் எம்.பில் படித்து வந்தார்.

இந்திய மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நாடு முழுக்க பல இடங்களில் போராட்டம் நடந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் வட கிழக்கு டெல்லியில் நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில் 53 பேர் கொல்லப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலோனோர் முஸ்லிம்கள்.

இந்த கலவரங்களைத் தூண்டியதாகக் கூறி ஏப்ரல் மாதம் சஃபூரா உட்பட 7 ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களை டெல்லி போலிஸார் கைது செய்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: