டொனால்டு டிரம்ப்: அமெரிக்க அதிபரை கடுமையாக விமர்சிக்கும் நூலுக்கு தடைவிதிக்க நீதிபதி மறுப்பு மற்றும் பிற செய்திகள்

டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக சீனாவின் உதவியை நாடினார் என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தும் அமெரிக்க முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனின் நூலுக்குத் தடைவிதிக்க மறுத்தது நீதிமன்றம்.

பணி தொடர்பான ஒப்பந்தத்தில் பணிக்காலம் தொடர்பாக புத்தகம் எழுதினால், வெளியிடுவதற்கு முன்பாக அரசின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கவேண்டும் என்று இருக்கும் ஷரத்தை அவர் மதிக்கவில்லை என்று டிரம்ப் நிர்வாகம் குற்றம்சாட்டியது.

ஏற்கெனவே நூற்றுக்கணக்கான புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஜான் போல்டன் புத்தகத்துக்கு தடை விதிப்பதால் எந்த சேதாரம் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்று அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறியதால், தடை கோரிக்கை ஏற்கப்படவில்லை என்று வாஷிங்டன் டிசி மாவட்ட நீதிபதி ராய்ஸ் லேம்பர்த் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

அதே நேரம், ஜான் போல்டன் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புடன் விளையாடிவிட்டார் என்றும், நாட்டுக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டார் என்றும் நீதிபதி குற்றம்சாட்டினார்.

ஏற்கெனவே கசியவிடப்பட்ட இந்த புத்தகத்தை தடை விதித்திருந்தாலும் எந்தப் பயனும் ஏற்பட்டிருக்காது என்று குறிப்பிட்ட டிரம்ப், போல்டனுக்கு நீதிபதி தெரிவித்த கண்டனங்களை மிகப் பெரிய வெற்றி என்று டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

ஜான் போல்டன் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக 2018 ஏப்ரல் மாதம் இணைந்தார். இரான், ஆப்கானிஸ்தான், வடகொரியா போன்ற முக்கிய சர்வதேச விவகாரங்களில் டிரம்ப்பின் முடிவோடு முரண்பட்டு 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணியில் இருந்து விலகினார்.

இந்த முரண்பாடுகள் எழுந்த உரையாடல் நடந்த அறையில், டிரம்ப் பிழையாகவும், கோபமாகவும், அதிர்ச்சியூட்டும் வகையில் விஷயம் தெரியாதவராகவும் நடந்துகொண்டார் என்று போல்டன் குற்றம்சாட்டுகிறார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரங்களின் அடிப்படையில் வைக்கப்படவில்லை. தனிப்பட்ட உரையாடல்களின் அடிப்படையில் வைக்கப்பட்டது. எனவே, இதனை சரிபார்க்க முடியாது.

போல்டன் வைத்த சில குற்றச்சாட்டுகள்:

மீண்டும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சீன அதிபர் ஷி ஜின்பிங் உதவியை நாடினார் டிரம்ப் என்பது அதில் மிகவும் தீவிரமான குற்றச்சாட்டு.

தென்னமரிக்க நாடான வெனிசுவேலா மீது படையெடுப்பது இனிமையான ஒன்றாக இருக்கும் என்று டிரம்ப் கூறியதாகவும், அது ஐக்கிய அமெரிக்க நாட்டின் ஒரு பகுதிதான் என்று கூறினார் என்பது மற்றொரு குற்றச்சாட்டு.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் வீகர் முஸ்லிம்களுக்காக நன்னடத்தை முகாம்களை அமைத்த அந்நாட்டு அரசின் செயலை டிரம்ப் சரி என்று கூறினார் என்பது மற்றொரு குற்றச்சாட்டு.

Presentational grey line

இந்திய ராணுவம் ஆயுதம் எடுப்பதை தடுத்த ஒப்பந்தங்கள்

இந்திய ராணுவம்

பட மூலாதாரம், Getty Images

சீனாவின் தாக்குதலுக்கு பதில் தாக்குதலை நடத்த இந்திய வீரர்கள் ஏன் ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை என கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக வினா எழுப்பிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சீன வீரர்கள் இருக்கும் இடத்தில் ஆயுதங்கள் இல்லாமல் இந்திய ராணுவத்தை அனுப்பியது யார் என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன. ஆனால் அவர்கள் சீனாவுடனான ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று கூறினார்.

Presentational grey line

யோகா எப்படியெல்லாம் செய்யக்கூடாது?

யோகா

பட மூலாதாரம், Getty Images

ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த நாளில் உலகின் பல பகுதிகளை அனைவரும் ஒன்று சேர்ந்து யோகா பயிற்சிகள் மேற்கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக யோகா நிகழ்ச்சிகள் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்படவில்லை.

யோகா பயிற்சியின்போது பொதுவாக சிலர் மேற்கொள்ளும் தவறுகள் என்னென்ன, யோகா மேற்கொள்ளும்போது நாம் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியவை என்னென்ன? பிபிசியிடம் பேசிய யோகா தெரபிஸ்ட் முத்துலட்சுமி வெங்கடேசன் விளக்குகிறார்.

Presentational grey line

பொழுதுபோக்கு துறையின் எதிர்காலம் என்னவாக இருக்கும் தெரியுமா?

பொழுதுபோக்கு துறையின் எதிர்காலம் என்னவாக இருக்கும் தெரியுமா?

சினிமா ரசிகர்கள், அவர்களுக்கு பிடித்தமான நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களை முதல் நாள் முதல் காட்சியை திரை அரங்கத்தில் சென்று பார்ப்பதில் அலாதி மகிழ்ச்சியடைவார்கள்.

தமிழில் சில தினங்களுக்கு முன் 'பொன்மகள் வந்தாள்' ஓடிடி தளத்தில் வெளியானது அதனையடுத்து தற்போது பென்குயின் படம் வெளியாகியுள்ளது.

மேலும் பல மாதங்களுக்கு தியேட்டர்களை திறப்பதற்கான வாய்ப்பு இல்லை என்ற பட்சத்தில் இந்த படங்கள் அமேசான் ப்ரைமில் வெளியானது.

Presentational grey line

தமிழகத்தில் வென்டிலேட்டரில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு யோக நித்ரா சிகிச்சை

யோக நித்ரா

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் 650 நபர்களுக்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவ முறை சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்காக அவர்களின் உடல்நலனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மருத்துவர்கள் கண்காணித்துவருகிறார்கள்.

கொரோனாவுக்கு ஆங்கில மருத்துவ முறையில் தடுப்பு மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை என்ற நிலை நீடிக்கிறது. வைட்டமின் மாத்திரைகள் வழங்குவதோடு இந்திய மருத்துவ முறைகளையும் பின்பற்றவேண்டும் என இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அறிவித்ததை அடுத்து, தமிழகத்திலும் இயற்கை, யோகா மருத்துவத்தில் சோதனை செய்யப்படுகிறது.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: