You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: முதல் மரணத்தை பதிவு செய்தது சிங்கப்பூர்; மலேசியாவில் 8 பேர் பலி
- எழுதியவர், சதீஷ் பார்திபன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் கொரோனோ வைரஸ் தொற்று, சிங்கப்பூரில் தனது மரணக்கணக்கை துவங்கியுள்ள நிலையில், மலேசியாவில் வைரஸ் தொற்றால் இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர்.
இத்தகவலை மலேசிய சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது. மலேசியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,183ஆக அதிகரித்துள்ளது. இன்று, மார்ச் 21ஆம் தேதி மட்டும் புதிதாக 153 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 114 பேர் உரிய சிகிச்சைகளுக்குப் பிறகு முழுமையாக குணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
மேலும் 500 வென்டிலேட்டர் கருவிகள் தேவை என்கிறது மலேசிய சுகாதார அமைச்சு
இந்த வாரமும் அடுத்த வாரமும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என மலேசிய சுகாதார அமைச்சின் பொது இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் சுவாசக் கோளாறுகளை எதிர்கொண்டுள்ளவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிப்பதற்கான வென்டிலேட்டர் கருவிகளை மருத்துவமனைகளுக்கு விநியோகிப்பதுதான் தற்போது பெரும் சவாலாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்குரிய நிதி இருந்தாலும், தருவிப்பதில் தான் பிரச்சினை உள்ளது என்று அவர் சுட்டிக் காட்டினார்.
"தற்போது சுகாதார அமைச்சின் வசம் 925 வென்டிலேட்டர்கள் உள்ளன. 26 மருத்துவமனைகளில் 3,400 படுக்கைகள், அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு 300 படுக்கைகளை ஒதுக்கி வைத்துள்ளோம். மேலும் 500 வென்டிலேட்டர் கருவிகள் தேவைப்படுகின்றன.
"நாடு முழுவதும் உள்ள 145 பொது மருத்துவமனைகளில் 26 மருத்துவமனைகளில் கோவிட்-19 நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன," என்றார் நூர் ஹிஷாம் அப்துல்லா.
வைரஸ் தொற்று பரவ காரணமான சமய மாநாடு
79 வயது மூதாட்டி, அவரது 40 வயது மகள், அண்மையில் வியட்நாம் சென்று திரும்பிய 57 வயது மலேசிய குடிமகன், கோலாலம்பூரில் நடைபெற்ற சமய நிகழ்வில் பங்கேற்ற 69 வயது ஆடவர் ஆகியோரே மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் கடைசியாக பலியான நால்வர் ஆவர்.
நாட்டில் பதிவாகும் கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்களில் 60 விழுக்காடு நபர்களுக்கு கோலாலம்பூரில் நடைபெற்ற சமய நிகழ்வுடன் தொடர்புள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்நிகழ்வில் பங்கேற்ற பலர் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர். எனவே அம்மாநிலங்களிலும் வைரஸ் தொற்று பரவி வருகிறது. எனவே அந்நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை உறுதி செய்ய தங்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
"கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியாமல் சம்பந்தப்பட்டவர்கள் வலம் வரும்போது மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர
நாடு திரும்பும் 1,116 மலேசியர்கள்
இந்தியா மற்றும் இரானில் உள்ள மலேசியர்கள் மிக விரைவில் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. எனினும் இத்தாலியில் உள்ள மலேசியர்கள் நாடு திரும்ப கூடுதலாக ஒரு நாள் காத்திருக்க வேண்டும் என்று மலேசிய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
இரானில் இருந்து 55 பேர் மலேசியா திரும்ப உள்ளனர். இவர்களில் 46 பேர் மலேசிய குடிமக்கள் ஆவர். ஆசியான் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தப்படி, இரானில் உள்ள எட்டு சிங்கப்பூரர்களும், ஓர் இந்தோனீசிய பிரஜையும் மலேசியா அழைத்து வரப்படுவர். 55 பேரும் ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு விமானம் மூலம் கோலாலம்பூர் வந்தடைவர் என்று மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்தாலியில் தற்போது 82 மலேசியர்கள் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்து அங்குள்ள தூதரகத்தை அணுகியுள்ளனர். இவர்கள் அனைவரும் மார்ச் 23ஆம் தேதி காலை கோலாலம்பூர் வந்தடைவர் எனத் தெரிகிறது.
இதற்கிடையே இந்தியாவில் 1,519 மலேசியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிப்பதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் விக்னேஸ்வரனுடன் வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஆலோசனை நடத்தினார். அதன் பேரில் இந்தியாவில் இருந்து 1,116 மலேசியர்கள் அழைத்து வரப்பட உள்ளனர். இதற்காக 6 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை மற்றும் திருச்சியில் இருந்து மலேசியர்கள் தாயகம் அழைத்து வரப்பட இருப்பதாகவும், இதற்கு சுமார் பத்து லட்சத்து 50 ஆயிரம் மலேசிய ரிங்கிட் (ஒரு ரிங்கிட் = 17 ரூபாய் உத்தேசமாக) செலவாகும் என்றும் இதனை மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளும் என்றும் அமைச்சர் ஹிஷாமுடின் தெரிவித்துள்ளார்.
ஒரு கோடி முகக்கவசங்களை இறக்குமதி செய்யும் மலேசியா
இதற்கிடையே மலேசியாவில் முகக்கவசத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. எனவே சீனாவில் இருந்து சுமார் ஒரு கோடி முகக்கவசங்களை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக மூத்த அமைச்சர் ஃபடில்லா யூசுஃப் தெரிவித்துள்ளார்.
இந்த முகக்கவசங்கள் பேரிடர் மேலாண்மை முகமை மூலம் கொரோனா வைரஸ் பரவல் தடுப்புப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவர்கள், தாதியர்கள் போலிசார், ராணுவத்தினர், குடிநுழைவுத் துறை அதிகாரிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், மீதமுள்ள முகக்கவசங்கள் மருத்துவ நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு அவற்றின் மூலம் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் முகக்கவசங்களின் விலையை அரசுதான் நிர்ணயிக்கும் என்று குறிப்பிட்ட அமைச்சர் ஃபடில்லா, நோய்த்தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள் அது குறித்து வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
சிங்கப்பூரில் இருவர் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்று சிங்கப்பூரில் தனது பலி கணக்கைத் துவங்கியுள்ளது. அங்கு நோய்த்தொற்றுக்கு இருவர் பலியானதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
எனினும் உயிரிழந்த இருவரும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் முன்பே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று சீனாவுக்கு அடுத்து வேகமாகப் பரவிய நாடுகளில் ஒன்றாக இருந்த சிங்கப்பூர் இந்தச் சவாலை உலகத் தரத்திலான நிபுணத்துவத்துடன் அணுகி வருகிறது. இதற்காக உலக சுகாதார அமைப்பு அந்நாட்டை பலமுறை பாராட்டி உள்ளது. அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 75 வயதான சிங்கப்பூர் பெண்மணி ஒருவரும், 64 வயது இந்தோனீசிய ஆடவரும் சிங்கப்பூரில் இன்று காலை உயிரிழந்துள்ளனர். இறந்துபோன பெண்மணி ஒரு இருதய நோயாளி என்றும், கடந்த 26 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
அதே போல் உயிரிழந்த இந்தோனீசிய ஆடவரும் இருதய நோயாளிதான். சிங்கப்பூர் வருவதற்கு முன்பு இந்தோனீசியா மருத்துவமனையில் நிமோனியா காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளார். சிங்கப்பூர் மருத்துவமனையில் 9 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை காலமானார்.
"சிங்கப்பூரில் கொரோனாவுக்கு இருவர் பலியானதால் சிங்கப்பூரர்கள் வருத்தத்தில் இருப்பீர்கள். ஆனால் இச்சமயத்தில் அச்சம் அடையாமல் தைரியமாக இருக்க வேண்டும்" என சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் கேன் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 131 பேர் இதுவரை முழுமையாக குணமடைந்துள்ளனர்.
இதற்கிடையே சிங்கப்பூரில் மூடப்பட்டிருக்கும் பாலர் பள்ளி உட்பட அனைத்துப் பள்ளிகளும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பின் திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா பாதிப்பு; புதுச்சேரியில் ஊரடங்கு அமல்
- "இந்தியாவில் 30 கோடி பேருக்கு கொரோனா பரவக்கூடும்" - எச்சரிக்கும் மருத்துவர்
- கொரோனா வைரஸ்: சுய ஊரடங்கு - முற்றாக இந்தியா முடக்கப்பட இருப்பதன் தொடக்கமா?
- கொரோனா வைரஸ் இலங்கை: தனிமைப்படுத்தப்பட்ட 11842 பேர், கைது செய்யப்பட்ட 20 பேர் - சில தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: