கொரோனா வைரஸ்: சுய ஊரடங்கு - முற்றாக இந்தியா முடக்கப்பட இருப்பதன் தொடக்கமா? - விரிவான தகவல்கள்

    • எழுதியவர், சரோஜ் சிங்
    • பதவி, பிபிசி

கடந்த வியாழக்கிழமை நாட்டு மக்களிடம் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, "கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள மார்ச் 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும். அன்று காலை 7 முதல் இரவு 9 வரை இதை கடைப்பிடிக்க வேண்டும். அத்தியாவசியம் இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள். நம்முடைய இந்த முயற்சி நமது சுய கட்டுப்பாட்டின் அடையாளமாகவும், நாட்டு நலனுக்கு செய்யும் கடமையாகவும் இருக்கும். இந்த அனுபவம் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள இந்தியாவுக்கு உதவி செய்யும்" என்று அவர் தனது உரையில் கூறியிருந்தார்.

"இந்த சிக்கலான நேரத்தில் மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ளோர், போக்குவரத்து, உணவு, ஊடகம் போன்ற அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளோர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு மக்கள் அனைவரும் கைதட்டியோ, தங்கள் வீட்டின் அழைப்பு மணிகளை அடித்தோ நன்றி தெரிவிக்க வேண்டும். ஐந்து மணிக்கு உள்ளாட்சி மன்றங்கள் சைரன் ஒலி எழுப்பவேண்டும்" என்று அவர் தனது உரையில் மேலும் கூறினார்.

இதைத்தொடர்ந்து, பிரதமரின் இந்த ஒருநாள் சுய ஊரடங்கு அறிவிப்பு என்பது நீண்ட நாட்களுக்கு இதுபோன்ற முடக்க நிலையை கடைப்பிடிக்கும் அறிவிப்பிற்கான தொடக்கமாக இருக்குமோ என்ற கருத்து பொது மக்களிடையே நிலவியது.

கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு பயந்து மக்கள் பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தியிருந்த நிலையிலும், அன்றைய தினம் தொடங்கி இதுவரை நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களிலுள்ள கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுவதை காண முடிகிறது.

சுய ஊரடங்கு ஏற்படுத்தபோகும் தாக்கம் என்ன?

நாட்டின் மிகப் பெரிய அரசுசாரா சுகாதார அமைப்பான வி.எச்.ஏ.ஐ. பிரதமரின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அந்த அமைப்பின் மூத்த இயக்குநர் பட்நகர், "கொரோனா வைரஸின் பரவலை நிறுத்துவதற்கு இருக்கும் முக்கிய வழிமுறையே சமூக விலகல். பிரதமர் ஒரு நாள் முழுவதும் சுய ஊரடங்கை அறிவிக்கவில்லை, இது வெறும் 14 மணிநேரங்களுக்குதான். இது சமூக விலகளின் புதிய வடிவம். மக்கள் நடமாட்டம் ஒரு நாளைக்கு கட்டுப்படுத்தப்பட்டால் கூட அது தற்போதுள்ள சூழ்நிலையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும்."

இந்த சுய ஊரடங்கின் காரணமாக கொரோனா வைரஸின் பரவல் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படும் என்று யாரும் கூறவில்லை என்றும், ஆனால் இந்த சுய ஊரடங்கின் மூலம் மக்கள் ஒருவரையொருவர் சந்திப்பது குறைந்தால், பெரும்பாலான பரப்புகளில் சில மணிநேரங்களுக்கு மட்டுமே வீரியத்துடன் இருக்கும் கொரோனா வைரஸின் பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வரும் என்று அவர் கூறுகிறார்.

ஆனால், கிட்டத்தட்ட ஒருநாள் கடைபிடிக்கப்படவுள்ள இந்த சுய ஊரடங்கால் ஏதாவது மாற்றம் நிகழுமா? அதை மெய்ப்பிக்கும் வகையில் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் ஏதாவது உள்ளனவா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "கடல் பல சிறுதுளிகளால் ஆன ஒன்றே. இதற்கு முன்பு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாகவே மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது" என்று பட்நகர் கூறுகிறார்.

"உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியின் மூலம் இந்த தொற்று 2.2 நபர்களுக்கு பரவ கூடும். ஆனால், இது இந்தியாவில் 1.7 என்ற அளவிலேயே உள்ளது. இந்த வேறுபாடு இந்தியா எந்த அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை காட்டுகிறது."

வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நீண்டகால முடக்கத்தை நோக்கிய முதல் படியே பிரதமரின் இந்த அறிவிப்பு என்று பட்நகரும் கருதுகிறார்.

"ஒருவேளை வரும் நாட்களில் இந்தியாவில் கொரோனா வைரஸின் பரவல் வேகமெடுத்தால் அதை கட்டுப்படுத்துவதற்கு சீனா, இத்தாலி போன்று நாடு தழுவிய முடக்கத்தை அமல்படுத்த வேண்டியிருக்கும். எனவே, அதுபோன்ற சூழ்நிலைக்கு நாம் எந்தளவுக்கு தயாராக இருக்கிறோம் என்பதை சுயபரிசோதனை செய்துகொள்ளும் ஒரு வாய்ப்பாக இந்த ஒரு நாள் அமையும்" என்று அவர் உறுதிபட தெரிவிக்கிறார்.

சுய ஊரடங்குக்கும், முடக்க நிலைக்கும் என்ன வேறுபாடு?

ஒருநாள் சுய ஊரடங்கை அறிவித்து அதன் மூலம் மக்கள் முடக்க நிலைக்கு எந்தளவுக்கு தயாராக உள்ளனர் என்பதை அறிந்துகொள்ள பிரதமர் நினைக்கிறாரா என்று பட்நகரிடம் கேட்டபோது, "சுய ஊரடங்கு என்பது ஒரு எளிய அணுகுமுறை. அதாவது, இது மக்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்களாலேயே கட்டுப்படுத்தப்படும் செயல்முறை. இதை பிரதமரும் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்" என்று அவர் கூறுகிறார்.

உலகுக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள இந்த பெருந்தொற்று நோய்க்கு எதிரான நடவடிக்கையை மக்களின் ஆதரவு கிடைத்த பிறகே அரசு முழுவீச்சில் தொடங்கும் என்பதை பிரதமரின் உரை சுட்டிக்காட்டுகிறது.

இந்த ஒருநாள் சுய ஊரடங்கை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றோ இதை மீறுபவர்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றோ இதுவரை அரசு எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும், இந்த ஒருநாள் சுய ஊரடங்கின் வெற்றியை மதிப்பீடு செய்வதன் மூலம் வருங்காலங்களில் கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறை குறித்து திட்டமிட முடியும் என்று அரசு கருதுகிறது.

"சுய ஊரடங்கு மக்களால் கடைபிடிக்கப்படும் நிலையில், முடக்க நிலை என்பது அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு அதன் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்படும். அதாவது, சீனா மற்றும் இத்தாலியில் நாடு தழுவிய முடக்க நிலை எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதை நாம் நினைவுகூர்ந்து பார்க்கலாம்."

சுய ஊரடங்கு

ஒவ்வொரு வைரஸ் ஏற்படுத்தும் நோய்த்தொற்றும் தனித்துவமானது என்பதால் அதை எதிர்கொள்வதற்கு வேறுபட்ட முறைகளை கடைபிடிக்க வேண்டும்.

இதற்கு முன்பு, உலக நாடுகளை சார்ஸ், மெர்ஸ் உள்ளிட்டவை அச்சுறுத்தியபோது, இந்தியாவில் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படவும் இல்லை, விவாதிக்கப்படவும் இல்லை.

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதிலும், இந்த நோய்த்தொற்றின் பரவலானது கணக்கீடுகளை விட வேகமாக இருக்கிறது.

ஒட்டுமொத்த உலகிற்கும் கொரோனா வைரஸ் என்பது முற்றிலும் புதிய அச்சுறுத்தலாக இருப்பதால், இதை எதிர்கொள்வதற்கு என உறுதிப்படுத்தப்பட்ட வழிமுறை எதுவும் இல்லை. ஒவ்வொரு நாடும் தன்னால் இயன்ற வகையில் இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிரான இந்திய அரசின் இந்த சுய ஊரடங்கு முடிவுக்கு அரசுசாரா நிறுவனங்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை வழங்கி வருகின்றனர். குறிப்பாக, நாடு முழுவதுமுள்ள ஏராளமான வர்த்தக அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் இந்த ஊரடங்கில் பங்கேற்க போவதாக அறிவித்துள்ளதால், அவற்றின் உறுப்பினர்களாக உள்ள சுமார் ஏழு கோடி பேர் மட்டுமின்றி அவர்களின் வாயிலாக சுமார் 40 கோடி பேர் வரும் ஞாயிற்றுக்கிழமை வீடுகளிலேயே இருப்பார்கள் என்று தெரிகிறது.

சுய ஊரடங்கு - இந்தியாவில் இதுதான் முதல் முறையா?

"தற்கால தலைமுறையினருக்கு முடக்க நிலை குறித்து தெரியாமல் இருக்கலாம். ஆனால் இதற்கு முன்பு, போர் காலங்களில் நாடு முழுவதும் முடக்க நிலை நடைமுறையில் இருந்துள்ளது" என்று கூறிய பிரதமர் நரேந்திர மோதி முந்தைய காலங்களில் இருந்த முடக்க நிலைகளின் தீவிரத்தை தனது உரையில் விளக்கி இருந்தார்.

உண்மையில் சுய ஊரடங்கு என்பது இந்தியாவிற்கு புதிதல்ல. குஜராத் எனும் மாநிலத்தை புதிதாக உருவாக்க வேண்டும் என்று 1956-1960களில் கிளர்ச்சி வெடித்தபோது இதுபோன்று சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதாக கூறுகிறார் வரலாற்று ஆய்வாளர் ரிஸ்வான்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய ரிஸ்வான், "குஜராத் மாநிலத்தை உருவாக்க கோரி முன்னெடுக்கப்பட்ட இயக்கத்தின் தலைவராக இந்துலால் யாக்னிக் இருந்தார். அப்போது, ஜவஹர்லால் நேரு பங்கேற்ற பேரணி ஒன்று நடைபெற்றது. அதில் பொது மக்கள் யாரும் கலந்துகொள்ள கூடாது என்று முடிவு செய்த யாக்னிக் சுய ஊரடங்கை அறிவித்தார். எனவே, மிகப் பெரிய தலைவராக இருந்த நேருவின் கூட்டத்தில் சில ஆயிரம் மக்கள் மட்டுமே பங்கேற்ற நிலையில், யாக்னிக்கின் பேச்சை கேட்பதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினர்" என்று அவர் கூறுகிறார்.

"ஒரு இயக்கத்தில் மக்கள் தன்னெழுச்சியாக பங்கேற்று செயல்படுதே சுய ஊரடங்கு என்று எளிதாக சொல்லலாம். இதில் மக்களே நேரடியாக பங்கேற்பதால் மற்ற அணுகுமுறைகளை விட இது திறன் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால், இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு நோய்க்கு எதிராக சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ளது" என்று அவர் மேலும் கூறுகிறார்.

இந்த சிக்கலான நேரத்தில் மருத்துவப் பணி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு மக்கள் அனைவரும் கைத்தட்டியோ, தங்கள் வீட்டின் அழைப்பு மணிகளை அடித்தோ நன்றி தெரிவிக்கவேண்டும் என்று பிரதமர் கூறியிருந்தார்.

இதே போன்றதொரு அணுகுமுறை சமீபத்தில் இத்தாலியில் கடைப்பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :