You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கனிகா கபூருக்கு கொரோனா: நாடாளுமன்றம், குடியரசு தலைவர் மாளிகை வரை படர்ந்த அச்சம் - விரிவான தகவல்கள்
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைதொகுத்து வழங்குகிறோம்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: கனிகா கபூருக்கு கொரோனா: நாடாளுமன்றம், குடியரசு தலைவர் மாளிகை வரை படர்ந்த அச்சம்
வெள்ளிக்கிழமையன்று லக்னோவில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதில் பாலிவுட் பாடகி கனிகா கபூரும் ஒருவர். இதை கனிகா கபூர் தன்னுடைய சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தார். மார்ச் மாதம் கனிகா லண்டனில் இருந்து இந்தியா வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தெர்மல் ஸ்கீரினிங் செய்தபோது கோவிட் -19 இருப்பதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை என அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து அவர் இரண்டு மூன்று பெரிய அளவிலான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதில் பல நட்சத்திரங்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இப்போது கனிகா கபூருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனிகா கலந்துகொண்ட விருந்தில் ராஜஸ்தான் எம்.பி துஷ்யந்தும் கலந்து கொண்டார். இவர் பின்னர் நாடாளுமன்ற கூட்டங்களிலும் கலந்து கொண்டார். இது பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதுமட்டுமல்லாமல், இவர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கொடுத்த விருந்திலும் கலந்து கொண்டுள்ளார்.
ராம்நாத் அந்த விருந்தில் கலந்து கொண்டவர்களுடன் கை குலுக்கவில்லை என்றாலும், அவருக்கும் தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
விரிவாகப் படிக்க: பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா தொற்று
தினமணி: "நாகூர், வேளாங்கண்ணி, சிதம்பரம் நடராஜர் கோயில் - பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது"
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, தமிழக அரசின் உத்தரவுப்படி சிதம்பரம் நடராஜா் கோயிலில் பக்தா்களுக்கான சுவாமி தரிசனம் வெள்ளிக்கிழமை முதல் ரத்து செய்யப்பட்டது. கோயிலுக்குள் பக்தா்களை அனுமதிக்காவிட்டாலும், கோயிலில் வழக்கம்போல 6 கால பூஜைகளை நடைபெறும்
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகையை அடுத்த நாகூரில் உள்ள பாதுஷா சாகிபு ஆண்டவர் தர்கா 463 ஆண்டுகளில் முதல் முறையாக வெள்ளிக்கிழமை மாலை மூடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி வரை நாகூர் தர்காவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தர்கா நிர்வாகம் கூறி உள்ளது.
இது போல, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் வெள்ளிக்கிழமை மூடப்பட்டது. கிறிஸ்தவர்களின் தவக்காலம் நடைபெற்று வரும் நிலையில் பேராலயம் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினத்தந்தி: "இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது"
கட்சியில் பதவி பெறுவதற்காக கையை வெட்டிக்கொண்டு நாடகம் ஆடிய இந்து மக்கள் கட்சி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த டிரைவரும் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நந்து என்கிற நந்தகோபால் (வயது48). இவர் அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். மேலும் இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணை செயலாளராகவும் உள்ளார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, நந்தகோபால் கடையை பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு சென்றதாகவும், அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்டு மர்ம கும்பல் தனது கையில் வெட்டி விட்டு சென்றதாகவும், திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து நந்தகோபால் சிகிக்சை பெற்று வந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்காக 7 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் முதற்கட்டமாக நந்தகோபாலின் டிரைவர் ருத்ரமூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார். தொடர் விசாரணையில் இந்து மக்கள் கட்சியில் பதவி பெறுவதற்காக நந்தகோபால் கூறியதன்படியே அவரை அரிவாளால் வெட்டியதாகவும், தெரிவித்துள்ளார். அவருடைய வாக்குமூலத்தை கேட்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர். கட்சியில் பதவி பெற நந்தகோபால் நாடகம் ஆடியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பெருமாநல்லூர் போலீசார், ருத்ரமூர்த்தி மற்றும் நந்தகோபால் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்து தமிழ் திசை: "வீடுகளில் சமூகவிரோதிகள் கைவரிசை காட்டக்கூடும்"
கிருமிநாசினி தெளிப்பவர்கள், கொரோனா விழிப்புணர்வு செய்பவர்கள் போல சமூக விரோதிகள் வீட்டுக்குள் நுழைந்து கைவரிசை காட்டக்கூடும் என்பதால் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநான் அறிவுறுத்தி உள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு மையங்கள், பூங்கா, திரையரங்குகள் உட்பட மக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களும் வரும் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. வழிபாட்டுத் தலங்களுக்கும் மக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேவையின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, பெரும்பாலான மக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியும் அரசு சார்பில் முழு வீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இதுபோன்ற சூழலை பயன்படுத்தி சமூக விரோதிகள் கைவரிசை காட்ட வாய்ப்பு இருப்பதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.
கிருமிநாசினி தெளிப்பவர்கள், கொரோனா குறித்து விழிப்புணர்வு செய்பவர்கள்போல சமூக விரோ திகள் வீடுகளுக்குள் புகுந்து கைவரிசை காட்ட வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால், அருகே உள்ள காவல் நிலையம் அல்லது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :