கொரோனா வைரஸ்: தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா பாதிப்பு; புதுச்சேரியில் ஊரடங்கு அமல் Corona India updates

தமிழகத்திற்கு வந்த வெளிநாட்டு பயணிகள் மூன்று பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்திலிருந்து வந்த இருவர் மற்றும் நியூசிலாந்திலிருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது என்றும், தற்போதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ள ஆறு நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் டிவிட்டர் தளத்தில் அவர் தெரிவித்துள்ளார். ஆறு நபர்களும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்தவர்களுக்குதான் கொரோனா பாதிப்பு உள்ளது என்பதால், வெளிநாடு பயணம் செல்லாமல், தமிழகத்தில் வசிப்பவர்கள் மத்தியில் வைரஸ் தாக்கம் இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுவரை வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் சுமார் 2,01,672 நபர்களுக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது என்றும், அதில் 1120 நபர்கள் அடுத்தகட்ட சோதனைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என விஜபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு வார காலத்தில், தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்த 70 நபர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவித்த அவர், எல்லா விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை நடத்தப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையையொட்டி வருகின்ற திங்கட்கிழமை முதல் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதில், பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய பொருட்கள் வாங்க காலை 8மணிலிருந்து 9மணி வரையிலும், மாலை 6 மணியில் இருந்து இரவு 7வரை வெளியே வர அனுமதிக்க படுவார்கள் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் - மோதி

இந்திய மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும் அனைவரும் தங்கள் வீட்டிலேயே இருந்து தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் பிரதமர் மோதி வலியுறுத்தியுள்ளார்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைவரும் கட்டாயம் வீட்டில் இருக்க வேண்டும் என்றும் அது அவர்களை பாதுகாப்பதோடு, அவர்கள் குடும்பத்தையும் பாதுகாக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

கோவிட் 19 அவசர நிதிக்காக மாலத்தீவு அரசாங்கம் 2 லட்சம் அமெரிக்க டாலர்களை மாலத்தீவு வழங்கியதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு

இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏப்ரல் 14ஆம் தேதி வரை இத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு இலவச ரேஷன் - டெல்லி முதல்வர்

மார்ச் 22 அன்று மக்கள் ஊரடங்கு காரணமாக டெல்லியில் 50 சதவீத பேருந்துகள் நாளை இயங்காது என முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு டெல்லி முடக்கப்படாது என்றும் ஆனால், தேவைப்பட்டால் அந்த முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் கொரோனா வைரஸ் காரணமாக தினக்கூலி தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். ரேஷன் பொருட்களை சார்ந்து வாழும் சுமார் 72 லட்சம் மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேஜ்ரிவால் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தியாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 271ஆக அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு வரை இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 244ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக 27 பேருக்கு இந்த நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுவரை கோவிட்-19 நோய்த்தொற்றால் இந்தியாவில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனினும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய பலருக்கு அடுத்தடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிசெய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடற்கரைகள் மூடல்

கடந்த வியாழக்கிழமை இந்திய மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையின் அடையாளமாக வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் இரவு 9 மணிவரை மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் இதுவரை மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் முழு உடல்நலன் அடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

இதை செயல்படுத்தும் வகையில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இன்று (சனிக்கிழமை) மதியம் 3 மணி முதல் சென்னையிலுள்ள மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளும் மூடப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக, அத்தியாவசிய பொருட்களை கொண்டுவரும் வாகனங்கள் தவிர, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் நுழைய மார்ச் 21 முதல் தடை விதித்து நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேச மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகளில் சரக்கு வாகனங்கள், அத்தியாவசிய பொருட்களைக் கொண்டுவரும் வாகனங்கள் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்காக பயணிக்கும் வாகனங்கள் தவிர பிற வாகனங்கள் நுழைய தடை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: