பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீனுக்கு 23 ஆண்டுகள் சிறை

ஹார்வி வைன்ஸ்டீன் (கோப்புப்படம்)

பட மூலாதாரம், Getty Images

பாலியல் வல்லுறவு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீனுக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நியூ யார்க்கில் கடந்த மாதம் இது தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையில் ஹார்வி வைன்ஸ்டீன் குற்றம் செய்ததாக அறிவிக்கப்பட்டார்.

67 வயதான ஹார்வி புதன்கிழமையன்று நீதிமன்றத்துக்கு சக்கர நாற்காலியில் தான் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பில் கனிவான போக்கை கையாள வேண்டும் என்று கோரிக்கை விடுத்த ஹார்வியின் வழக்கறிஞர்கள், அவருக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டாலே, அது அவருக்கு ''ஆயுள் தண்டனை போலதான்'' என்று குறிப்பிட்டனர்.

ஆனால், இதற்கு எதிராக வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர்கள், 'நீண்ட காலமாக பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட அணுகுமுறைக்காகவும், தனது செயல்களுக்கு வருந்தாத மனோபாவத்துக்காகவும் ஹார்விக்கு அதிகபட்ச தண்டனை தரப்பட வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

நடந்த சம்பங்களுக்காக தான் மிகவும் வருந்துவதாக புதன்கிழமையன்று நீதிமதிண்றத்தில் தெரிவித்த ஹார்வி, நடந்த சம்பவங்களால் தான் முழுவதும் குழப்பம் அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

67 வயதாகும் ஹார்வி வைன்ஸ்டீன் மீது டஜன் கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் தாக்குதல் புகார்களை தெரிவித்திருந்தனர்.

ஹார்வி வைன்ஸ்டீன்

பட மூலாதாரம், Getty Images

உடன்பாடில்லாத பாலியல் நடவடிக்கைகள் இருந்ததில்லை என்று தன் மீதான குற்றங்களை ஹார்வி வைன்ஸ்டீன் மறுத்துவந்தார்.

ஹார்வி வைன்ஸ்டீன் மீது எழுந்த குற்றச்சாட்டுகள் #metoo இயக்கத்துக்கு வித்திட்டு பரவலாக நிகழும் பாலியல் துன்புறுத்தல் குறித்து கவனத்தை ஈர்த்தது.

2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நியூ யார்க் டைம்ஸின் செய்தி ஒன்றில் லூசியா இவான்ஸ், ஹார்வி மீது விரிவான குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

ஹார்வியின் புகார்களை மையமாக வைத்து, ஹாலிவுட் நடிகையான அலிஸ்ஸா மிலானோ, "பாலியல் ரீதியான தொந்தரவுக்கோ அல்லது தாக்குதலுக்கோ உள்ளான அனைத்து பெண்களும் "Me Too" என்று பதிவிட்டால், இப்பிரச்சனையின் அளவை மக்களுக்கு உணர வைக்கலாம்" என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் #MeToo என்ற ஹாஷ்டாகில் தங்களது கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: