கொரோனா வைரஸ்: ‘’யாரை தொடர்புகொள்வது? என்ன செய்வது? - இத்தாலியில் சிக்கித் தவிக்கும் தமிழர்

பட மூலாதாரம், Nicolò Campo
- எழுதியவர், மு.ஹரிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கோவையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஸ்ரீநித்தின் ஜெயபால் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக இத்தாலியில் சிக்கியுள்ளார்.
இந்தியாவிற்கு திரும்புவதற்கான உதவிகள் வேண்டி பலமுறை தூதரக அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர்கள் பதிலளிக்காமல் அலட்சியமாக நடந்துகொள்வதாக பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
"நான் சொந்தமாக மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறேன். பணி நிமித்தமாக வெளிநாடுகளுக்கு சென்று வருவேன். பிப்ரவரி 26 ஆம் தேதி கோவையிலிருந்து இத்தாலி நாட்டின் ரோம் நகருக்கு வந்தேன். பயணத்திட்டத்தின்படி மார்ச் 14ஆம் தேதி இந்தியாவிற்கு மீண்டும் திரும்புவதாக இருந்தது. ஆனால், இத்தாலியில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு முன்னரே கிளம்பிவிடலாம் என முடிவுசெய்து நேற்று விமானநிலையம் சென்றேன்" என்று ஸ்ரீநித்தின் தெரிவித்தார்.
"கொரோனா பாதிப்பு இல்லை என்ற கோவிட்-19 சான்றிதழ் இருந்தால் மட்டுமே இந்தியாவிற்கு அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டது. இதனால், என்னைப்போலவே 10க்கும் மேற்பட்டோர் இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் விமான நிலையத்திலேயே நிறுத்திவைக்கப்பட்டனர்" என்றார் அவர்.
இந்தியாவிற்கு செல்ல உதவி செய்யக்கோரி இத்தாலியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை பல முறை தொலைபேசியில் அழைத்தபோதும் அவர்கள் அழைப்புகளை ஏற்கவில்லை என கூறுகிறார் இவர்.

"கொவிட்-19 சான்றிதழ் இருந்தால் மட்டுமே இந்தியாவிற்கு செல்ல முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. ஆனால், கொவிட்-19 சான்றிதழை வழங்க இத்தாலி மருத்துவர்கள் மறுக்கின்றனர். இது குறித்து புகாரளிக்க இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்புகொண்டால் பதிலளிப்பதேயில்லை. கொரோனா தாக்குதலால் இந்திய தூதரக அலுவலகமும் மூடப்பட்டுள்ளது. யாரை தொடர்புகொள்வது, என்ன செய்வது என தெரியாமல் சிக்கித்தவித்து வருகிறேன்" என கூறுகிறார் ஸ்ரீநித்தின்.
இத்தாலியில் சிக்கியுள்ள தன்னை விரைவில் மீட்டு இந்தியாவிற்கு அழைத்து செல்லுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரிடம் ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார் இவர்.

பட மூலாதாரம், Anadolu Agency
"நான் இந்தியாவின் குடிமகன். எனக்கு இந்தியாவில் ரேஷன் கார்டு உள்ளது. அரசாங்கத்தின் விதிகளின்படி அனைத்து வரிகளையும் கட்டுகிறேன். முறையான அனுமதிகள் பெற்றுதான் இத்தாலிக்கு வந்துள்ளேன். ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் இங்கு சிக்கியிருக்கும் எனக்கு இந்திய அரசாங்கம் எந்த உதவியும் இதுவரை செய்யவில்லை"
"என்னை எதிர்பார்த்து என் குடும்பத்தினர் கோவையில் காத்திருக்கின்றனர். 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். என்னைப்போலவே 30க்கும் மேற்பட்ட இந்திய குடும்பங்கள் இங்கு சிக்கித் தவித்து வருகின்றனர். எங்களை விரைவில் இந்தியாவிற்கு அழைத்து செல்லவேண்டும். இந்தியாவில் வைத்து எல்லாவித மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொள்ளட்டும், இல்லையேல் இத்தாலியிலேயே மருத்துவ சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்" என தெரிவித்தார் ஸ்ரீநித்தின்.
மேலும், இத்தாலியில் சிக்கியுள்ளது பற்றி தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளதாக கூறினார் ஸ்ரீநித்தின்.
வம்சியின் நிலை
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதால் இந்திய அரசாங்கம் இத்தாலி, இரான், தென் கொரியாவில் இருந்து வரும் பயணிகள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று அதிகாரப்பூர்வ அலுவலகத்திலிருந்து சான்றிதழ் பெற்று வந்தால் மட்டுமே இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இத்தாலியில் உள்ள விஜயவாடாவை சேர்ந்த மாணவர் வம்சி, இந்தியா வருவதற்குப் பயண சீட்டு வாங்கியும் நாடு திரும்ப முடியாமல் இத்தாலியில் தவிக்கிறார். மிலன் விமான நிலையத்தில் 17 மணி நேரம் காத்திருந்தும் மருத்துவ சான்றிதழ் பெறாததால் இந்தியாவிற்கு திரும்ப முடியவில்லை என்று பிபிசி செய்தியாளரிடம் கூறியுள்ளார். மருத்துவ சான்றிதழ் பெற வேண்டும் என்பது குறித்து தனக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தவில்லை, விமான பயணச் சீட்டை ஆன்லைனில் புக் செய்ததாகவும் கூறுகிறார்.
வம்சியுடன் இந்திய திரும்ப 12 இந்தியர்கள் வந்ததாகவும் கூறுகிறார்.
சென்னை சேர்ந்த ஸ்வாதி என்பவரும் 12 மணிநேரம் உணவு தண்ணீர் இன்றி விமான நிலையத்தில் காத்திருந்து, இந்தியாவிற்கு செல்ல முடியாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். வைரஸ் தொற்று பரவும் சூழலில் விமான நிலையத்தில் காத்திருப்பது மிகவும் ஆபத்து என்பதால் அங்கிருந்து கிளம்பிவிட்டதாக வம்சி கூறுகிறார். விமான நிலைய அதிகாரிகள் ரோமில் உள்ள இந்தியத் தூதரகத்தை தொடர்புகொள்ள முடியவில்லை, இது குறித்து இந்திய அதிகாரிகள் உங்களை தொடர்பு கொண்டு பேசுவார்கள், எனவே விமான நிலையத்தில் காத்திருக்காதீர்கள் என்று அறிவுறுத்தியதாகவும் வம்சி தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












