சர்வதேச மகளிர் தினம்: ஆப்கானிஸ்தான் தாலிபன்: தன்னை கொல்ல முயன்றவர்களிடமே தன் நாட்டுக்காக பேச்சுவார்த்தை நடத்திய பெண்

கூஃபி

பட மூலாதாரம், AFP/Getty images

    • எழுதியவர், சுவாமிநாதன் நடராஜன்
    • பதவி, பிபிசி உலக சேவை
News image

ஒரு டாக்டராக வேண்டும் என்ற பாவ்ஜியா கூஃபியின் கனவு, ஆப்கானிஸ்தானை தாலிபான் தீவிரவாதிகள் வசப்படுத்தியதுடன் சிதைந்து போனது. அவருடைய கணவரை அவர்கள் சிறையில் அடைத்துவிட்டனர். காவலிலிருந்தபோது அவருக்குக் காசநோய் ஏற்பட்டது. விடுதலை செய்யப்பட்ட பிறகு அவர் இறந்து போனார். பிறகு கூஃபி அரசியல்வாதியானார். அவரைக் கொலை செய்ய தாலிபான்கள் முயற்சி செய்தனர். இருந்தபோதிலும், அவர்களுடன் பேசுவதற்கான தைரியத்தை அவர் உருவாக்கிக் கொண்டார்.

``நான் என் தேசத்தின் பிரதிநிதியாக இருந்தேன். ஆப்கான் பெண்களின் பிரதிநிதியாக இருந்தேன்'' என்று பிபிசியிடம் அவர் நினைவுகூர்ந்தார்.

நீண்ட தாடி, அரசியல்வாதிகள்,இரண்டு நம்பிக்கை பெண்கள்

அவரும், மனித உரிமை பெண் ஆர்வலர் ஒருவரும் 2019 பிப்ரவரி மாதம் மாஸ்கோவில் 70 ஆண்கள் நிரம்பியிருந்த ஹோட்டல் அறைக்குள் நுழைந்தனர்.

Afghan civil society and women's rights activist Laila Jafari, and the then Member of parliament Fawzia Koofi

பட மூலாதாரம், Getty Images

ஒருபுறத்தில் தலைப்பாகைகளுடன், நீண்ட தாடிகளுடன் தாலிபான்கள் அமர்ந்திருந்தனர். மறுபுறம் ஆப்கான் அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் என அனைத்து ஆண்களுடன் இரண்டு பெண்களும் அமர்ந்திருந்தனர்.

``நான் அடக்குமுறைக்கு ஆளாக்கப்படவில்லை. உறுதியாகவும், சுருக்கமாகவும் பேச வேண்டிய முக்கியமான காலமாக எனக்கு அது இருந்தது.''

தாலிபான்களுடன் நடந்த பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற ஆப்கான் பிரதிநிதிகள் குழுக்களில் இடம் பெற்றிருந்த மிகக் குறைந்த பெண்களில் ஒருவராக கூஃபி இருந்தார்.

நீண்டகாலம் நடைபெற்ற அமைதிக்கான முயற்சியில், ஆப்கான் அரசுடன் நேரடி பேச்சுவார்த்தையில் பங்கேற்கத் தாலிபான்கள் மறுத்துவிட்டனர். ``காபூலில் இருக்கும் பொம்மை அரசை'' அங்கீகரிக்கவில்லை என்று அவர்கள் கூறிவிட்டனர்.

ஆனால் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் தொடர்ச்சியான அழுத்தத்தைத் தொடர்ந்து, சமரசம் ஏற்பட்டு, அதிகாரப்பூர்வமற்ற குழுவினருடன் பேச்சு நடத்த தாலிபான்கள் ஒப்புக்கொண்டனர்.

மாஸ்கோ மற்றும் தோஹா பேச்சுவார்த்தைகள்

தாலிபான் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்திய ஆப்கான் குழுவில் கூஃபி மூன்று முறை இடம் பெற்றிருக்கிறார். மாஸ்கோவில் இரண்டு முறையும், தோஹா சந்திப்பில் ஒரு முறையும் அவர் பங்கேற்றுள்ளார்.

ஃபாசியா கூஃபி

பட மூலாதாரம், Getty Images

மறுபுறம் இருந்தவர்கள் எனக்கு மிகுந்த மரியாதை அளித்தனர். ஆப்கானிஸ்தான் நாடு இப்போது பன்முகக் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்கும் நாடாக இருக்கிறது என்றும், ஒற்றை சித்தாந்தத்திற்கு மட்டும் கட்டுப்பட்டதாக இல்லை என்றும் அவர்களிடம் நான் கூறினேன்.

அது வட்டமேசை கலந்துரையாடல் அல்ல. கூட்டாகக் கருத்துப் பரிமாற்றம் நடைபெறுவதாக இல்லை. ஒவ்வொருவரும் பேசுவதற்கு, குறிப்பிட்ட அளவு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

``தாலிபான் குழுவில் சிலர் என்னைப் பார்த்துக் கொண்டார்கள். சிலர் குறிப்புகள் எடுத்தனர். சிலர் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தனர். அசாதாரணமான எதையும் நான் அங்கே உணரவில்லை.''

தாலிபான்களை சிரிக்க வைத்தார்

தாலிபான்களால் வாழ்க்கையில் பாதிப்புக்கு உள்ளான ஒருவராக, மகளிரின் உரிமைகள் பற்றி அவர்களுடன் நேரடியாக அவர் பேசினார். அமைதி முயற்சியில் பெண்களின் பங்கேற்பு இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

கூஃபி

பட மூலாதாரம், AFP/GettyImages

``எங்கள் பக்கம் பெண் பிரதிநிதிகள் இருப்பதால், அவர்களும் [தாலிபான்களும்] பெண்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வரவேண்டும் என்று கூறினேன். அவர்கள் உடனே சிரித்துவிட்டார்கள்.''

அவர் பேசுவதற்குப் பெண் பிரதிநிதி யாரையும் தாலிபான்கள் ஒருபோதும் அனுப்பவில்லை.

அவர்கள் 1996 முதல் 2001 வரையில் ஆட்சி நிர்வாகம் செய்து வந்த காலத்தில், பொது இடங்களில் பெண்கள் செல்வதற்குத் தடை விதித்தனர், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பெண்களுக்குத் தடை விதித்திருந்தனர்.

தங்களுடைய இஸ்லாமியச் சட்டங்களை அமல் செய்த தாலிபான்கள், கல்லெறிந்து கொல்தல் மற்றும் கசையடிகள் போன்ற தண்டனைகளை நிறைவேற்றினர்.

அதிபராக ஒரு பெண் வர முடியாது

வாழ்நாளெல்லாம் ஆப்கானிஸ்தானில் வசித்து வந்த கூஃபி, இதுபோன்ற தண்டனைகளால் அந்த மக்கள் எந்த அளவுக்குத் துன்புற்றார்கள் என்பதை அறிந்திருந்தார். எதிர்காலத்தில் வரும் எந்த அரசும் இதுபோன்ற கொடூர நடைமுறைகளை மீண்டும் புகுத்திவிடக் கூடாது என்று தடுக்க அவர் விரும்பினார்.

கூஃபி

பட மூலாதாரம், Getty Images

தன்னுடைய உரையின்போது, பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமத்துவம் இருக்க வேண்டும் என்று கூஃபி வலியுறுத்தியதற்குத் தாலிபான் பிரதிநிதி பதில் அளித்தார்.

``பிரதமராக ஒரு பெண் வரலாம், ஆனால் அதிபராக வரக் கூடாது என்று அவர்கள் கூறினர். பெண்கள் நீதிபதிகளாகவும் வரக் கூடாது என்றார்கள்.''

இஸ்லாமியச் சட்டத்தின்படி ஆண்கள் மட்டுமே நீதிபதிகளாகவும், அரசாங்கத் தலைமை பொறுப்பாளராகவும் இருக்கலாம் என்பது தாலிபான்களின் நிலைப்பாடு. இதில் கூஃபிக்கு திருப்தி ஏற்படவில்லை.

இருவழி கலந்துரையாடலுக்கு உகந்த வகையில் பேச்சுவார்த்தையின் நடைமுறை இல்லை: ``அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், நான் வாக்குவாதம் செய்யவில்லை.''

இஸ்லாத்தின் எல்லைகள்

ஒரு மாதம் கழித்து தாலிபான்களின் கத்தார் அதிகாரப்பூர்வ அரசியல் செய்தித் தொடர்பாளர் சுஹைல ஷாஹீன் பிபிசி பாஷ்டோ பிரிவு செய்தியாளர் இனாயதுல்ஹா யாசினிக்கு அளித்த பேட்டியில், ``இஸ்லாம் அளித்துள்ள அனைத்து உரிமைகளையும் பெண்களுக்கு அளிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கல்வி கற்பதில் அவர்களுக்கு உரிமை இருப்பதை ஏற்றுக்கொள்கிறோம். இஸ்லாத்தில் இந்த உரிமை அளிக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

தாலிபான்களின் கத்தார் அதிகாரப்பூர்வ அரசியல் செய்தித் தொடர்பாளர் சுஹைல ஷாஹீன்

பட மூலாதாரம், Inayatulhaq Yasini

படக்குறிப்பு, தாலிபான்களின் கத்தார் அதிகாரப்பூர்வ அரசியல் செய்தித் தொடர்பாளர் சுஹைல ஷாஹீன்

அந்த உத்தரவாதத்தில் ஒரு நிபந்தனையும் இருந்தது.

``பெண்கள் பணியாற்றலாம், கல்வி கற்கலாம். ஆனால் அவை இஸ்லாமிய சட்டம் மற்றும் ஆப்கான் கலாச்சார எல்லைகளுக்கு உள்பட்டதாக இருக்க வேண்டும்'' என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதலாவது சம்பவம்

கூஃபி போன்றவர்களுக்கு இதுதான் பிரச்சினையின் உச்சமாக இருந்தது. இஸ்லாத்தில் ஒரு புனித நூல் உள்ளது. ஆனால் பல சித்தாந்த விளக்கங்கள் உள்ளன.

கூஃபி

பட மூலாதாரம், Media team of Fawzia Koofi

``இஸ்லாத்தின் போதனைகள் பற்றி வெவ்வேறு அறிஞர்கள் வெவ்வேறு மாதிரி சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். குரானின் தீவிரமான விளக்கங்களை தாலிபான்கள் பின்பற்றுகிறார்கள்.''

கடந்த காலத்தில் தாலிபான்களின் கொள்கைகள் எப்படி செயல்படுத்தப்பட்டன என்பதை கூஃபி பார்த்திருக்கிறார். முதன்முதலில் 1996 செப்டம்பரில் தாலிபான் தீவிரவாதி ஒருவரை அவர் பார்த்தார்.

``தாலிபான்கள் காபூலை கைப்பற்றிய போது அந்த நகரில் நான் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தேன். ஐந்தாவது மாடியில் உள்ள எனது அடுக்குமாடி வீட்டில் இருந்து அவர்களை நான் பார்த்தேன். தானியங்கி துப்பாக்கிகள் வைத்திருந்த தீவிரவாதிகளுடன் தெருவில் சண்டை நடந்து கொண்டிருந்தது.''

கனவு சிதைக்கப்பட்டது

தாலிபான்கள் கைப்பற்றியவுடன், டாக்டராக வேண்டும் என்ற அவருடைய சிறு வயதுக் கனவு சிதைக்கப்பட்டது. தீவிரவாதிகளின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்து, இவரை கல்லூரியில் இருந்து நிர்வாகம் நீக்கிவிட்டது. காபூலில் அவர் தங்கியிருந்து, பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்படட் மாணவிகளுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்தார். ``அது மிகவும் உளைச்சல் மிகுந்த காலம். உங்களை குறைத்து மதிப்பிட்டு, உங்கள் வாய்ப்புகளை சிலர் தடுக்க முற்படும் போது.......... அது மிகவும் வலியைத் தரும்.''

பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

பெண்கள் தங்கள் உடலை முழுமையாக மூடிக் கொள்ள வேண்டும் என்று தாலிபான்கள் உத்தரவு போட்டனர். அதையடுத்து பெண்கள் முழுமையாக உடலை மறைக்கும் ஆடை அணிய வேண்டியது கட்டாயமாயிற்று.

எதிர்ப்பு செயல்பாடுகள்

``நான் ஒருபோதும் புர்கா வாங்கவில்லை. ஏனெனில் எங்கள் கலாசாரத்தில் அல்லாத ஒரு விஷயத்துக்காக நான் பணம் செலவழிப்பதில்லை.''

எதிர் செயல்பாட்டில் இருந்ததால், அதற்கான விலையை கூஃபி தர வேண்டியிருந்தது. பாதுகாப்பு கருதி அவர் வெளியில் செல்வதை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று.

``ஒழுக்கமுறை அமலாக்கத் துறையினர் தெருக்களில் ரோந்து சுற்றிக் கொண்டிருப்பார்கள். புர்கா அணியாத பெண்களை அவர்கள் அடிப்பார்கள்.''

அமெரிக்கா தலைமையிலான படையினர் வந்து தாலிபான்களை வெளியேற்றியபோது, மக்கள் நிம்மதியாக உணர்ந்ததில் ஆச்சர்யம் எதுவும் இல்லை.

``தாலிபான்களிடம் அடிவாங்க வேண்டியிருக்கும் என்ற அச்சம் இல்லாமல் நாங்கள் தெருக்களில் நடந்து சென்று, கடைகளில் பொருட்களை வாங்க முடியும்.'' 2001ல் தாலிபான்கள் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, கூஃபி ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் வேலை பார்த்தார். முன்னாள் குழந்தை ராணுவ வீரர்களுக்கு மறுவாழ்வுப் பயிற்சி அளிக்கும் பணியை அவர் மேற்கொண்டார்.

கணவரின் மரணம்

தாலிபான் ஆட்சி முடிவுக்கு வந்து அடுத்த ஆட்சி மாறிய காலம், கூஃபியை பொருத்த வரை சுமுகமானதாக இல்லை. அந்த காலக்கட்டத்தில், ராணுவக் காவலில் இருந்தபோது ஏற்பட்ட காசநோயால், அவருடைய கணவர் காலமானார்.

இருந்தபோதிலும் 2005 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டபோது, களத்தில் இறங்க அவர் முடிவு செய்தார். அவருடைய தந்தை அப்துர்ரஹ்மான் கூஃபி, முஜாஹிதீன் மதத் தீவிரவாதிகள் (அப்போதைய தாலிபான்கள்) காலத்துக்கு முன்பிருந்தே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

கூஃபி

பட மூலாதாரம், Media team of Fawzia Koofi

முஜாஹிதீன்களால் கொல்லப்படுவதற்கு முன்பு வரை அவர் உருவாக்கி வைத்திருந்த செல்வாக்கு கூஃபிக்கு பலம் சேர்ப்பதாக இருந்தது. ``தந்தையின் பாரம்பரியம் எனக்கு வாக்குகள் கிடைக்க உதவியாக இருந்தது. ஆனால் தனிப்பட்ட ஓர் அடையாளத்தை உருவாக்குவது எனக்கு முக்கியமான சவாலாக இருந்தது.''

இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இருந்துள்ளார். முதலாவது பதவிக் காலத்தின்போது அவர் நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், நாட்டின் தெற்குப் பகுதியில் அவர் பயணம் மேற்கொண்டிருந்தபோது, அவரைக் கொலை செய்ய தாலிபான்கள் முயற்சி செய்தனர்.

தாலிபான் தாக்குதலில் தப்பியது

`சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாட 2010 மார்ச் மாதம் நான் நங்கர்ஹருக்கு [மாகாணம்] சென்றேன். நான் திரும்பி வரும்போது என்னுடைய வாகனங்கள் தாக்கப்பட்டன.''

கூஃபி

பட மூலாதாரம், Getty Images

ஆற்றின் அந்தப் பகுதியில் இருந்தும், மலை உச்சியில் இருந்தும் துப்பாக்கிகளால் சுட்டனர்.

கூஃபி மற்றும் அவருடைய இரு மகள்களையும் பாதுகாப்புப் படையினர் காப்பாற்றினர். மலை குகைக்குள் அவர்களுடைய வாகனத்தை அவர்கள் கொண்டு சென்றுவிட்டனர். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் காபூலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

எல்லை விரிவாக்கம்

தாலிபான்களை வெளியேற்றிய போதிலும், அமைதி ஏற்படவில்லை என்பதை கூஃபி பார்த்தார். தீவிரவாதிகள் மீண்டும் குழுவாக சேர்ந்து, தீவிர பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்த சில ஆண்டுகள் அவகாசம் எடுத்துக்கொண்டனர்.

ஆப்கானிஸ்தானில் 70 சதவீதப் பகுதிகளில் தாலிபான்கள் அச்சுறுத்தல் இருப்பதாக 2018ல் வெளியான பிபிசி புலனாய்வு செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ராணுவ பலம் இருந்தும், தாலிபான்களை அழித்துவிட முடியாத நிலையில், பேச்சுவார்த்தை மூலம் அங்கிருந்து வெளியேற அமெரிக்கா வழி தேடிக் கொண்டிருக்கிறது.

தன்னை கொல்ல முயன்றவர்களிடமே தன் நாட்டுக்காக பேச்சுவார்த்தை நடத்திய ஆப்கன் பெண்

பட மூலாதாரம், AFP/ Getty images

ஆப்கானிஸ்தானில் நடந்த போரில் அமெரிக்கா மற்றும் அதன் பங்காளர் நாடுகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்கப் படையினர் 2,400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மற்ற நாடுகளைச் சேர்ந்த 1,100க்கும் மேற்பட்ட வீரர்கள் இதில் உயிரிழந்துள்ளனர்.

2001 அக்டோபரில் இருந்து 2019 மார்ச் வரையிலான காலத்திற்குள் அமெரிக்க ராணுவத்துக்கு 760 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

அமைதி ஒப்பந்தம்

அமைதி ஒப்பந்தம் உருவாக்கும் முயற்சியில் அமெரிக்காவும் தாலிபான்களும் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

``அமைதி வேண்டும் என எல்லோரும் விரும்புகின்றனர். போர் காலத்தில் நாங்கள் பிறந்து, போர் காலத்திலேயே வளர்ந்தோம். அமைதி என்றால் என்ன என்று என்னுடைய தலைமுறையினருக்கோ, என் பிள்ளைகளின் தலைமுறையினருக்கோ தெரியாது'' என்று பாவ்ஜியா கூஃபி கூறுகிறார்.

கூஃபி

பட மூலாதாரம், Media team of Fawzia Koofi

முரண்பாடாக, அமைதிக்கான வாய்ப்பு பிரகாசமாகும்போது, தாலிபான்கள் பற்றிய பயமும் அதிகரிக்கிறது. எப்படியாவது ஒப்பந்தம் உருவாக்க வேண்டும் என்பதில் அவசரம் காட்டக் கூடாது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கூஃபி கூறுகிறார்.

``தாலிபான்களுக்கு அனைத்து அதிகாரங்களையும் அளிக்கும் வகையில் அமைதி ஒப்பந்தம் இருந்தால், அது தவறாகிவிடும்.'' திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால் அமெரிக்க - தாலிபான் ஒப்பந்தம் இந்த மாத இறுதிக்குள் கையெழுத்தாகும். அமெரிக்காவின் நீண்டகால போருக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆர்வமாக உள்ளார். இந்த ஆண்டின் பிற்பகுதியில் தேர்தலை சந்திப்பதற்கு முன்னதாக, ஆப்கானில் உள்ள 13,000 வீரர்களை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்.

``இன்னும் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள எதார்த்த நிலைமைகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். போரை எப்படி முடிவுக்கு கொண்டு வரப்போகிறோம் என்பது தான் பெரிய சவாலாக இருக்கும். கண்ணியமான அமைதி என்ற முறையில் அதை முடிக்கப் போகிறோமா அல்லது இன்னொரு போருக்கு வழிவகுக்கப் போகிறோமா?'' என்று கூஃபி கேள்வி எழுப்புகிறார். ``அமைதி என்றால் கண்ணியம், நீதி, சுதந்திரத்துடன் வாழும் வாழ்க்கையாக இருக்க வேண்டும்'' என்றார் அவர்.

வெளிநாட்டுப் படையினர்

இப்போது பெரும்பாலான சண்டையில் ஆப்கான் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தாலிபான் தீவிரவாதிகளின் உக்கிரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அந்தப் படையினர் திணறி வருகின்றனர்.

ஹெலிகாப்டர்

பட மூலாதாரம், Getty Images

``வெளிநாட்டுப் படைகள் இருப்பது ஆப்கான் வீரர்களுக்கு பெரிய அளவில் தார்மிக ஆதரவாக உள்ளது. தெளிவான தகவலையும் அது முன்வைக்கிறது. அடுத்த சில ஆண்டுகளுக்கு வெளிநாட்டுப் படைகள் இருக்க வேண்டும்'' என்று அவர் கூறினார்.

நீடித்த அமைதி ஏற்படுவதற்கு முன்னதாக, எதிர்கால அரசாங்கத்தை எப்படி உருவாக்கப் போகிறோம் என்பதில் இருந்து பல விஷயங்கள் பற்றி முடிவு எடுக்கப்பட வேண்டும் என்கிறார் அவர். ஜனநாயகம் உயிர்ப்புடன் இருப்பதையும், மகளிர் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.

``ஜனநாயகத்துக்கு மாற்று எதுவும் கிடையாது. ஜனநாயகத்தில் மட்டுமே எல்லோருக்கும் உரிமைகள் இருக்கும்'' என்கிறார் அவர்.

இடையூறுகள் நிறைந்த வளர்ச்சி

உலகில் மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் உள்ளது. ஐ.நா. மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டின் சமீபத்திய அறிக்கையின்படி 189 நாடுகள் பட்டியலில் ஆப்கானிஸ்தான் 170வது இடத்தில் உள்ளது. பெண் கல்வி மிகக் குறைவாக 16 சதவீதம் என்ற அளவில் இருப்பதாக அந்நாட்டு பத்திரிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Afghan schoolgirls leave after the mid-term exams at a school in Kabul.

பட மூலாதாரம், AFP/Getty images

இந்த நீண்டகால போரின் காரணமாக பெருமளவில் மானிட பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சோவியத் ஆக்கிரமிப்பின் போது ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இப்போது வெளிநாடுகளில் 2.5 மில்லியன் ஆப்கானிஸ்தியர்கள் அகதிகளாகப் பதிவு செய்து கொண்டுள்ளனர். மேலும் 2 மில்லியன் பேர் நாட்டுக்குள்ளேயே குடிபெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். சுமார் 2 மில்லியன் விதவைகள் வாழ்க்கைக்கு போராடிக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வருமானம் குறித்து 2016-17ல் நடத்திய கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழே இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்

போர் காரணமாக அரசியல் வளர்ச்சியும் கூட தடைபட்டுவிட்டது. அமைதி ஒப்பந்தத்தை உருவாக்க அரசியல் பாரம்பரியம் கொண்ட, ஒரு தலைவர் என்று யாரும் இப்போது இல்லை.

கடந்த அதிபர் தேர்தலின்போது நடந்த வாக்குப் பதிவு, அமெரிக்கா தலைமையிலான வருகைக்குப் பிறகு மிகக் குறைந்த அளவில் இருந்தது. இப்போதைய அதிபர் அஷ்ரப் கானி வெற்றி பெற்றதாக, தேர்தல் நடந்து ஐந்து மாதங்கள் கழித்து அறிவிக்கப்பட்டது. இதற்கு மாறாக, தங்களுடைய எதிர்காலத் திட்டம் பற்றி தாலிபான்கள் இன்னும் எதையும் வெளியிடாமல் உள்ளனர். ``அமைதிக்கு எதிரானவர்கள், பேச்சுவார்த்தையை திசை திருப்புவதற்காக பெண்களின் உரிமைகள் பற்றிப் பேசுகிறார்கள்'' என்று தாலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் பிபிசியிடம் கூறினார்.

தாலிபான்கள் எந்த அளவுக்கு மாறியுள்ளனர், அமைதி நடவடிக்கை மூலம் அவர்கள் எதை விரும்புகிறார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

என்ன மாறியுள்ளது?

``பெண்கள் நிறைய இழந்துவிட்டனர். எவ்வளவு தான் இழக்க முடியும்? நாங்கள் இன்னும் எவ்வளவு இழக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்?'' என்று கேட்கிறார் கூஃபி.

கூஃபி தனது மகள்களுடன்

பட மூலாதாரம், AFP/Getty images

தாலிபான்களின் உச்சகட்ட ஆட்சிக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் நிறைய மாறியிருக்கிறது.

தன்னுடைய இரு மகள்களும் காபூல் பல்கலைக்கழகங்களில் பதிவு செய்துள்ளதாக கூஃபி கூறுகிறார்.

ஊடகங்கள் மற்றும் இன்டர்நெட் மூலம் கட்டுப்பாடு இல்லாமல் தகவல்களை அறிந்து கொள்வதற்கான வசதி இருப்பதால் அவர்களுடைய ஆளுமைத் திறன் மேம்பட்டிருக்கிறது, பழக்க வழக்கங்களில் நல்ல தாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்கிறார்.

``எனது மகள்களையோ அல்லது அவர்களுடைய வயதில் உள்ள மற்ற மாணவிகளையோ எந்தப் படையாலும் இனிமேல் வீட்டுக்குள் பூட்டி வைக்க முடியாது. நாட்டை ஆள விரும்புவது யாராக இருந்தாலும், அதை மனதில் கொள்ள வேண்டும்'' என்று கூஃபி கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: