சீனாவில் வேகமாக பரவிவரும் மர்ம வைரஸ் - நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
அறிவியலில் முன்பு அறியப்படாத புதிரான வைரஸ் ஒன்று சீனாவில் வேகமாக பரவி வருகிறது என்றும் அதிகாரப்பூர்வ தரவுகளை காட்டிலும் அதிகம் பேர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் பிபிசியிடம் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உறுதியாக இதுவரை 41 பேர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த எண்ணிக்கை 1,700 வரை இருக்கலாம் என்று பிரிட்டன் நிபுணர்கள் கணக்கிடுகிறார்கள்.
கடந்த டிசம்பர் மாதம் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் தீவிர நுரையீரல் நோயை உருவாக்கி வருகிறது. இதுவரை இதனால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
வுஹான் நகரில் இந்த வைரஸ் பரவியதை தொடர்ந்து, தாய்லாந்தில் இருவரும், ஜப்பானில் ஒருவருக்கும் இந்த வைரஸ் பரவி இருப்பது தெரிய வந்தது.
இது கவலை அளிக்கும் விதமாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இது ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு பரவுவது போல தெரியவில்லை. வுஹானில் உள்ள அசைவ உணவுகளின் சந்தையில் இருக்கும் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து பரவி இருப்பதாக சீன அதிகாரிகள் கூறுகிறார்கள்.
கொரோனா வைரஸ்கள் என்பது பெரிய வைரஸ் குடும்பம். இதில் மனிதர்களை பாதிக்கக்கூடியவையாக ஆறு வகை வைரஸ் இருந்தன, தற்போது இந்த மர்ம வைரஸ் ஏழாவது வகையாக இருக்கக்கூடும்.
சீனா மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவை இந்த தொற்று, கொரோனா வைரஸ் என முடிவுக்கு வந்துள்ளன.
இந்த புது வைரஸின் மரபணு குறிமுறை கிட்டத்தட்ட சார்ஸ் வைரஸுக்கு நெருக்கமானது போன்று இருக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். சார்ஸ் என்பதே மனிதர்களை பாதிக்கும் கொரோனா வைரஸின் ஒரு வகை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி: புதிரான சீன வைரஸ்: நாம் எந்த அளவுக்கு கவலைப்பட வேண்டும்?

பருவநிலை மாற்றம்: காரணமாகும் பணக்கார நாடுகள்

பட மூலாதாரம், Getty Images
பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான முயற்சியில் ''நெருக்கடியான தருணம் வந்துவிட்டது'' என்று சர் டேவிட் அட்டன்பரோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
''ஒவ்வொரு வருடமும் நாம் பிரச்சனைகளை தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறோம்,'' என்று பிரபல இயற்கை ஆர்வலரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான அட்டன்பரோ கூறியுள்ளார்.
புவியை வெப்பமடைய வைக்கும் வாயுக்கள் உற்பத்தி குறைவதற்குப் பதிலாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. முக்கிய வாயுவான கரியமில வாயு, மனிதகுல வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்ச நிலையை எட்டியுள்ளது.
''ஒவ்வோர் ஆண்டும் கரியமில வாயு அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது,'' என்று சர் டேவிட் அட்டன்பரோ கூறியுள்ளார்.

பெரியார் குறித்த கருத்து: சர்ச்சையில் சிக்கிய ரஜினிகாந்த்

பட மூலாதாரம், Getty Images
துக்ளக் ஆண்டு விழாவில் பெரியாரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. தமிழக பாரதிய ஜனதா கட்சி ரஜினிக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளது.
கடந்த செவ்வாயன்று சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 50-ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டில் நடந்ததாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார்.
"1971ல் சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை. அதை சோ துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார்" என்று பேசினார்.
ரஜினிகாந்த் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியார் விடுதலை கழகத்தினர் பல இடங்களில் காவல்துறையினரிடம் மனு அளித்துள்ளனர்.
விரிவாக படிக்க: பெரியார் குறித்த கருத்து: சர்ச்சையில் சிக்கிய ரஜினிகாந்த்

Ind vs Aus: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

பட மூலாதாரம், ANDY KEARNS
ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வென்றுள்ளது.
முதல் போட்டியில் ஏற்கனவே ஆஸ்திரேலியா வென்றுள்ளதால் மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் இப்போது சமநிலையை எட்டியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்காக நிலைத்து நின்று விளையாடி, அதிகபட்ச ரன்கள் எடுத்த ஸ்டீவ் ஸ்மித் 102 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார்.
31வது ஓவர் வரை மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் அதன் பின்னர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

நிர்பயா வழக்கு: குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதி அறிவிப்பு

நிர்பயா கூட்டு பாலியல் வல்லுறவு வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேரையும் பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே அவர்களை ஜனவரி 22 அன்று தூக்கிலிட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனினும், அவர்களில் ஒருவரான முகேஷ் சிங் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்துள்ளதால் அவர்களை ஜனவரி 22 அன்று தூக்கிலிட முடியாது என்று டெல்லி அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று நிராகரித்தார்.
விரிவாக படிக்க: நிர்பயா வழக்கின் குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதி அறிவிப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












