நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கின் குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதி அறிவிப்பு

நிர்பயா கூட்டு பாலியல் வல்லுறவு வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேரையும் பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே அவர்களை ஜனவரி 22 அன்று தூக்கிலிட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள், அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கும் வரும் ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட அதிகாரப்பூர்வ ஆணை சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டது.
எனினும், அவர்களில் ஒருவரான முகேஷ் சிங் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்துள்ளதால் அவர்களை ஜனவரி 22 அன்று தூக்கிலிட முடியாது என்று டெல்லி அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நிராகரித்தார்.

பட மூலாதாரம், AFP
வெள்ளிக்கிழமை காலை மத்திய உள்துறை அமைச்சகம், இந்த கருணை மனுவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய சில மணி நேரங்களிலேயே இது நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மூன்று பேர் அல்லது மூன்று பேரில் ஒருவர் பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் கருணை மனு தாக்கல் செய்தால் தூக்கிலிடுவதற்கான தேதி மீண்டும் மாறலாம்.
நிர்பயா வழக்கில் புதிய திருப்பம்
இந்த வழக்கில் மேலும் ஒரு திருப்பமாக, பாலியல் வல்லுறவு நடந்த சமயத்தில் தாம் 18 வயதுக்கும் குறைவானவராகவே இருந்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களில் ஒருவரான பவன் குப்தா இன்று உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

நிர்பயா கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான டிசம்பர் 2012இல் தமக்கு 18 வயது முழுமையடையவில்லை என்று பவன் கூறியிருந்ததை டெல்லி உயர் நீதிமன்றம் சென்ற ஆண்டு டிசம்பர் 19 அன்று நிராகரித்திருந்தது.
அதை எதிர்த்தே இப்போது அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
பாலியல் வல்லுறவு மற்றும் கொலை குற்றம் சாட்டப்பட்ட ஐவரில் ஒருவர் 18 வயதுக்கு உட்பட்ட சிறார் என்பதால், அவருக்கு மூன்று ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனைக் காலம் முடிந்தபின் அவர் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












