நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கு குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனு நிராகரிப்பு - அடுத்தது என்ன?

முகேஷ் சிங்
படக்குறிப்பு, முகேஷ் சிங்
    • எழுதியவர், அபர்ணா ராமமூர்த்தி
    • பதவி, பிபிசி தமிழ்

நிர்பயா கூட்டுப் பாலுறவு வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங்கின் கருணை மனுவை இந்தியக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை மத்திய உள்துறை அமைச்சகம், இந்த கருணை மனுவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய சில மணி நேரங்களிலேயே இது நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள், அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கும் வரும் ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட அதிகாரப்பூர்வ ஆணை சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், தனக்கு தண்டனை நிறைவேற்றக்கூடாது என்று கூறி டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் இருவரிடமும் கருணை மனு தாக்கல் செய்திருந்தார்.

துணை நிலை ஆளுநர் ஏற்கனவே இதனை நிராகரித்திருந்த நிலையில், தற்போது குடியரசுத்தலைவரும் கருணை மனுவை நிராகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நிர்பயா பெற்றோர்

பட மூலாதாரம், Hindustan Times / Getty

முன்னதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய வல்லுறவு செய்யப்பட்ட நிர்பயாவின் தாய் ஆஷா தேவி, திட்டமிட்டப்படி ஜனவரி 22ஆம் தேதி குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் "நான் இதுவரை அரசியல் குறித்து ஏதும் பேசியதில்லை. நான் நீதியை மட்டுமே கேட்டு வந்தேன். ஆனால், 2012ஆம் ஆண்டு தேசியக் கொடி ஏந்தி என் மகளுக்காக நீதிக்கேட்டு போராடியவர்கள்தான், இன்று என் மகளின் மரணத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள்," என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

அடுத்து என்ன?

கருணை மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து தூக்கு தண்டனை உடனடியாக நிறைவேற்றப்படுமா, குற்றவாளிகள் மீண்டும் கருணை மனு தாக்கல் செய்யலாமா என்பது குறித்து மூத்த வழக்கறிஞர் துரைசாமியிடம் பிபிசி தமிழ் பேசியது.

"தூக்கு தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளி எத்தனை முறை வேண்டுமானாலும் கருணை மனு தாக்கல் செய்யலாம். அதனை எத்தனை முறை வேண்டுமானாலும் குடியரசுத்தலைவர் நிராகரிக்கலாம். உதாரணமாக ராஜீவ் காந்தி வழக்கில், 1998ல் தண்டனை வழங்கப்பட்டது. 1999ஆம் ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்கிறது. அவர்கள் கருணை மனு தாக்கல் செய்ததை அடுத்து நளினிக்கு மட்டும் 2000ல் தூக்கு தண்டனை குறைக்கப்படுகிறது. மீதமுள்ள 3 குற்றவாளிகளுக்கு 2014ல் தான் உச்சநீதிமன்றம் தண்டனையை குறைக்கிறது. சுமார் 14 ஆண்டுகள் அவர்கள் தொடர்ந்து கருணை மனுக்களை தாக்கல் செய்து வந்தனர்," என்று துரைசாமி தெரிவித்தார்.

குற்றவாளிகள்

மேலும் அவர் கூறுகையில், "குடியரசுத்தலைவருக்கோ ஆளுநருக்கோ கருணை மனுவை நிராகரிக்கும் நேரடி அதிகாரம் கிடையாது. குடியரசுத்தைலைவர் இதனை உள்துறை அமைச்சருக்கு பரிந்துரைப்பார். உள்துறை அமைச்சரால் இந்த முடிவை தனியே எடுக்க முடியாது. மந்திரி சபையில் கலந்தாலோசிக்கப்பட்டு, பின்னர் இந்த முடிவு எடுக்கப்படும். அது குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்படும். அந்த முடிவுக்கு குடியரசுத்தலைவர் கட்டுப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.

உடனடியாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா?

கருணை மனு நிராகரிக்கப்பட்டதில் இருந்து இரண்டு வாரங்கள் கழித்துதான் குற்றவாளிகளை தூக்கிலிட முடியும் என்று வழக்கறிஞசர் துரைசாமி தெரிவித்தார்.

அந்த காலகட்டம் கொடுப்பதற்கு காரணம், குற்றவாளிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதுதான்.

அதற்கிடையில், மீண்டும் அவர்கள் கருணை மனு தாக்கல் செய்தால், தானாகவே தூக்கு தண்டனை நிறுத்தப்படும் என்று அவர் கூறுகிறார்.

இதன்படி கூறப்பட்ட ஜனவரி 22ஆம் தேதி குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படமாட்டாது என்றே தெரிகிறது.

மேலும், நான்கு குற்றவாளிகளில் முகேஷ் சிங் மட்டுமே கருணை மது தாக்கல் செய்துள்ளார். இன்னும் மூன்று பேர் இதுவரை கருணை மனுக்கள் ஏதும் தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :