You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான ஒட்டகங்களை கொல்ல திட்டமிட்டது ஏன்?
தென் ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் வெப்பம் மற்றும் வறட்சியினால் அங்குள்ள ஆயிரக்கணக்கான ஒட்டகங்களை ஹெலிகாப்டர்களில் இருந்து சுட்டு கொல்ல முடிவுசெய்யப்பட்டுள்ளது.
மிக அதிக எண்ணிக்கையிலான ஒட்டகங்கள் ஊரையும் கட்டடங்களையும் சேதப்படுத்துவதாக தென் ஆஸ்திரேலியாவில் உள்ள பூர்வகுடி மக்கள் புகார் அளித்தனர். எனவே மக்களை பாதுகாக்க ஒட்டகங்களை கொல்ல அந்நாட்டு அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.
''ஒட்டகங்கள் தண்ணீரை தேடி வீதிகளில் நடமாடுகின்றன. குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது'' என அந்த பகுதியில் வசிக்கும் மரிடா பேக்கர் கூறுகிறார்.
ஒட்டகங்களுடன் சேர்த்து தனித்து விடப்பட்ட சில குதிரைகளையும் கொல்ல திட்டமிட்டுள்ளனர். ஒட்டகங்களை சுடும் பணி ஏபிஒய் எனப்படும் அனன்கு பிட்ஜண்ட்ஜரா யான்குஞ்சட்ஜரா பகுதியில் நடைபெறுகிறது.
துப்பாக்கிச்சூட்டில் சிறந்து விளங்கும் நிபுணர்கள் ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழல் மற்றும் நீர் மேலாண்மை துறையில் இருந்து வரவழைக்கப்படவுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் நிலவும் வெப்பம் மற்றும் வறண்ட சூழ்நிலை கடந்த சில மாதங்களாக அங்கு ஏற்பட்ட பெரிய அளவிலான காட்டுத்தீக்கு வழிவகுத்தன, ஆனால் பல ஆண்டுகளாக அங்கு கடும் வறட்சி நிலவுகிறது. ஆனால் காட்டுத்தீக்கும் ஒட்டகங்களுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை.
தென் ஆஸ்திரேலியாவில் பூர்வகுடி மக்கள் அதிகம் வசிக்கும் அணங்கு பகுதியில் உள்ள ஒட்டகங்கள்தான் முதலில் கொல்லப்படவுள்ளன.
''பூர்வகுடி மக்கள் வாழும் நிலப்பகுதிகளில் ஒட்டகங்கள் தண்ணீரைத்தேடி வருவதால், இங்கு வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது, மிகுந்த தண்ணீர் பற்றாக்குறையும் நிலவுகிறது.'' என ஏபிஒய் பகுதி நிலங்களின் பொது மேலாளர் ரிச்சர்ட் கிங் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
''மோசமான வறட்சி, வெப்பம் மற்றும் துர்நாற்றத்தை பொறுத்துக்கொள்ளமுடியாத சங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது, அனைத்து பூர்வகுடி மக்களின் கட்டமைப்புகளும் அச்சுறுத்தலில் உள்ளன, எனவே பெரிய அளவில் இருக்கும் ஒட்டகங்களின் எண்ணிக்கையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது'' என்றும் ரிச்சர்ட் கிங் கூறுகிறார்.
வீட்டின் வேலிகளை ஓட்டகங்கள் சேதப்படுத்துகின்றன, மேலும் வீட்டில் உள்ள தண்ணீரையும் குடித்துவிட்டு செல்கின்றன, இதனால் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது என்றும் மரிட்ட பேக்கர் கூறுகிறார்.
அங்குள்ள ஒட்டகங்கள் ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்டவை அல்ல , 19 ஆம் நூற்றாண்டில் இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த பிரிட்டிஷ் குடியேறிகளால் அங்கு கொண்டு செல்லப்பட்டவை. ஒட்டகங்களின் எண்ணிக்கை மதிப்பீடுகள் வேறுபடுகின்றன. ஆனால் மத்திய ஆஸ்திரேலியாவில் மட்டும் ஆயிரக்கணக்கான ஒட்டகங்கள் உள்ளன என்று மதிப்பிடப்படுகிறது .
ஒட்டகங்கள் வேலிகளையும், விவசாய நிலங்களையும் சேதப்படுத்த வாய்ப்புள்ளது, மக்கள் தங்கள் தேவைக்காக வைத்துள்ள தண்ணீரையும் ஒட்டகங்கள் குடித்துவிடுகின்றன.
பருவ நிலை மாற்றத்திற்கு காரணமான பசுமை இல்ல வாயு மற்றும் மீத்தேனையும் ஒட்டகங்கள் வெளியேற்றுகின்றன.
கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் காட்டுத்தீக்கு 25 பேர் பலியாகியுள்ளனர். 2000 வீடுகள் தீக்கு இறையாகிவிட்டன. காட்டுத்தீயால் கிழக்கு மற்றும் தென் ஆஸ்திரேலியாவில் பல விலங்குகள் இறந்துள்ளன.
இந்நிலையில் மேலும் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். இதனால் அடிக்கடி காட்டுத்தீ ஏற்படும் என்பதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: