You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தர்பார் - சினிமா விமர்சனம்
- எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
இளம் வயதில் தனது மனைவியை இழந்த கதாநாயகன், அநியாயத்தை வேரோடு வெட்டி வீழ்த்தும் போலீஸ் அதிகாரியாக எதிரிகளை தனது பாணியில் துவம்சம் செய்வதே தர்பாரின் கதை.
இதுவரை தமிழ் திரைப்படங்களில் வராத அபூர்வ கதை இல்லைதான். ஆனால் நடித்தது ரஜினிகாந்த். 40 ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களின் அபிமானத்தை ஒருவரால் எப்படி தக்கவைக்க முடிகிறது என்பது இந்த திரைப்படத்தில் பல காட்சிகளில், அவரது ஸ்டைல், காமெடி மற்றும் வசனங்கள் புரிய வைக்கும்.
படத்தின் ஆரம்ப காட்சியிலேயே ரெளடிகளை அடித்து நொறுக்கிய ரஜினி, மனித உரிமை ஆணைய பெண் அதிகாரியை துப்பாக்கி முனையில் மிரட்டி கையெழுத்து வாங்கி செல்கிறார்.
அப்போது தொடங்கும் ரஜினியின் பிளாஷ்பேக், அவர் சந்தித்த சவால்களையும், மகிழ்ச்சி தருணங்களையும் காட்டிவிட்டு நிகழ்காலத்துக்கு நம்மை அழைத்து செல்கிறது.
எதுவும், யாரும் அசைக்க முடியாத மும்பை மாநகர போலீஸ் ஆணையராக ஆதித்யா அருணாசலம் என்ற கதாப்பாத்திரத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரி வேடத்தை ரஜினி நன்றாகவே கையாண்டுள்ளார்.
மும்பை மாநகர போலீஸ் ஆணையராக பொறுப்பேற்கும்முன், ''நான் சார்ஜ் எடுக்கிறதுக்கு 3 கண்டிஷன்; நான் எடுத்த காரியத்தை முடிக்காம திரும்பமாட்டேன்; தப்பு செய்யுற யாரையும் விடமாட்டேன் என்றுகூறிவிட்டு ''வேலை முடிக்கிறதுக்கு முன்னாடி என் தாடியை எடுக்கமாட்டேன்'' என்று ஸ்டைலாக கண்சிமிட்டும் காட்சிக்கு தியேட்டரில் 'அப்லாஸ்' அள்ளுகிறது.
கடத்தப்பட்ட துணை முதல்வரின் மகளை விடுவித்தபிறகும், அவரை இன்னும் காணவில்லை என்று கூறி ரஜினி வியக்கவைக்கிறார்.
இளைஞர்களை போதை மருந்துக்கு அடிமையாக்கும் போதைமருந்து மாஃபியா கூட்டத்தையும், இளம் பெண்களை பாலியல் தொழிலில் தள்ளும் கூடாரத்தையும் முற்றிலுமாக களைய அதிரடியும், நகைச்சுவையும் கலந்த பாணியில் ரஜினி வேட்டையாடும் காட்சிகள் மிகவும் வேகமாக உள்ளன.
எதிரிகளை அடித்து நொறுக்கும் ரஜினி, புதிதாக ஒரு பெண்ணிடம் பேசுவதற்கு அவ்வளவு தடுமாறுகிறார். அதுவும் நயன்தாராவிடம் லவ் ப்ரபோஸ் செய்ய சொன்னால் கேட்கவும் வேண்டுமா?
இந்த பகுதிதான் படத்தின் ஜாலி கலாட்டா. காபி ஷாப்பில் சாப்பிட்டுவிட்டு பில் வந்தவுடன் உங்க ஷேர் 240 ரூபாய் என ரஜினி கூறுவதும், தூரத்தில் இருந்து இவரது லவ் ப்ரபோஸ் முயற்சிகளை கண்காணிக்கும் நிவேதா மற்றும் யோகிபாபு தலையிலடித்து கொள்வதும் சிரிப்பை வரவழைக்கும் காட்சி.
பல காட்சிகளில் ரஜினியையே கலாய்க்கும் யோகிபாபு படத்தின் முதல்பாதிக்கு பலம் சேர்த்திருக்கிறார். பல காட்சிகளில் அவரது நகைச்சுவை நன்றாகவே எடுபடுகிறது.
நயன்தாரா இந்த படத்தில் நடித்தார் என்று கூறிக்கொள்ளலாம். அவ்வளவுதான். அழகாக தோன்றும் அவருக்கு அழகாக நடிக்கவும் தெரியும் என்று இயக்குநருக்கு தெரியவில்லை போலும்.
தனி வழி, சும்மா கிழி பாடல்களில் அனிருத்தின் இசை தாளம் போட வைக்கிறது. படத்தின் பல காட்சிகளுக்கும் பின்னணி இசை வலு சேர்க்கிறது.
தனது மரணம் எவ்வளவு நேரத்தில் என்று அறிந்துகொள்ளும் நிவேதா, தந்தையை விட்டு செல்லப்போகிறோமே என்ற பரிதவிப்பில், 'அப்பா தலை ரொம்பா வலிக்குதுப்பா…'' என வீடியோ பதிவு செய்யும் காட்சி படத்தில் மிகவும் நெகிழ்ச்சியான பகுதி.
யார் தாக்கியது? என்ன நடந்தது என்று புரியாமல் ரஜினியை குழப்பும் சுனில் ஷெட்டி படத்தில் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் நன்றாகவே நடித்துள்ளார்.
மிகப்பெரிய சர்வதேச போதைமருந்து டானாக வரும் அவரின் நடிப்பில் மிரட்டல் தொனி நன்றாகவே எடுபடுகிறது.
மும்பை போலீஸுக்கு கருப்பு நாளாக அமைந்த அதே மார்ச் 12-இல், எந்த போலீஸ் நிலையத்தில் 17 போலீசாரை சுனில் ஷெட்டி கொளுத்தினாரோ , அந்த இடத்தில் அவரை ரஜினி சந்திக்கும் காட்சியில் எந்த விறுவிறுப்பும் இல்லை.
ஏ. ஆர். முருகதாஸின் முந்தைய படங்களை போலவோ, ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்பவோ அரசியல் வசனங்கள் இந்த படத்தில் பெரும்பாலும் இல்லை.
படம் முடிந்துவிட்டதா என்பது போல கடைசி காட்சி சட்டென்று முடிய ரஜினி ரசிகர்களுக்கு கிளைமேக்ஸ் திருப்தியளித்திருக்குமா என்பது சந்தேகமே.
படத்தின் தலைப்பை போலவே இது ரஜினியின் தர்பார். அவரது தர்பார் எப்படி இருக்குமோ அப்படி இந்த படத்திலும் இருக்கிறது. ஆனால் இந்த தர்பாரில் மற்றவர்களுக்கும் பங்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
தர்பார் சொதப்பலா? Rajini Darbar எப்படி? | Public review
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்