You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரான், அமெரிக்கா, இராக் இடையே என்ன நடக்கிறது - 400 சொற்களில் எளிய விளக்கம்
இரானின் முக்கிய படைத் தளபதியான காசெம் சுலேமானீயை அமெரிக்கா கொன்றதால் இரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாடுகளுக்கும் இடையே பதற்றமும், இந்த சூழல் போருக்கு வித்திடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
தற்போதையை சூழலை நாம் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இருநாடுகளுக்கும் ஏற்கனவே உள்ள பகைமை குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்.
’1979 புரட்சி’
அமெரிக்கா மற்றும் இரான் நீண்ட நாட்களாக பகைமை நாடுகளாக இருந்து வருகின்றன.
இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனை 1979ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது. அமெரிக்க ஆதரவு பெற்ற இரானின் அரசர் முகமது ரெசா ஷா பதவியிலிருந்து நீக்கப்பட்டு அந்த நாடு இஸ்லாமிய குடியரசு நாடானது.
அப்போது ஏற்பட்ட புரட்சிக்கு மத்தியில் இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் டஜன் கணக்கான அமெரிக்கர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர்.
அன்றிலிருந்து இரு நாடுகளுக்குமான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.
சர்வதேச நாடுகளின் கூற்றுக்கு இணங்க, தங்களது அணுஆயுத திட்டத்தை குறைத்துக் கொள்ளும் ஒப்பந்தத்திற்கு இரான் ஒப்புதல் வழங்கியதால் இரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான உறவு 2015ஆம் ஆண்டு சற்று நல்ல நிலைக்கு வந்தது.
ஆனால் அந்த ஒப்பந்தம் ஒரு மோசமான ஒப்பந்தம் என அடுத்த வருடமே அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவின் தடை
2018ஆம் ஆண்டு அந்த அந்த ஒப்பந்தத்தை கலைத்து, இரான் மீது தடைகளை விதித்து புதிய ஒப்பந்ததிற்கு சம்மதிக்க இரான் தலைவர்களுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது.
அந்த தடையால் இரான் பொருளாதாரத்தில் ஒரு பெரிய சரிவு ஏற்பட்டது.
அதன்பின் 2019ஆம் ஆண்டும் அமெரிக்கா தொடர்ந்து இரான் மீது தடைகளை விதித்தது.
மேலும் மே மற்றும் ஜூன் மாதம், ஓமன் வளைகுடாவில் ஆறு எண்ணெய் டாங்கர்கள் அழிக்கப்பட்டதில் இருநாடுகளுக்குமான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது.
அந்த தாக்குதலுக்கு இரான்தான் காரணம் என அமெரிக்கா தெரிவித்தது. ஆனால் இரான் அதனை மறுத்தது.
ஜூலை மாதம், 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்ட சில விதிமுறைகளை இரான் தளர்த்தியது.
அதன்பின் டிசம்பர் மாதம், வடக்கு இராக்கில், அமெரிக்க சிவில் பணியாளர் ஒருவர் ராக்கெட் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டதற்கு இரான் ஆதரவு பெற்ற போராளிக் குழு ஒன்றின் மீது அமெரிக்கா குற்றம் சுமத்தியது.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இராக் மற்றும் சிரியா தொடர்பான ஆயுதக் குழுக்குள் மீது அமெரிக்கா குண்டு வீசியது. அதில் 25 போராளிகள் கொல்லப்பட்டனர்.
இந்த குண்டு வீச்சு இராக்கில் சலசலப்பை ஏற்படுத்தியது. இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டது.
அந்த தாக்குதலை ஒருங்கிணைத்தது இரான் என்றும், அதற்கு அந்நாடு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
ஜனவரி 3ஆம் தேதியன்று, காசெம் சுலேமானீ பாக்தாத் விமானநிலையத்தில் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இராக் படைகளை கட்டுப்படுத்திய ராணுவ தளபதியான காசெம் சுலேமானீ அமெரிக்கர்களால் பயங்கரவாதி என்று கருதப்பட்டார். நூற்றுக்கணக்கான அமெரிக்க படைகளை கொன்றவர் என்றும், பல தாக்குதல்களை திட்டமிட்டவர் என்றும் அமெரிக்கா இவர் மீது குற்றம் சுமத்துகிறது.
சுலேமானீ இறப்புக்கு கடுமையாக பழிவாங்கப்படும் என்று இரான் தெரிவித்திருந்தது. இரண்டு நாள் கழித்து, அணு ஆயுத ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள யுரேனியம் செறிவூட்டல் விகிதத்துக்கான வரம்பை இரான் மீறியது.
இதற்கு அமெரிக்கா தக்க பதிலடி கொடுக்கும் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: