இரான் Vs அமெரிக்கா: 65 ஆண்டுகளுக்கும் மேலான சிக்கலான உறவின் முழு வரலாறு

சமீபத்தில் இராக்கில் உள்ள பாக்தாத் விமான நிலையத்தில் இருந்து காரில் சென்ற இரான் புரட்சிகர ராணுவ தலைவர் காசெம் சுலேமானீ அமெரிக்காவால் கொல்லப்பட்டார். இது இரு நாடுகளிடையிலான பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஆனால் அமெரிக்க - இரான் மோதல் இப்போது தொடங்கியது அல்ல.

இரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே 65 ஆண்டுகளுக்கு மேல் சிக்கலான உறவு இருந்து வருகிறது. அமெரிக்க உளவுப் பிரிவினர் திட்டம் தீட்டி1953ல் இரான் பிரதமர் மொசாடெக்கை ஒரு கிளர்ச்சி மூலம் பதவி நீக்கியது முதல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று இரானை எதிர்ப்பது வரையிலான வரலாறு பற்றிய ஒரு பார்வை:

1953- மொசாடக்

இரானில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் முகமது மொசாடக் இரானின் எண்ணெய் வளத்தை தேசியமயமாக்க நினைத்தார். இதனால் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உளவுத் துறை 1953ல் அவரின் ஆட்சியைக் கவிழ்த்து முகமது ரெசா ஷாவுக்கு ஆதரவாக இருந்து ஷாவை பதவியில் அமர செய்தது. அதன்பின் ஷா தனக்கு எதிராக இருந்தவர்களை சவாக் என்ற ரகசிய போலீஸ் அமைப்பை கொண்டு அடக்கினார். ஷாவுக்கு எதிரான இஸ்லாமிய தலைவராக அயதுல்லா கொமெனி உருவானார். ஆனால் ஷாவை சாடிய பிறகு அயதுல்லா கொமெனி நாடு கடத்தப்பட்டார். இதன் பின் 1979 இரான் புரட்சி வரை முகமது ரெசா ஷா ஆட்சியில் இருந்தார்.

1979- இரான் புரட்சி

26 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவின் ஆதரவில் ஆட்சிக்கு வந்த முகமது ரெசா ஷா மதசார்பற்ற மற்றும் மதசார்பு எதிரிகளின் பல மாத போராட்டங்களின் விளைவால் ஜனவரி 16 அன்று நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதன்பிறகு இரண்டு வாரம் கழித்து இஸ்லாமிய மதத் தலைவர் அயதுல்லா கொமெனி நாட்டிற்குள் வந்தார். 1979 ஏப்ரல் 1 அன்று இரான் இஸ்லாமிய குடியரசாக அறிவிக்கப்பட்டது.

1979-1981 அமெரிக்க தூதரகத்தின் பிணைக்கைதிகள் பிரச்சனை.

1979 ஜனவரி 16 அன்று நாட்டை விட்டு வெளியேறிய முகமது ஷா அந்த ஆண்டு அக்டோபர் மாதம் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அப்போது இரானில் செய்த குற்றங்களுக்காக ஷாவை இரானிடம் ஒப்படைக்க வேண்டும் என இரான் கோரிக்கை விடுத்தது. ஆனால் ஷா அங்கிருந்து எகிப்து சென்றதால் இந்த ஒப்படைப்பு நடக்கவில்லை.

இதனால் அயதுல்லா கொமெனிக்கு ஆதரவாக இருந்த மாணவர் படையால் 1979 நவம்பர் மாதம் அமெரிக்க தூதரகத்தில் இருந்தவர்கள் பிணைக்கைதிகளாக சுற்றிவளைக்கப்பட்டனர். 444 நாள்களுக்கு இந்த முற்றுகை நீடித்தது. பின்னர் 1981 ஜனவரியில் தூதரகத்தில் இருந்த 52 பேர் அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகனின் பதவியேற்பு அன்று விடுவிக்கப்பட்டனர்.

1980 இரான் - இராக் போர்

1980ல் இரான் மீது இராக் போர் தொடுத்தது. இந்த போர் நீண்ட காலம் நீடித்ததால், அமெரிக்கத் தரப்பு இராக் தரப்புக்கு ஆதரவளித்தது. இந்த சண்டையில் ஒரு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர், பிறகு இரானின் தலைவரான அயதுல்லா கொமெனி 8 ஆண்டுகள் கழித்து சமதான உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டார்.

1985-86 இரான் காண்ட்ரா ஊழல்

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பால் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்கர்களை விடுவிக்க இரான் அமெரிக்காவுக்கு உதவியது. இதற்கு கைமாறாக அமெரிக்கா இரானுக்கு ஆயுதங்களை அனுப்பியது. இதில் கிடைத்த லாபம் நிகரகுவா நாட்டின் போராளிகளுக்கு அனுப்பப்பட்டது அப்போதைய அமெரிக்க அதிபர் ரீகனுக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

1988- இரானிய பயணிகள் கொண்ட விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

பிறகு 1988ல் அமெரிக்க போர்க் கப்பல் ஒன்று வளைகுடா பகுதியில் இரானின் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. இதில் விமானத்தில் இருந்த 290 பேர் இறந்தனர். இதில் இருந்த பெரும்பாலன இரானியப் பயணிகள் மெக்காவுக்கு சென்று கொண்டிருந்தனர். ஆனால் அமெரிக்கா , இந்த விமானத்தை போர் விமானம் என நினைத்து சுட்டதாக பதிலளித்தது. ஆனால் மன்னிப்பு கோரவில்லை.

2002 "தீமையின் அச்சு"

இரான், இராக் மற்றும் வட கொரியா ஆகியவையும் இணைந்து "ஆக்ஸிஸ் ஆஃப் ஈவில்" அதாவது தீமையின் அச்சு உருவாகியிருப்பதாக கூறினார் அப்போதைய அமெரிக்க அதிபர் டபிள்யூ ஜார்ஜ் புஷ். இது இரானில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

2000 - அணுஆயுதமும் பொருளாதாரத் தடைகளும்

2002ல் இரான் அணுக் கரு நிலையம் ஒன்றை அமைத்து வருவதாகவும், யுரேனியம் செறிவூட்டும் நிலையம் அமைப்பதாகவும் இரானின் எதிரிகள் அம்பலப்படுத்தினர்.

இரான் ரகசியமாக அணுஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியது. ஆனால் இரான் இந்த குற்றசாட்டை மறுத்தது. ஒரு தசாப்தம் முழுவதும் இரானின் அரசியல் நடவடிக்கைகள் சர்வதேச அணுஆயுத அமைப்பின் கண்காணிப்பில் இருந்தது.

இதற்கு நடுவில் பல முறை மஹ்மூத் அஹ்மதினிஜாத் அரசை எதிர்த்து ஐநா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இரான் மீது பொருளாதாரத் தடை விதித்தது. இதனால் இரானின் நாணய மதிப்பு இரண்டு ஆண்டுகளில் மூன்றில் இரண்டு பங்கு வீழ்ந்தது.

2013 முதல் 2016 வரையான உடன்படிக்கை மற்றும் அணுஒப்பந்தம்

2013 செப்டம்பரில், இரானின் புதிய அதிபர் ஹாசன் ரௌஹானி பதவியேற்ற ஒரு மாததுக்கு பிறகு அவரும் அப்போதைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் தொலைபேசி மூலம் பேசிக்கொண்டனர். சுமார் 30 ஆண்டுகள் கழித்து நடந்த உயர் மட்டப் பேச்சுவார்த்தையாக அது கருதப்பட்டது.

அதன்பின் 2015ல் இரான் P5+1 எனப்படும் உலக சக்திகள் அதாவது அமெரிக்கா, பிரிட்டன், ஃப்ரான்ஸ், சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் ஒரு அணு ஒப்பந்தத்தை ஏற்றுகொண்டது.

அந்த ஒப்பந்தத்தில், இரான் அதனுடைய அணு நடவடிக்கைகளைக் குறைத்து கொள்வதாகவும் சர்வதேச கண்காணிப்பாளர்களை நாட்டினுள் அனுமதிப்பதாகவும் அதற்கு பதில் இரான் மீது போடப்பட்ட பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

2019ல் வளைகுடாவில் ஏற்பட்ட பதற்றம்:

2018 மே மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2015ம் ஆண்டின் அணு ஆயுத ஒப்பந்தத்தை விட்டு வெளியேறி இரான் மற்றும் இரானோடு வணிகம் செய்யும் அனைத்து நாடுகளின் மீதும் மீண்டும் பொருளாதாரத் தடை விதித்தார்.

இதன் பிறகு அமெரிக்கா மற்றும் இரானுக்கு இடையேயான உறவு மேலும் மோசமகியது. பிறகு 2019 மே மற்றும் ஜூன் மாதங்களில் அமெரிக்காவுக்கு செல்லவிருந்த 6 எண்ணெய் டேங்கர்கள் ஓமன் வளைகுடாவில் வெடித்து சிதறின. இதற்கு அமெரிக்கா இரானை குற்றம் சுமத்தியது. பிறகு ஜூன் 20 அன்று ஹார்மஸ் நீரிணைக்கு மேல் ஒர் அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது இரான். தங்கள் நாட்டுப் பிராந்தியத்தில் அது பறந்ததாக இரான் தரப்பு கூறியது. ஆனால் அது சர்வதேச பகுதியில் பறந்ததாக அமெரிக்கா கூறியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: