You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டொனால்ட் டிரம்ப்: "இரானில் 52 இடங்களை நாங்கள் குறி வைத்துள்ளோம்" - அமெரிக்கா
இரானின் 52 இடங்களை நாங்கள் குறி வைத்துள்ளோம். ஒரு வேளை இரான் அமெரிக்கர்களையோ அல்லது அமெரிக்க சொத்துகளையோ தாக்கினால், எங்களது எதிர்தாக்குதல் மிக மோசமான மற்றும் வேகமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார்.
இரானில் சக்திவாய்ந்த நபராக விளங்கிய ஜெனெரல் காசெம் சுலேமானீ அமெரிக்காவால் கொல்லப்பட்டிருப்பதால் அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவைப் பழிவாங்கியே தீருவோம் என இரான் சூளுரைத்துள்ளது.
இது குறித்து ட்விட்டரில் கருத்து பகிர்ந்த டிரம்ப், "பதில் தாக்குதல் நடத்தும் விதமாக, அமெரிக்காவின் சொத்துகளைத் தாக்கப்போவதாக இரான் பேசிக் கொண்டிருக்கிறது. அப்படித் தாக்கப்படும்பட்சத்தில் எங்களது எதிர்வினை மிக மோசமானதாக இருக்கும். நாங்கள் 52 இரானிய இலக்குகளைக் குறி வைத்துள்ளோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏன் இந்த 52?
1979ஆம் ஆண்டு இறுதியில் 52 அமெரிக்கர்கள் பிணைக் கைதிகளாக இரானில் ஓர் ஆண்டுக்கு மேலாக பிடித்து வைக்கப்பட்டிருந்தனர். அமெரிக்க தூதரகம் முற்றுகையிடப்பட்டப் பின் இந்த சம்பவமானது நடந்தது.
இதனைக் குறிக்கும் விதமாகதான் டிரம்ப் இவ்வாறு கூறி உள்ளார்.
1979ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரானில் அமெரிக்க தூதரகம் முற்றுகையிடப்பட்டது.
அமெரிக்க தூதரகத்தில் 52 அமெரிக்கர்கள் பிணை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டனர். அன்றிலிருந்து இருநாடுகளும் எதிரிகளாக இருந்து வருகின்றன.
யார் இந்த காசெம் சுலேமானீ ?
இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந்த நாட்டிலேயே அதிக அதிகாரம் பெற்ற ராணுவத் தளபதியாக விளங்கியவர் ஜெனரல் காசெம் சுலேமானீ .
அயத்துல்லா அலி காமேனிக்கு அடுத்தபடியாக இரானில் சக்திவாய்ந்த நபராகக் கருதப்பட்டவர் சுலேமானீ.
இரானின் ஆட்சியில் ஜெனரல் காசெம் சுலேமானீ, ஒரு முக்கியமான நபர். 1998 ஆண்டு முதல் காசெம் சுலேமானீ, இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவு (Quds Force) ஒன்றின் தலைவராக இருந்து வந்தார். இந்தப்பிரிவு வெளிநாடுகளில் ரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.
இரானின் புரட்சிகர ராணுவ படையானது, அந்நாட்டின் இஸ்லாமிய கட்டமைப்பை பாதுகாக்க 40 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்டது.
இந்த படையின் Quds என்ற பிரிவு, மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள கூட்டணி அரசுகள் மற்றும் ஆயுதம் ஏந்திய போராளிகள் குழுவிற்கு ரகசியமாக பணம், ஆயுதங்கள், தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் ஆலோசனை போன்ற உதவிகளை வழங்கும். இதன் மூலம் இரானின் ஆதிகத்தை மத்திய கிழக்கு பகுதிகளில் விரிவுபடுத்தும் லட்சியம் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கு பின்னால் இருந்த முக்கிய புள்ளிதான் காசெம் சுலேமானீ. போர் என்று வரும்போது அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் போன்று இவர் செயல்பட்டார் என்கிறார் பிபிசியின் சர்வதேச தலைமை செய்தியாளர் லைஸ் டவுசட்.
விரிவாகப் படிக்க:அமெரிக்காவால் கொல்லப்பட்ட இரான் ராணுவ தளபதி காசெம் சுலேமானீ யார்?
மூன்றாம் உலகப்போருக்கு சாத்தியம் உள்ளதா?
சரி. இரண்டு நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ள பதற்றத்தால் மூன்றாம் உலகப் போருக்கு வாய்ப்புள்ளதா?
இரானுக்கு எதிராக அமெரிக்கா போரை அறிவிப்பதற்காகவே காசெம் சுலேமானீ கொல்லப்பட்டுள்ளார் என பலர் விவரிக்கின்றனர். இந்த விவகாரத்தை மிகைப்படுத்தவோ அல்லது குறைத்து மதிப்பிடவோ கூடாது.
இது மூன்றாம் உலகப் போரை தூண்டாது. பொதுவாக இத்தகைய மோதலில் ஈடுபடக் கூடிய சீனாவும் ரஷ்யாவும், இந்த விவகாரங்களில் தலையிடவில்லை.
ஆனால், அமெரிக்க அரசின் நடவடிக்கையால், தற்போது மத்திய கிழக்கு நாடுகள் அவர்களின் பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
இரானின் பதிலடியை நிச்சயம் எதிர்பார்க்க வேண்டிய தருணம் இது. இவ்வாறான பழிவாங்கும் நடவடிக்கைகளால், இரு நாடுகளுக்கு இடையேயான பகை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இரானின் பதில் நடவடிக்கை, இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்திற்கு எதிராக அமையலாம்.
அதேபோல இரானை பாதிக்கக்கூடிய வகையில் அமெரிக்கா வைக்கும் இலக்கை முறியடிக்கும் வகையிலும் இரான் செயல்படும்.
விரிவாகப் படிக்க:காசெம் சுலேமானீ கொலை மூன்றாம் உலகப் போரைத் தூண்டுமா?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: