உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் திரைப்படமாகிறதா மு.கருணாநிதி வாழ்க்கை வரலாறு? - இவர்தான் இயக்குநர்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி: "உதயநிதி நடிப்பில் திரைப்படமாகிறதா மு.கருணாநிதி வரலாறு?"

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கலைஞர் மு.கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கவுள்ளதாக திரைப்பட இயக்குநா் ராம் சிவா திருமலையில் தெரிவித்தார்.

திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்த திரைப்பட இயக்குநர் ராம்சிவா செய்தியாளர்களிடம் கூறியது:

'என் காதலி சீன் போடுறா' திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், 'கோரிப்பாளையம்' ராமகிருஷ்ணா, தா்ஷினி கதாநாயகியாக நடித்துள்ள 'டீக்கடை பெஞ்ச்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும், பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ், அறிமுக நாயகனாக வெற்றி, உபாசனா, சிங்கம் புலி, மனோபாலா, சுமா பூஜாரி ஆகியோர் நடிக்கும் புதிய படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படம் செல்லிடப்பேசியினால் இளைஞர்களுக்கு ஏற்படும் நன்மை-தீமைகள் குறித்து எடுக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, அரசியலில் வரலாற்றுச் சாதனை படைத்த கலைஞா் மு.கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். இந்தப் படத்தில் கலைஞராக அவரது பேரன் உதயநிதி ஸ்டாலினை நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளேன். இது குறித்து அவரிடம் நேர ஒதுக்கீடு பெற்று கட்டாயம் உதயநிதி ஸ்டாலின் மூலம் கலைஞரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்து தமிழ்: 'காலியாக உள்ள 1,070 பேராசிரியர் பணியிடங்கள்'

அரசு பொறியியல் கல்லூரிகளில் 1,070 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தின் கீழ் 500-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. அதில், 13 அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், 19 உறுப்புக் கல்லூரிகள் என மொத்தம் 32 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதற்கிடையே அரசு பொறியியல் கல்லூரிகளில் 1,070 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், 133 ஆசிரியர் பணியிடங் களை தற்காலிகமாக நிரப்புவதற்கான அறிவிப்பைப் பல்கலைக்கழகம் கடந்த வாரம் வெளியிட்டது. ஒட்டுமொத்தமாக 1,070 பணியிடங்கள் வரை காலியாக இருக்கும் நிலையில், வெறும் 133 இடங்களை மட்டும் நிரப்பும் அரசின் முயற்சி பேராசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் கூறியதாவது:

பேராசிரியர் பற்றாக்குறையால் கல்லூரிகளில் வகுப்புகள் ஒத்திவைக்கப்படும் நிலை இருப்பதால் மாணவர்களுக்கு முழுமையான கல்வியை கற்றுதர முடிய வில்லை. இதனால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. 2018-ம் ஆண்டு தேர்வுகளில் அரசு கல்லூரிகள் 70 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சி விகிதம் பெற்றிருந்தன. ஆனால், 2019-ல் அது 60 சதவீதமாக குறைந்துவிட்டது.

அதேபோல், அரசு கல்லூரியில் 2016-ம் ஆண்டு படித்த 11 மாணவர்களும், 2017-ல் 7 பேரும், 2018-ல் 6 பேரும் பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பெற்றனர். ஆனால், 2019-ம் ஆண்டில் ஒரு மாணவர் மட்டுமே பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பிடித்துள்ளார். குறிப்பாக பல்கலைக்கழக தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் திருநெல்வேலி அரசு கல்லூரி நடப்பாண்டில் மிகவும் பின்தங்கிவிட்டது. இதற்கு கல்லூரியில் நிலவும் 40-க்கும் அதிகமான பேராசிரியர்கள் பற்றாக்குறையே முக்கிய காரணம்.

ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் போதுமான உள்கட்டமைப்பு வசதி இல்லாததால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்பட்டு, வேலைவாய்ப்புக்கு தேவையான திறன்களை பெற முடிவ தில்லை. வேலைவாய்ப்பு கேள்வியாவதால் நடப்பு கல்வியாண்டில் அண்ணா பல்கலையில் 3,200-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பவில்லை. இதுகுறித்து கேள்வி எழுந்ததாலேயே, தற்காலிக பேராசிரியர்களை நியமிக்கும் முடிவுக்கு அண்ணா பல்கலை வந்துள்ளது.

அதேநேரம், இதர அரசு கல்லூரிகளின் நிலை குறித்து எந்த அறிவிப்பையும் உயர்கல்வித் துறை வெளியிடவில்லை.

தற்போதைய சூழலில், திறன்மிக்க பொறியாளர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. தற்காலிக ஆசிரியர்கள் மூலம் சிக்கலை ஓரளவு சமாளிக்கலாமே தவிர, தகுதியான பேராசிரியர்களால் மட்டுமே திறமையான மாணவர்களை உருவாக்க முடியும். எனவே, மாணவர்கள் நலன்கருதி உரிய விதிமுறை களை பின்பற்றி, ஆசிரியர் காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிதிப் பற்றாக்குறை

இதுதொடர்பாக உயர்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "நிதி பற்றாக் குறை மற்றும் அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து காரணமாகவே அரசு பொறியியல் கல்லூரிகளில் தற்காலிக பேராசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் விரைவில் முழுமையாக நிரப்பப்படும்" என்றனர்.

இதற்கிடையே, அண்ணா பல்கலைக் கழகத்தில் ஏற்கெனவே 518 தற்காலிக ஆசிரியர்கள் 10 ஆண்டுகளாக பணிபுரிகின்றனர். அவர்களுக்கு முறையான பணி வரன்முறைகள் இல்லாததால் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் ஏற்படுகின்றன.

எனவே, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ள தற்காலிக ஆசிரியர் பணி நியமன அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் அருட்பெருஞ்ஜோதி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரணையில், தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினத்தந்தி: "ஊரக உள்ளாட்சி தேர்தலில் கட்சி தாவல் தடை சட்டம் பொருந்துமா?"

சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுபவர்கள், காலப்போக்கில் கட்சியின் நடவடிக்கை பிடிக்காமல் வேறு கட்சிக்கு மாறினால் அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாய்கிறது. இந்த சட்டத்தின் மூலம் கட்சி மாறும் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் பதவி பறிக்கப்படுகிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் இந்த சட்டம் பொருந்துமா? என்று, மாநில தேர்தல் ஆணைய வட்டாரத்தில் விசாரித்த போது, 'ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் இந்த சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சட்டம் நடைமுறையில் இல்லை', என்ற தகவல் கிடைத்தது. கேரளா உள்பட பல மாநிலங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் இந்த சட்டம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'ஊராட்சித் தலைவர் தேர்தல்: விவசாயியின் 2 மனைவிகளும் வெற்றி`

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே விவசாயியின் 2 மனைவிகள், 2 ஊராட்சிகளில் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வந்தவாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட வழூா் அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகரன். விவசாயி. இவருக்கு செல்வி, காஞ்சனா ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். இவர்களில் செல்வி கடந்த 2011 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் வழூா் அகரம் ஊராட்சித் தலைவராக இருந்தார்.

இந்த நிலையில், தற்போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் செல்வி மீண்டும் வழூா் அகரம் ஊராட்சியிலும், காஞ்சனா வழூா் அகரம் அருகே உள்ள தனது சொந்த ஊரான கோயில்குப்பம் சாத்தனூா் ஊராட்சியிலும் ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு போட்டியிட்டனர்.

வியாழக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் செல்வி, காஞ்சனா ஆகிய இருவரும் ஊராட்சித் தலைவர்களாக வெற்றி பெற்றனர்.

இதையடுத்து, இருவரும் வெள்ளிக்கிழமை தாங்கள் வெற்றி பெற்ற ஊராட்சிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: