இரான் - அமெரிக்கா இடையே போர் ஏற்பட்டால் பெட்ரோல் விலை எவ்வளவு உயரும்? - விரிவான தகவல்கள்

இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந்த நாட்டிலேயே அதிக அதிகாரம் பெற்ற ராணுவத் தளபதியாக விளங்கியவருமான ஜெனரல் காசெம் சுலேமானீயை அமெரிக்கப் படை கொன்றுள்ளது. இதற்குப் பழிக்குப் பழி வாங்கியே தீருவோம் என்கிறது இரான்.

இது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இருநாடுகளுக்கு இடையே போர் மூண்டால் அது சாமான்ய மனிதனை எப்படி பாதிக்கும்? எரிபொருள் விலை எவ்வளவு உயரும்? கடந்தகாலங்களில் இவ்வாறு நடந்தது உண்டா?

ஒது குறித்து விவரிக்கிறார் பிபிசி வணிக செய்தியாளர் நீல் மெக்கென்ஸி.

கடந்த கால படிப்பினைகள்

நியூயார்க் மெர்கெண்டைல் பங்கு சந்தையில் வர்த்தகம் செய்யும் வணிகர் மிச் கான், ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2004ஆம் ஆண்டு நடந்த அமெரிக்கா - இராக் யுத்தம் எப்படி எரிபொருள் விலையில் தாக்கம் செலுத்தியது என நினைவு கூறுகிறார்.

"பங்குச்சந்தையில் ஒரு நிச்சயமற்ற நிலை நிலவியது. 2004ஆம் ஆண்டு போர் தொடங்கிய அந்த நாளில், என் அருகே அமர்ந்திருந்த மற்றொரு வர்த்தகர் எண்ணெய் நிறுவனப் பங்குகளை விற்க முயன்றார். ஆனால், அதற்குள் சந்தை மொத்தமாக சரிந்துவிட்டது," என்கிறார் மிச் கான்.

விலை சீராக இல்லாமல், ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.

ஓர் இரவில் பேரலுக்கு பத்து டாலர்கள் ஏறிய விலை, திடீரென 20 டாலர்கள் விலை குறைந்தது.

ஆனால் அப்படியான சூழல் இப்போது இல்லை என்கிறார் கான்.

இப்போது எரிபொருள் உற்பத்தி செய்யும் இடம், அது சுத்திகரிக்கப்படும் இடம் என எல்லாம் இந்த 16 ஆண்டுகளில் மாறி இருக்கிறது.

முன்பு நடந்தது போல இப்போது நடக்காது. அதற்காக எதுவுமே நடக்காது என்று இல்லை.

அமெரிக்காவின் வர்த்தகம்

ஏன் 16 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் செல்ல வேண்டும்? அண்மையில் நடந்த ஒரு விஷயத்தை வைத்தே பார்ப்போம்.

அண்மையில் அராம்கோ எரிபொருள் உற்பத்தி நிலையம் தாக்கப்பட்டது.

இதனை அடுத்து பெட்ரோல் விலை குறித்த அச்சம் நிலவியது. ஆனால், சில நாட்களுக்கு மட்டுமே பெட்ரோல் விலையில் ஓர் ஏற்றம் இருந்தது. அதன் பின் கட்டுக்குள் வந்தது.

இதற்கு காரணம் எரிபொருள் வர்த்தகத்தில் மத்திய கிழக்கு நாடுகளின் தாக்கம் குறைந்ததுதான்.

அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளை தங்கள் எரிபொருள் தேவைக்காக சார்ந்து இல்லை.

1990 ஆண்டுகளில் வளைகுடா போர் நடந்த போது, எரிபொருள் இரண்டு இடங்களிலிருந்துதான் வந்தது, ஒன்று ஒபெக் அல்லது எரிபொருள் உற்பத்தி செலவு அதிகமாக இருந்த வடக்கு கடல் பகுதி.

அப்போது எங்கு எரிபொருள் இருக்கிறதெனக் கண்டுபிடிப்பது செலவு அதிகமாகும் விஷயம் மற்றும் ஆபத்தான செயல்.

ஆனால், இப்போது தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது.

வடக்கு அமெரிக்காவிலேயே மிதமிஞ்சிய அளவில் எரிபொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், ரஷ்யாவில் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதனால் முன்பு இருந்த சூழ்நிலை இப்போது இல்லை.

ஆனால் அதே நேரம் அமெரிக்காவில் எண்ணெய் பைப் லைன்கள் தாக்கப்பட்டால் எண்ணெய் விலை நிச்சயமாக உயரும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: