குழந்தைகள் ஆபாசப் படம் பார்த்ததாக கோவையில் அஸ்ஸாம் இளைஞர் கைது

கோவையில் குழந்தைகள் ஆபாசப் படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து பகிர்ந்ததாக அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் அதிகரித்து வருவதை தொடர்ந்து தமிழகத்தில் ஆபாசப் படங்களை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் பற்றிய தகவல்களை காவல்துறையினர் திரட்டி வருகின்றனர்.

சமீபத்தில், குழந்தைகள் ஆபாசப் படங்களை பரப்பியதாக திருச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேற்கு மண்டலம் முழுவதும் குழந்தைகள் ஆபாசப் படங்களை பதிவு செய்பவர்கள் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அந்த நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கோவை மாவட்ட காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், குழந்தைகள் ஆபாசப் படங்களை பரப்பியதாக தற்போது மேலும் ஒருவர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது நிரம்பிய ரென்டா பாசுமாடரி என்பவர் ஃபேஸ்புக் பக்கத்தில் குழந்தைகளின் ஆபாசப் படங்களை பதிவிட்டு இருந்தது தெரியவந்ததையடுத்து காவல்துறையினர் அவரை இன்று (சனிக்கிழமை) கைது செய்துள்ளனர்.

மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த நபர் பொள்ளாச்சியில் இருந்து ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அவரிடமிருந்த திறன்பேசியை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது அதில் சிறுவர்களின் ஆபாசப் படங்கள் உட்பட பல ஆபாசப் படங்கள் இருந்துள்ளது. தான் பார்க்கும் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து அதனை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்வதோடு அவரது நண்பர்களுக்கும் அவர் அனுப்பியுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

மேலும், இவ்வாறான குழந்தைகள் தொடர்பான ஆபாசப் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வைத்திருப்போர் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும், கூடிய விரைவில் மேலும் பல நபர்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: