You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரானில் விபத்துக்கு உள்ளான உக்ரைன் விமானம்: 'கருப்பு பெட்டியை தரமாட்டோம்' மற்றும் பிற செய்திகள்
இரான் தலைநகர் டெஹ்ரான் அருகே நேற்று (புதன்கிழமை) விபத்துக்குள்ளான உக்ரைன் விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பெட்டியை அதன் உற்பத்தியாளரான போயிங் அல்லது அமெரிக்காவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று இரான் அறிவித்துள்ளது.
இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் காமேனி விமானநிலையத்தில் இருந்து 176 பயணிகளுடன் விமானம் கிளம்பியயே உடனே இந்த விபத்து நடந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 167 பயணிகளும் ஒன்பது விமானப் பணியாளர்களும் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகளாவிய விமானப் போக்குவரத்துத்துறை விதிகளின் கீழ், இந்த விபத்து குறித்து விசாரணையை வழிநடத்த இரானுக்கு உரிமை உண்டு.
இதுபோன்ற விசாரணைகளில் அந்த விமானத்தை தயாரித்த நிறுவனமும், அதிலிருந்து கைப்பற்றப்பட்ட கருப்பு பெட்டியில் உள்ள தகவல்களை ஆய்வு செய்யும் திறன் பெற்ற சில நாடுகளும் ஈடுபடுவது வழக்கமானது.
இந்நிலையில், "விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை நாங்கள் அதன் உற்பத்தியாளரிடமோ அல்லது அமெரிக்கர்களிடமோ கொடுக்கமாட்டோம்" என்று இரானின் விமானப்போக்குவரத்து அமைப்பின் தலைவர் அலி அபெட்ஸாதே தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
"இந்த விமான விபத்து குறித்து இரானின் விமானப்போக்குவரத்து ஆணையம் ஆய்வு செய்யும். இதில் உக்ரேனிய அதிகாரிகளும் பங்கேற்கலாம்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கனடாவை சேர்ந்த 63 பேர் இந்த விமான விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில், "தேவையான வழிகளில் உதவுவதற்கு தயாராக உள்ளோம். இந்த விசாரணையில் நாங்களும் பங்கெடுப்போம் என்று எதிர்பார்க்கிறோம்" என்று அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கு வெற்றி, யாருக்கு தோல்வி?
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது.
ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்ற அக்கட்சிக்கு இது பின்னடைவு என்று ஒரு தரப்பும் ஆளும் கட்சியான அ.தி.மு.கவுக்குத்தான் பின்னடைவு என்று ஒருதரப்பும் விவாதிக்கின்றன.
இந்தத் தேர்தல் முடிவுகளை எப்படிப் புரிந்துகொள்வது?
விரிவாக படிக்க: தமிழக உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கு வெற்றி, யாருக்கு தோல்வி?
தர்பார்: ரஜினி அரசியல் நுழைவுக்கு கட்டியம் கூறும் படமா?
ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் நாளை வெளியாகிறது. அரசியலில் இறங்கும் தமது ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அவ்வப்போது அரசியல் கருத்துகளை ரஜினி வெளியிட்டு வரும் நிலையில், இந்தப் படம் கவனிக்கப்படுகிறது.
ஆனாலும் இவ்வளவு அதிக கவனத்தை இந்தத் திரைப்படம் பெறுவதன் பின்னணி என்ன?
"இரானுக்கு அணு ஆயுதங்கள் கிடைக்காது" - டிரம்ப் உறுதி
2015ம் ஆண்டு இரானுடன் 6 வளர்ந்த நாடுகள் செய்து கொண்ட அணு ஒப்பந்தத்தை ஐரோப்பிய நாடுகளும், பிற நாடுகளும் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
இரான் தளபதி காசெம் சுலேமானியை இராக்கில் வைத்து அமெரிக்கா படுகொலை செய்தது, அதைத் தொடர்ந்து இன்று இராக் நாட்டில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது இரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் ஆகியவற்றின் பின்னணியில் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
விரிவாக படிக்க: “இரானுக்கு அணு ஆயுதங்கள் கிடைக்காது” – டிரம்ப் உறுதி
தாக்கப்பட்ட மாணவர்களை சந்தித்த கனிமொழி
ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்துப் பேசினார் திமுக எம்.பி. கனிமொழி.
தாக்குதலில் காயமடைந்த மாணவர்களுக்கும், கட்டண உயர்வுக்கு எதிராக அவர்கள் நடத்தும் போராட்டத்துக்கும் தமது ஆதரவையும் அவர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: