அமெரிக்க ராணுவ தளம் மீது இரான் தாக்குதல்: "அமெரிக்கர்களுக்கு பாதிப்பில்லை" - டிரம்ப்

இரான்

பட மூலாதாரம், Getty Images

இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது இரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்கள் யாருக்கும் பாதிப்பில்லை என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து அவர் தற்போது உரையாற்றி வருகிறார்.

முன்னதாக, "பிராந்தியத்திலிருந்து அமெரிக்கா படைகள் அனைத்தையும் வெளியேற்றுவதே காசெம் சுலேமானீ கொலை செய்யப்பட்டதற்கான கடைசி பதில்," என இரான் அதிபர் ஹசான் ருஹானி தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

நேற்று இரவு இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்தளங்களின் மீது இரான் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ருஹானி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுய கட்டுப்பாடு வேண்டும்: துருக்கி, ரஷ்யா வலியுறுத்தல்

விளாதிமிர் புதின் - ரிசெப் தாயிப் எர்துவான்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, விளாதிமிர் புதின் - ரிசெப் தாயிப் எர்துவான்

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் இருவரும் அமெரிக்கா - இரான் இரு நாடுகளும் சுய கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

மாற்றி மாற்றி தாக்கிக் கொள்வது, ஸ்திரமற்ற நிலை ஒரு சுழலாகத் தொடரும் நிலைக்கு கொண்டு செல்லும் என்று அவர்கள் ஒரு கூட்டு அறிக்கையில் கூறியுள்ளனர்.

இந்த பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இறுக்கத்தை தளர்த்த எங்களுக்குள்ள விருப்பத்தை வெளிப்படுத்துகிறோம். அனைத்து தரப்புகளும் சுய கட்டுப்பாட்டுடன், அறிவுடன் நடந்துகொள்ளவேண்டும். பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடந்த ஒரு சந்திப்புக்குப் பிறகு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

ஏவுகணை தாக்குதலைக் கண்டித்த இராக்

இராக்கில் உள்ள இரு அமெரிக்க நிலைகள் மீது இரான் நடத்திய ஏவுகணை தாக்குதலை இராக் அதிபர் பர்ஹம் சாலே கண்டித்துள்ளார். மீண்டும் மீண்டும் தங்கள் அரசின் இறையாண்மை மீறப்படுவதையும், சண்டையிடும் இரு தரப்பின் போர்க்களமாக இராக்கை மாற்றுவதையும் தாங்கள் மீண்டும் நிராகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

`பிரிச்சனையை முடிக்க விரும்பும் இரான்`

இந்த தாக்குதல் மூலம் நடைபெற்று வரும் பிரச்சனைக்கு இரான் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறது என்கிறார் பிபிசி மத்திய கிழக்கு பிரிவு ஆசிரியர் ஜெர்மி போவன்.

மேலும் அவர் தெரிவிப்பது: இந்த ஏவுகணை தாக்குதல் குறித்து தொலைக்காட்சியில் கேட்டவுடன் இரான் மக்கள் உற்சாக குரல்களை எழுப்பினர். காசெம் சுலேமானீ கொலை செய்யப்பட்டதற்கான பழிவாங்கல் குறித்துதான் நாட்டில் பேசப்பட்டு வந்தது மேலும் விரைவில் பழிவாங்கப்படும் எனவும் இரான் தெரிவித்திருந்தது.

ஆனால் நேற்று இரவு நடத்தப்பட்ட தாக்குதல் பெரிய அளவிலான தாக்குதல் இல்லை. பெரிய தாக்குதல் ஒன்றுக்கு அதைவிட பெரிய தாக்குதல் மூலம் பதலடி கொடுக்கப்படும் என்ற அமெரிக்காவின் அச்சுறுத்தல் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது என்று தெரிகிறது.

இரானின் அதிஉயர்தலைவர் அயதுல்லா கமேனி, இது அமெரிக்காவுக்கான `அறை` என்றும், வரும் காலத்தில் அமெரிக்காவை இந்த பிராந்தியத்திலிருந்து வெளியற்றவே இரான் விரும்புகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இரான் இந்த முடிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறது என்பது போலவே தெரிகிறது.

’இரான் தற்காப்பு முயற்சியாக முடிவான ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது,’ என இரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் சரிஃப் தெரிவித்துள்ளார்.

அவரின் வார்த்தைகள் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்றே சொல்லலாம். அவர் முடிவான நடவடிக்கை என்று கூறியதன் மூலம் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க இரான் விரும்புகிறது என்றே தெரிகிறது. மேலும் தற்காப்பு என்று சொல்வதன் மூலம் அமெரிக்காவை போல் அல்லாமல் தாங்கள் சர்வதேச சட்டத்தை மதிக்கிறது என்பதை காட்டுகிறது.

ஆனால் தற்போது எழுந்துள்ள அடுத்த கேள்வி இரான் அரசின் ஆதரவாளர்கள் திருப்தி அடைவார்களா என்பதும், டிரம்ப் அடுத்த என்ன செய்யப்போகிறார் என்பதும்தான்.

இராக்

பட மூலாதாரம், Getty Images

முன்னதாக எச்சரிக்கை

ஜெனரல் காசெம் சுலேமானீயை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது இரான் தாக்குதல் நடத்தியது தொடர்பாக தங்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது என இராக் பிரதமர் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமையன்று, நள்ளிரவில் இரானிடமிருந்து எச்சரிக்கை வந்ததாக இராக்கின் பிரதமர் அடேல் அப்துல் மஹடி தெரிவித்தார்.

காசெம் சுலேமானீயை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரான் தாக்குதலை நடத்தியது அல்லது நடத்தப்போகிறது என அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அந்த தாக்குதல் அமெரிக்க படைகள் இருக்கும் இடங்களில் மட்டுமே நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டதாக அடேல் தெரிவிக்கிறார்.

ஆனால் எந்த இடத்தில் என்பது குறிப்பிடவில்லை. அதே நேரம், அல் அசாத் விமானத் தளம் மற்றும் இர்பில் மாகாணத்தில் உள்ள ஹரிர் விமானத் தளம் ஆகியவற்றில் ஏவுகணைகள் பறப்பதாக அமெரிக்கா தெரிவித்தது என்றும் அவர் கூறுகிறார்.

இந்த நெருக்கடி, இராக்கை மட்டுமல்ல, அந்த பிராந்தியத்தையும், உலகையும் பெரும் போருக்கு அழைத்துச் செல்லும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன், பிரான்ஸ் கண்டனம்

போரிஸ் ஜான்சன்

பட மூலாதாரம், EPA

இரான் நடத்திய தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இரான் இவ்வாறான `பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான` தாக்குதல்களை மீண்டும் தொடரக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் இரானின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பதட்டத்தை குறைப்பதே தற்போது முக்கியம் என தெரிவித்துள்ளார்.

இரானுக்கு சிரியா ஆதரவு

சிரியாவின் வெளியுறவு அமைச்சர் இரானுக்கு தங்களின் முழு ஆதரவு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது இரானின் உரிமை என சிரியாவின் செய்தி முகமையான சனாவில் வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அமெரிக்காவின் பொறுப்பற்ற கொள்கைகள் மற்றும் அராஜக மனநிலையே இதற்கு காரணம்," என சிரியா தெரிவித்துள்ளது.

இலங்கையில் அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

கொளும்புவில் உள்ள அமெரிக்கா தூதரகம், மத்திய கிழக்கில் நிலவி வரும் பதட்ட சூழலால் வெளிநாடுகளில் உள்ள தங்களின் குடிமக்களின் பாதுகாப்பில் ஆபத்து ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.

இரான் நடத்திய தாக்குதலும், பயண எச்சரிக்கையும்

அமெரிக்க விமானத்தளம் மீது இரான் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

இராக்கில் இரண்டு அமெரிக்க ராணுவ தளங்கள் மீது டஜனுக்கும் மேலான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் இரான் நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக இரான் மற்றும் இராக் நாடுகளுக்கு தங்கள் நாட்டினர் செல்வதற்கு உலக அளவில் பல நாடுகளும் பயண எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

போர் பதட்டம் காரணமாக இரான் மற்றும் இராக் வான் பகுதியில் விமானங்களை இயக்க வேண்டாம் என்று விமான சேவை நிறுவனங்களுக்கு பல நாடுகளும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.

இராக்கில் தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும்வரை இராக்கிற்கு மிகவும் முக்கியமில்லாத பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டுமென்று இந்திய குடிமக்களை இந்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இராக்கில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும், அந்த நாட்டின் உள்ளே பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டுமென்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

இரான் மற்றும் இராக் வான்வெளி வழியாக பறக்கும் விமானங்களின் பாதையையும் இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் மாற்றியுள்ளன.

இந்த தாக்குதல்களின் எதிரொலியாக, இரான், இராக், பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளின் வான்வெளியில் பறப்பதற்கு கிளம்பும் அமெரிக்க சிவில் விமான நிறுவனங்களுக்கு அந்நாட்டின் பெடரல் விமான நிர்வாக அமைப்பு தடை விதித்துள்ளது.

அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல்கள் நடந்ததையடுத்து, தனது கடற்படை மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்களை அப்பகுதியில் பிரிட்டன் அரசு நிலைநிறுத்தியுள்ளது.

இதனிடையே இந்த தாக்குதல்களில் மொத்தம் 22 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இராக் ராணுவம் தெரிவித்துள்ளது.

அல் அசாத் ராணுவ தளம் மீது ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகள் செயலற்று கீழே விழுந்துவிட்டதாக இராக் ராணுவம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இராக்கில் குறைந்தது இரண்டு அமெரிக்க விமானத்தளங்கள் மீது டஜனுக்கும் மேலான கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை இன்று (புதன்கிழமை) காலையில் தெரிவித்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின்படி, அண்மையில் பாக்தாத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரானின் முக்கிய தளபதி காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இரான் நாட்டு அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது.

காசெம் சுலேமானீயின் இறுதிச்சடங்கு நடைபெற்ற சில மணிநேரத்திலேயே, உள்ளூர் நேரப்படி புதன்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.

அல்-அசாத் மற்றும் இர்பிலில் குறைந்தது தங்களின் இரண்டு நிலைகள் மீது தாக்குதல் நடந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அலுவலகமான பென்டகன் அமைப்பு கூறியுள்ளது.

ஏவுகணை தாக்குதல் குறித்து இரான் அரசு தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட படம் இது

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, ஏவுகணை தாக்குதல் குறித்து இரான் அரசு தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட படம் இது

அல்-அசாத் விமானதளத்தின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

''இராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடந்ததாக வரும் செய்திகள் குறித்து எங்களுக்கு தெரியும். இது குறித்த தகவல்கள் அதிபர் டிரம்புக்கு விவரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலை உன்னிப்பாக கண்காணித்து வரும் அதிபர், நாட்டின் தேசிய பாதுகாப்பு குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்'' என்று வெள்ளை மாளிகையின் பெண் செய்தி தொடர்பாளரான ஸ்டாபானி கிரிஷம் ஓர் அறிக்கையில் இந்த தாக்குதல் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று டிரோன் விமான தாக்குதலில் இரானின் முக்கிய தளபதி காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதற்கு பதிலடிதான் இந்த தாக்குதல் என்று இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவு தெரிவித்துள்ளது.

பிபிசி பாதுகாப்பு விவகார செய்தியாளர் ஜோனதன் மார்கஸ் சொல்வது என்ன?

ஜெனரல் சொலேமனிக்குள்ள முக்கியத்துவம் மற்றும் அவரை கொன்றதால் ஏற்பட்ட பதற்றம் ஆகியவற்றை பொருத்து பார்த்தால் அமெரிக்காவில் இருக்கும் இராக் தளத்தில் இரான் ராணுவம் நடத்திய தாக்குதல் மிதமான ஒரு பதிலடி என்றே சொல்லலாம்.

இந்த தாக்குதல் மூலம் சில உயிரிழப்புகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர் என்பது தெரிகிறது.

இரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளுமே ஒரு பெரிய சண்டையை விரும்பவில்லை என்பதே தெரிகிறது.

இதுதான் இரானின் பதிலடியா என்பதும் நம்மால் தற்போது சொல்லமுடியாது.

1979க்குப் பிறகு நேரடித் தாக்குதல்

1979-ம் ஆண்டு இரான் தலைநகர் டெஹ்ரானில் அமெரிக்கத் தூதரகம் முற்றுகையிடப்பட்ட பிறகு, அமெரிக்கா மீது இரான் நேரடியாகத் தொடுக்கும் தாக்குதல் இது.

சுலேமானீ இறுதிச்சடங்கு

பட மூலாதாரம், EPA

''அமெரிக்காவின் பயங்கரவாத ராணுவத்துக்கு தங்களின் படைத்தளங்களை தந்துள்ள அதன் நேச நாடுகள் அனைத்தையும் நாங்கள் எச்சரிக்கிறோம். இரான் மீதான வலிய தாக்குதல் நடவடிக்கைகளுக்கு ஆரம்ப புள்ளியாக அமையும் எந்த ஒரு பிராந்தியத்தின் மீதும் குறி வைக்கப்படும்'' என்று இரானின் அரசு செய்தி முகமையான ஐஆர்என்ஏ ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காசெம் சுலேமானீயின் இறுதிச்சடங்கு நடைபெற்ற சில மணிநேரத்திலேயே இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. அல்-அசாத் தளத்தின் மீது தாக்குதல் நடந்ததற்கு சற்று நேரத்திலேயே இர்பில் பகுதியில் உள்ள அமெரிக்க விமானத்தளம் மீது ஷெல் குண்டு தாக்குதல் நடத்துள்ளதாக அல் மாயாதீன் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள் முழுவதிலும் இரான் செல்வாக்கு அதிகரிக்க முக்கிய காரணமாக விளங்கியவர் காசெம் சுலேமானீ. மேலும் அந்நாட்டின் அதிஉயர் தலைவரான அயதுல்லா காமெனிக்கு அடுத்ததாக இரண்டாவது அதிகாரமிக்க நபராக சுலேமானீ விளங்கினார்.

காசெம் சுலேமானீ

பட மூலாதாரம், EPA

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இரானுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை டிரம்ப் எடுத்தார். அதற்கு இரானும் தனது பாணியில் பதிலளித்தது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் இராக்கில் இயங்கி வரும் இரானிய ஆதரவு பெற்ற ஆயுதக்குழு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பதற்றம் மேலும் அதிகரித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: