’கிரேட்டா துன்பெர்க் அட்லாண்டிக்கை கடக்க நான் ஏன் உதவி செய்ய விரும்பினேன்?’

- எழுதியவர், மைக்கெல் பேக்ஸ்
- பதவி, நியூஸ்பீட் செய்தியாளர்
How Dare You? என்ற ஒற்றை ஆவேச கேள்வியால் உலகத் தலைவர்களை அதிர வைத்தவர் இளம் சூழலியல் செயற்பாட்டாளரான கிரேட்டா துன்பெர்க். இந்த கட்டுரை அவரை பற்றியதுதான். நிகழ்வு ஒன்றுக்காக பங்கேற்க சென்றவர் கடைசி நிமிடத்தில் நிகழ்வு நடைபெறும் இடம் மாற்றப்பட பெரும் சிக்கலுக்கு ஆளானார்.
அமெரிக்கா மற்றும் சிலியில் நடைபெறும் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடுகளில் கலந்து கொள்ள, கார்பன் உற்பத்தி இல்லாத பயண முறையாக படகு பயணத்தின் மூலம் 14 நாட்களில் அட்லாண்டிக் கடலைக் கடந்துள்ளார் கிரேட்டா துன்பெர்க்.
ஆனால், கடைசி நேரத்தில் அரசியல் கிளர்ச்சி காரணமாக, சிலியில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி ஸ்பெயினுக்கு மாற்றப்பட்டது.
தன்னை திரும்ப ஐரோப்பாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று படகை இயக்குபவர்களை அவர் கேட்டுக் கொள்ள வேண்டியதாயிற்று - அதை சீக்கிரம் செய்ய வேண்டியதாயிற்று.
அப்போது தான் நிக்கி ஹென்டர்சன் உதவிக்கு வந்தார்.
``உண்மையில் கிரேட்டா பற்றி பார்த்து தெரிந்து கொள்வதற்காக நான் உதவி செய்தேன். அவர் என்ன விஷயத்துக்காகக் குரல் கொடுக்கிறார் என்பதை அறிந்ந்து, கற்றுக் கொள்வதற்காக அவ்வாறு செய்தேன்'' என்று பிரிட்டனைச் சேர்ந்த 26 வயதான கடலோடியான நிக்கி , ரேடியோ 1 நியூஸ்பீட் பிரிவிடம் தெரிவித்தார்.
கிரேட்டாவை திரும்ப ஐரோப்பாவுக்கு அழைத்துச் செல்லும் தங்களுடைய பாய்மரப் படகு பயணத்தில் இணையுமாறு ஆஸ்திரேலிய யூடியூப் உறுப்பினர்கள் ரிலே ஒயிட்லம் மற்றும் எலவ்னா கராவ்சு ஆகியோர் அழைப்பு விடுத்தபோது நிக்கி பிரிட்டனில் இருந்தார்.

பட மூலாதாரம், NIKKI HENDERSON
இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில் அவர்களை சந்திக்க விமானத்தில் செல்வதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லாமல் போனது. கார்பன் உற்பத்தி இல்லாத பயணமாக அமைய வேண்டும் என்பது தான் நோக்கமாக உள்ள நிலையில், அவருடைய இந்த முடிவு விமர்சிக்கப்பட்டது.
``இயல்பான நிலை இருந்திருந்தால், நான் கடல் வழியாகச் சென்றுவிட்டு திரும்பி வந்திருப்பேன்'' என்று அந்தப் பெண் தெரிவித்தார்.
``ஆனால் இது பெரிதும் அடையாளபூர்வமான பயணம். உலகிற்கு நல்ல முன்னுதாரணத்தை உருவாக்கிக் காட்ட கிரேட்டா விரும்பினார்.''
``எப்படி பயணிக்க வேண்டும் என்று அவர் யாரிடமும் சொல்லவில்லை. தங்கள் வாழ்வை எப்படி வாழ வேண்டும் என அவர் கூறவில்லை'' என்று நிக்கி தெரிவித்தார்.
`மின்னல்கள் நிறைந்த சூறாவளியில் இரவுகளைக் கழித்தோம்'
எனவே, நிக்கி, கிரேட்டா, கிரேட்டாவின் தந்தை ஸ்வன்ட்டே, ரிலே ஒயிட்லம்,எலவ்னா , அந்தத் தம்பதியின் குழந்தை லென்னோன் ஆகியோர் அமெரிக்காவில் வெர்ஜினியாவில் இருந்து கடல் பயணத்தை நவம்பர் 13 ஆம் தேதி தொடங்கினர். 48 அடி நீளம் கொண்ட படகில் அவர்கள் சுமார் மூன்று வாரங்களைக் கழித்தனர்.
``மிகவும் குறைவான இடவசதியில் நாங்கள் நிறைய நேரத்தை ஒன்றாக செலவழித்தோம்'' என்று நிக்கி தெரிவித்தார்.
``பெரும்பாலும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம். வெளியில் அமர்ந்து நிறைய பேசினோம். குழந்தை லென்னியை நாங்கள் நன்றாக கவனித்துக் கொண்டோம்.''
ஆனால் குளிருக்கு இடையில் அட்லாண்டிக்கை கடப்பது எளிதானதாக இல்லை. வானமே கூரையாக உள்ள நிலையில், இரவு உணவுகளை முடிப்பதும் எளிதாக இல்லை.

பட மூலாதாரம், Getty Images
``இரண்டு இரவுகள் கடும் மின்னல்கள் நிறைந்ததாக இருந்தது. அற்புதமாக இருந்தாலும், மிகுந்த பயம் தருவதாகவும் இருந்தது'' என்றார் நிக்கி.
``இரண்டு முறை மின்னல் கீற்றுகள் நீரில் பட்டு, படகிற்கு நெருக்கத்தில் தாக்கின. அவை பதற்றமான இரவுகளாக இருந்தன. பெரும்பாலும் மற்றவர்கள் ஜன்னல்கள் வழியே வெளியில் பார்த்து `வாவ்' என்று கூறி ரசித்துக் கொண்டிருந்தனர்.''
`கிரேட்டா உண்மையிலேயே மிகவும் தைரியசாலி'
தொழில்முறை கடலோடி என்ற வகையில், எதிர்பாராத விஷயங்களை சமாளிக்க எப்படி ஆயத்தமாக இருக்க வேண்டும் என்பதை நிக்கி அறிந்துள்ளார். ஆனால், இதுபோன்ற வானிலையில், 40 கடல் மைல் வேத்தில் வீசும் காற்று, ஐந்து மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் எழும் அலைகள் என்பவை ``உண்மையில் பதற்றத்தை ஏற்படுத்துபவை'' என்றார் அவர்.
இருந்தபோதிலும், இதுபோன்ற அனுபவங்கள், கிரேட்டாவை பற்றி அதிகம் அறிந்து கொள்ள உதவின.
``குளிரான நிலையில் அட்லாண்டிக்கை கடப்பதற்கு மனோ திடம் உள்ளவராக இருக்க வேண்டும் - அவர் உண்மையிலேயே ரொம்ப தைரியசாலி'' என்று நிக்கி கூறினார்.
``எங்களுடன் பயணம் மேற்கொண்டதற்காக அவருக்கும், அவருடைய தந்தைக்கும் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அது மிகவும் தைரியமான பயணம்.''
``இதை தங்களுக்காக அவர்கள் செய்யவில்லை. ஒரு தகவலை உலகிற்குத் தெரிவிப்பதற்காக இவ்வாறு செய்தார். அது மிகவும் தன்னலமற்ற பணி என்று உணர்ந்தேன்.''
கடலில் சுமார் 19 நாட்கள் அவருடன் கழித்துள்ள நிக்கி, கிரேட்டாவை ``நட்புணர்வு கொண்டவர், அமைதியானவர், அன்பானவர்'' என்று வர்ணித்தார். அவர் ஏன் அவ்வளவு ``கவனத்தை ஈர்க்கும்'' தன்மை கொண்டவராக இருக்கிறார் என்பதை கற்பித்த அனுபவமாக இது இருந்தது என்று அவர் கூறினார்.

``அவரை தனிப்பட்ட முறையில் அறிந்து கொண்டால், உரையாற்றும் மேடையில் அவரை நீங்கள் பார்த்தால் அல்லது நாடாளுமன்ற அவையில் உரையாற்றியதை பார்த்தால், அவருடைய ஆர்வம் எங்கிருந்து வந்தது என்பதை அறியலாம்'' என்று நிக்கி தெரிவித்தார்.
``தான் வலியுறுத்த விரும்பும் விஷயத்தில் நேர்மையாக, உறுதியாக, உண்மையாக இருப்பதால் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார்'' என்றார் அவர்.
கிரேட்டாவுடன் டிசம்பர் 3 ஆம் தேதி நிக்கி லிஸ்பனை அடைந்தார்.
அவர்களுடைய படகு போர்ச்சுக்கல், லிஸ்பன் நகரை டிசம்பர் 3 ஆம் தேதி சென்றடைந்தது. அது ``வித்தியாசமான கலாச்சார அதிர்ச்சி'' அனுபவமாக இருந்தது என்று நிக்கி கூறினார்.
``கடலில் மிகவும் எளிமையான உணவு சாப்பிடுவோம். மது எதுவும் அருந்த மாட்டோம். வேறு வாய்ப்புகள் இல்லாத அல்லது குளிக்க வாய்ப்பில்லாத சூழ்நிலையில் மிக எளிமையாக வாழ்வோம்'' என்றார் அவர்.
``நிறைய மக்களைப் பார்ப்பது என்பது கலாசார அதிர்ச்சியாக இருந்தது. நேற்று நாங்கள் இறங்குதளத்திற்கு வந்தபோது, அங்கே பல்லாயிரக்கணக்கான பேர் இருந்தனர்.''
`என்றென்றும் தொடர்பில் இருப்போம் என நம்புகிறேன்'
நிலத்திற்கு வந்ததும் கிரேட்டாவும் நிக்கியும் மாட்ரிட் செல்கின்றனர். ஆனால் படகை இயக்கியவர்களுடன் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள், தங்களை வாழ்நாள் நண்பர்களாக்கியுள்ளது என்று அவர் நம்புகிறார்.
``பெருங்கடல் பகுதியைக் கடக்கும் ஒரு பயணத்தில், வேறு எந்த சூழ்நிலையிலும் உருவாக்க முடியாத வலுவான உறவுகளை ஏற்படுத்திவிடுகிறது.''
``எனக்கு நான்கு மிக நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். என்றென்றும் அவர்களுடன் தொடர்பில் இருப்பேன் என்பதில் உறதியான நம்பிக்கை உள்ளது'' என்று அவர் கூறினார்.
நிக்கி ரயில் மூலம் பிரிட்டனுக்கு திரும்பிச் செல்கிறார்.
அட்லாண்டிக்கை கடல் பயணமாக பலரும் கடக்க முடியாத நிலையில், தங்களுடைய பயணத்தில் கற்றுக் கொள்ள நிறைய பாடங்கள் இருந்தன என்று நிக்கி நம்புகிறார்.
``அட்லாண்டிக்கில் பயணிப்பது சாத்தியமானது என்பதை நாங்கள் காட்டியுள்ளோம். ஒவ்வொரு நாள் வாழ்விலும், சாத்தியமான தீர்வுகள் உள்ளன என்பதையும் காட்டியுள்ளோம்'' என்று அவர் தெரிவித்தார்.
நீங்கள் ஒன்றாக உழைத்தால், சில விஷயங்களை விட்டுக்கொடுத்தால், இயற்கையுடன் இணைந்து பணியாற்றினால் எதையும் சாதிக்கலாம் என்ற நிச்சயமான தகவலை நாங்கள் தெரிவித்திருக்கிறோம்.''
``ஒரு விஷயத்தைச் செய்வதற்கு நீங்கள் தயாராக இருந்தால், உண்மையிலேயே குறிப்பிடத்தக்க வகையில் அதை சாதிக்க முடியும்'' என்றும் அவர் கூறினார்.
பிற செய்திகள்:
- சௌதி உணவகங்களில் இனி ஆண் - பெண் தனித்தனி நுழைவாயில் தேவையில்லை
- டெல்லி தீ விபத்து: "4 பேரை காப்பாற்றினேன்; ஆனால் சகோதரனை மீட்க முடியவில்லையே..."
- சீனாவின் ஏற்றுமதி மீண்டும் சரிவு: அமெரிக்க வர்த்தகப் போர் நீடிப்பதன் விளைவு
- உன்னாவ் வழக்கு: நட்பு, திருமணம், பாலியல் வல்லுறவு மற்றும் எரித்துக் கொலை - நடந்தது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












